Naatak வழங்கும் 'ரகசிய சினேகிதியே'
நல்ல தமிழ் நாடகங்களை ரசித்து மகிழ்வதிலும், அவற்றிற்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுப்பதிலும், வளைகுடாப் பகுதித் தமிழ் ரசிகர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல. வெற்றிப் படைப்புகளை வழங்கியுள்ள நாட்டக் (Natak) அமைப்பு அடுத்து வழங்க இருக்கும் தமிழ் நாடகம் 'ரகசிய சிநேகிதியே'. மணிராம் எழுதி இயக்கி உள்ள இந்த நாடகம் செப்டம்பர் 25, 26ம் தேதிகளில், சாரடோகாவில் உள்ள வெஸ்ட் வேல்லி கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேடையேறிய 'காசு மேல காசு' நாடகத்தை எளிதாக யாரும் மறக்க முடியாது. 'நாட்டக்' (Natak) நாடக அமைப்பின் சார்பாக மணிராம் எழுதி இயக்கிய 'காசு மேல காசு' விரிகுடாப் பகுதியில் மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சலஸ், சாக்ரமெண்டோ வாழ் தமிழர்களின் அமோக ஆதரவைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக அரங்கேறியது.

பெரும்பாலும் ஹிந்தி நாடகங்களையே அரங்கேற்றி வந்த 'நாட்டக்' கடந்த சில வருடங்களில் 'கலவரம்', 'காசு மேல காசு' நாடகங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நாடகத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தி, குறை சொல்ல முடியாத முழுமையான படைப்பாக உருவாக்குவதில் இந்தக் குழுவினருக்கு உள்ள முனைப்பு அபாரமானது. வளமான கற்பனைகளில் விளைந்த சுவையான படைப்புகளை வெகுவாக ரசிக்கப்படும் நாடகங்களாக மாற்றுவதில் மணிராம் குழுவினரின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை. இயல்பான நடிப்பு, பிரமிக்க வைக்கும் மேடை உத்திகள், தொழில்நுட்பக் கருவிகளை நாடகத்துக்குத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வதில் காட்டும் திறமை, சினிமாப் பாடல்களுக்கு நிகரான பாடல்களை நாடகத்துக்கு இயற்றிப் பயன்படுத்துதல், பின்னணி இசையிலும் அதீத அக்கறை - இவை நாட்டக் படைப்புகளின் தனித்தன்மையைக் காட்டுவன. கதையைக் கூர்மையான, ரசிக்கத் தகுந்த வசனங்கள் மூலம், சுவாரசியம் கெடாமல் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் திறமை மிக்கவர்கள். மொத்தத்தில் முழுமையான நாடகத்தை அளிப்பதில் இவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்புணர்வு எந்தவொரு ஒரு தொழில்முறை நாடகக் குழுவுக்கும் குறைந்ததல்ல.

நாட்டக்கின் மூன்றாவது தமிழ்ப் படைப்பாக மலர்கிறது 'ரகசிய சிநேகிதியே'. தன் கதைகளில் பாத்திரங்களைப் படைத்து உயிர் கொடுத்து, உணர்வுகளையும் அளித்து வாசகர்களின் மனதில் அழியாப் பதிவுகளாக உருவாக்குபவன்தான் இந்த நாடகத்தின் மூல பாத்திரமான எழுத்தாளர் பிரம்மா. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரம்மா படைக்கும் கதையின் கருவுக்கு நாடகத்தின் உள்ளே உயிர் கொடுக்கிறார் இயக்குநர் மணிராம். எழுத்தாளரின் ஆழ்மன உணர்ச்சிகள் கதாபாத்திரங்களின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, எவ்விதத் திருப்பங்களை உண்டாக்குகிறது என்பதை மிகுந்த சுவாரசியத்துடன் கொண்டு செல்கிறார் இயக்குநர்.

இந்தக் குழுவினர் அனைவரும் பல்வேறு மென்பொருள்/தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். அலுவல் நேரம் போக வார இறுதிகளையும், விடுமுறை தினங்களையும் கலைப் படைப்புக்களை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். இந்த நாடகத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாய் 'உதவும் கரங்கள்' அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. வளைகுடாப் பகுதியில் வாழும் தொண்டுள்ளம் கொண்ட இந்த இளைஞர்களின் உன்னதமான கலை முயற்சிக்குத் தமிழ் ரசிகர்கள் தங்களது பேராதரவை நல்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகள் வளைகுடாப்பகுதியில் தொடர்ந்து நடக்கவும், நற்பணிக்கு நிதி வழங்கவும், எல்லாவற்றுக்கும் மேல் தரமான நாடகம் ஒன்றைக் கண்டுகளிக்கவும் நல்ல வாய்ப்பு இது.

இடம்: West Valley College, Saratoga
நாள்/நேரம்: செப்டம்பர் 25, சனிக்கிழமை மாலை மணி 6:30
செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 5:30
முன்பதிவிற்கு: snehidiyae@yahoo.com; 650-814-5396, 408-718-4516
இணையத்தளம்: www.naatak.com

© TamilOnline.com