சுவாமி சுகபோதானந்தாவின் அமெரிக்கப் பயணம்
'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வாழ்வியல் பயிலரங்குகள் 2004 ஜூலை மாதம், சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி மற்றும் நியூ ஜெர்சி நகரங்களில் நடைபெற்றன. அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சுவாமிஜி அவர்கள் சிகாகோவில் நடந்த அமெரிக்கத் தெலுங்கு கழகத்தின் (American Telugu Association) விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

சுவாமி சுகபோதானந்தா அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்ற தொடர், புத்தக வடிவில் தமிழ் நாட்டில் மிக அதிகப் பிரதிகள் விற்பனையாவதோடு மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு விற்பனையில் வரலாறு படைத்து வருகிறது.

சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிலரங்கு ஜூலை 10, 2004 அன்று சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியிலுள்ள கேம்பெல் நகரின் சமூக நலக்கூடத்தில் (Community Center) நடைபெற்றது. 'நாம் வாழ்வுக்கு வயதைக் கூட்டுகிறோமா இல்லை வயதுக்கு வாழ்வைக் கூட்டுகிறோமா?' (Are you adding years to your life or life to your years?) என்ற தலைப்பில் அமைந்திருந்தது பயிலரங்கு.

சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வருகை தந்த சுவாமி சுகபோதானந்தாவின் போதனைகள் (சத்சங்கங்கள்) அவர்தம் மாணவர் இல்லங்களில் மாலை வேளைகளில் நடைபெற்றன. அவரது போதனைகள் பெரும்பாலும் கேள்வி-பதில் என்ற முறையில் அமைந்திருந்தன. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், முதலாளி-தொழிலாளி என்று பல்வேறு உறவுகளையும் பலப்படுத்துவதற்கு சத்சங்கங்களில் சுவாமிஜி கொடுத்த ஆலோசனைகள் நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருந்தன.

சுவாமிஜி அவர்கள், மாணவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, புதுமையான வகையில் இயற்கையுடன் கலந்த மற்றொரு பயிலரங்கை 'பிக் பேஸின்' (Big Basin) மலைப்பகுதியில் கடந்த ஜூலை 24, 2004 அன்று நடத்தினார். மாணவர்களுடன் மலையேறி ஆங்காங்கே ஓய்வு எடுக்கும் பொழுது கருத்துப் பரிமாறல் என்றமைந்த இப்பயிலரங்கம் மிகவும் வித்தியாசமாக அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்வதாக இருந்தது. மலையேறியிறங்கி அளவளாவிய பின் 'நம் அன்றாட உறவுகளில் ஏற்படும் கருத்து வித்தியாசங்களை எப்படிச் சரி செய்வது?' என்பது பற்றி அனைவரும் தத்தம் எண்ணங்களை சுவாமிஜியுடன் பகிர்ந்தனர். மற்றவரை நன்றாகப் புரிந்து கொண்டு அவருடன் நமக்குள்ள வேற்றுமையில் அல்லாது ஒற்றுமையில் கவனம் செலுத்தினால் உறவுகளில் ஏற்படும் பிளவுகள் எளிதில் மறையும் என்ற சுவாமிஜியின் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர்.

இந்தியாவில் வெளியாகும் 'The Week' பத்திரிக்கையினால், இந்தியாவின் மிகச் சிறந்த முதல் ஐந்து ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவராகத் தெரியப்பட்ட சுவாமி அவர்கள் 2004 ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரப் பேரவையின் கூட்டத்தில் (World Economic Forum) கலந்து கொண்டார். அங்கு அவரது தலைமையில் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவரது கட்டுரைகளை www.sysindia.com என்ற இணையத்தளத்தில் படிக்கலாம். அது மட்டுமல்லாது, www.merina.com என்ற இணையத் தமிழ் வாலியிலும் சுவாமிஜியின் கருத்துக்கள் ஒலிபரப்பப் படுகின்றன.

சுவாமி சுகபோதானந்தா அவர்கள் பெங்களூர் கோரமங்களாவில் 'நிர்குண மந்திர்' என்ற கோவிலையும், 'பிரஸன்னா ட்ரஸ்ட்' என்ற அமைப்பையும் நிர்மாணித்து நடத்தி வருகிறார். ஒரு தாயின் கருவிலுள்ள குழந்தை உணரும் முழுப்பாதுகாப்பை இறைவனின் குழந்தைகளான நாமனைவரும் எப்பொழுதும் உணரும் பொருட்டு, நிர்குண மந்திரை உலகெங்கிலும் காணாத அற்புதமாக கர்ப்பக்குடி வடிவில் அமைத்துள்ளார். இக்கோவிலில் வாரந்தோறும் கீதை, யோகா, பிராணாயாம வகுப்புகள், சத்சங்கங்கள் நடைபெறுகின்றன. வேதாந்த சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வேதப் பயிற்சி மையம் (Vedic Center) தற்பொழுது பெங்களூரில் அனைத்து வசதிகளுடன் எழுப்பப்பட்டு வருகின்றது. நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை சுவாமிஜியுடனிருந்து நாம் தங்கி கற்றுக் கொள்ளும் வண்ணம் இம்மையம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

அவரது பயிலரங்குகள், புத்தகங்கள், ஒலி/ஒளி நாடாக்கள் மற்றும் இதர விவரங்கள் பற்றி மேலும் அறிய: www.swamisukhabodhananda.org

சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அவரது சத்சங்கங்கள் மாதம் இருமுறை நடைபெறுகின்றன. அதனைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர் toshakila@yahoo.com அல்லது rajashrees@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மஹி சங்கரநாராயணன்

© TamilOnline.com