வ. ராமசாமி
தமிழில் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் வ. ரா என்ற வ. ராமசாமி ஐயங்கார். பாரதியாராலேயே 'உரை நடைக்கு வ. ரா' என்று பாராட்டப் பெற்றவர். தமிழ் உரை நடை உலகில் தனிச்சிறப்பு மிக்கவர். சமூகச் சீர்திருத்த ஈடுபாடு, தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பகுத்தறிவு வாத அரசியலாளர்களிடமும், நாட்டுப் பற்றுக் காரணமாக காங்கிரஸ் தலைவர்களிடமும் ஒரே சமயத்தில் பாராட்டுப் பெற்றிருந்தவர் வ.ரா.

இவர் தஞ்சை மாவட்டத்தில் திருப் பழனத்திற்கு அருகில் திங்களூர் என்னும் சிற்றூரில் 17.09.1889 இல் பிறந்தார். வ.ரா. மூத்தபிள்ளை. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தேர்ச்சி மிக்கவராக வளர்ந்தார். 1905 இல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தஞ்சை புனித பீட்டர் கல்லூரியில் சேர்ந்து எ·ப்.ஏ. பயின்றார். ஆனால் இத்தேர்வில் தோல்வியுற்றார். மனங்கலங்கினார். பின்னர் கல்கத்தாவில் சென்று படிக்க விரும்பினார். கல்லூரியில் சேர இயலாமல் திரும்பினார்.

வ. ரா. கல்லூரியில் படிக்கும் பொழுதே வந்தே மாதரம் முழக்கமிட்டு வந்தவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட மனம் பின்னர் முழுமையாக விடுதலைப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. கல்வியை இடையில் நிறுத்திக் கொண்டு விடுதலைக்காக உழைத்தலே தனது பணியெனக் கருதிச் செயற்பட்டார். மகாகவி பாரதியாரைச் சந்தித்து உரையாடிய பெருமையும் இவருக்கு உண்டு. வ. ரா. வின் வாழ்க்கையில் பாரதி சந்திப்பு ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு கொண்டார். விடுதலை பற்றிய சிந்தனை விகசிப்பு வ. ரா. வை புடம் போட்டு வளர்த்தது. வ. ரா. வின் சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தம் குறித்ததாக இருந்தன. தண்டனை பெற்றுச் சிறைக்குச் சென்றார். ஆறுமாத காலம் தண்டனை அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின் தீவிரவாத அரசியலில் இருந்து மிதவாத அரசியலுக்குத் திரும்பினார். வ. ரா. பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியர், உதவி ஆசிரியர் நிலைகளில் பணியாற்றினார். இலங்கையில் கொழும்புவுக்குச் சென்று வீரகேசரி பத்திரிகையிலும் சிலகாலம் பணியாற்றினார்.

வீரகேசரியில் பணியாற்றிய போது பஞ்சாபியைத் தாய் மொழியாகக் கொண்ட புவனேசுவரி என்பவரைத் தனது நாற்பதாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமத்துவ உணர்வு அவரிடம் இயல்பாகப் பீறிட்டு வந்தது. ஆரம்பத்திலேயே தனது பூணூலை எடுத்துவிட்டு எந்த அடையாளமும் இன்றி மனித சமுதாயத்தில் சமத்துவம் உருவாக்கப்பட வேண்டுமென்பதற்காகத் தனது சொல்லையும் செயலையும் பயன்படுத்தியவர்.

உரைநடையில் வ. ரா. ஒரு புது அத்தியாயமே படைத்தார். கட்டுரை, நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, நடைச் சித்திரம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கினார். இவ்வாறு எழுதிய எழுத்துக்களின் ஒட்டுமொத்தமான மையச் சரடு தான் 'வ.ரா.' என்ற ஆளுமையை நமக்கு இனங்காட்டுகிறது. வ. ரா. வின் சிந்தனைக்கும் புதுமைக்கும் ஈடுகொடுத்தது உரைநடைதான். தமிழின் நவீனத்துவம் கவிதையில் பாரதியுடனும் உரைநடையில் வ. ரா. வுடனும் தொடங்கியது எனக் கூறலாம்.

பாரதியாரைப் பற்றி அவருடன் பழகி எழுதப்பட்ட ஆதாரபூர்வமான நூல் என்ற பெருமைக்குரியது. வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற நூலாகும். தமிழின் மறு மலர்ச்சிக்கு பாரதி, வ. ரா. இருவரது ஆளுமையும் புலமையும் புதுத்தடம் அமைத்தது.

வ. ரா. நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியங்களைத் தந்துள் ளார். 'கற்றது குற்றமா?' என்ற தொகுப்பில் நான்கு கதைகள் உள்ளன. தவிர பல கதைகள் எழுதியுள்ளார். அவை 'சுந்தரி' (1917) 'விஜயம்' (1944), 'சின்னச் சாம்பு' (1942) 'கோதைத்தீவு' (1945) என்ற நான்கு நாவல்களும் எழுதி யுள்ளார். அக் காலகட்டத்துக்கு வேண்டிய நடைமுறை புரட்சிகர மாற்றத்துக்கான விதைகளை விதைத்தார்.

சாதி வேறுபாடு, வர்க்க வேறுபாடு, உழைப்பின் பெருமை, போலி ஆசாரம் பேசும் பிராமணர்களின் வாழ்க்கை முறை அடிமைப்பட்ட இந்திய வாழ்க்கை மூடநம்பிக்கைகள் எனப் பல்வேறு நிலைகளில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை இவரால் காட்டப்படுகிறது.

'கோதைத்தீவு' படைப்பில் பெண்ணுக்கு ஏற்றமும் மதிப்பும் தராத சமூகத்தின் சீர்கேடுகளை அந்த நாளில் மிகுந்த துணிச்சலுடன் விமரிசன நடப்பியல் முறையில் வ. ரா. படைத்திருப்பது பெரும் சாதனை. சுதந்திரப் போராட்டக் கருத்தாடலின் நீட்சியாகவே 'கோதைத் தீவு' வெளிப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சொத்துரிமையும் நாட்டை ஆளும் உரிமையும் கிடைத்தால் நாடு சிறப்பாக இருக்கும் என்பதை இந்நாவலில் படைத்துள்ளார்.

வ. ரா. வின் சிறுகதைகள் உள்ளடக்க ரீதியில் வலிமையாக, வடிவ ரீதியில் இன்னும் செம்மைப்பட வேண்டிய ரீதியில் தான் இருந்தன. அதே நேரம் சி.சு. செல்லப்பா "சிறுகதையின் செறி வான கட்டுக்கோப்பு மிக்க தன்மையை உணர்ந்து எழுதியவர்" என்று பாராட்டு கின்றார். எவ்வாறாயினும் வ. ரா. வின் படைப்புகள் இன்று மீள் வாசிப்புக்கு உள்ளாகும் பொழுது அவை இன்னும் கூட விரிவான ஆய்வு வேண்டிய படைப்புக்களமாகவே உள்ளன என்பது தெளிவாகும்.

தமிழின் உரைநடை நிலைபேறாக்க வளர்ச்சியில் வ. ரா என்றும் மதிக்கப் படுபவராகவே உள்ளார். தமிழின் மறுமலர்ச்சி எழுத்தாள பரம்பரை உருவாக்கத்துக்கும் ஊக்கியாகவே வ. ரா. இருந்துள்ளார்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com