செப்டம்பர் 2004 : வாசகர் கடிதம்
'வருமுன் காப்போம்' என்கிற தலைப்பின் கீழ் தந்த விவரங்கள் மக்களுக்குச் செய்யும் சேவைதான். புகாரி கவிதைகள் போற்றத்தக்கவை. டாக்டர் நர்மதா, குளிர்காலம், TSA செட்டியார் பற்றிய குறிப்புகள் போன்றவை மெச்சத்தகுந்தவை. மணிவண்ணன் அவர்களின் குடந்தை தீவிபத்துக்காக நிதிதிரட்டும் முயற்சியும் வெற்றி பெற வேண்டுகிறேன்.

இளந்தென்றலில் 'விழி' என்பதற்கு பதில் வழி என்று தவறி போடப்பட்டு இருக்கிறது. கடைசியாக அந்தக்காலத்தில் பகீரதன் கங்கையை கொண்டு வந்ததாக கேள்வி. அதேபோல் சிதம்பரம் சென்னைக்குக் கடல்நீரையாவது நல்ல தண்ணீராக மாற்றி தமிழ்நாட்டுக்கு கொண்டு வர எடுத்து இருக்கும் முயற்சிகளைப் பாராட்டலாம்.

அட்லாண்டா ராஜன்

******


தென்றல் வந்ததும் நான் முதலில் பிரித்துப் பார்ப்பது குழந்தைகளுக்கான இளந்தென்றல் பகுதியைத்தான். இது அமெரிக்காவாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

ஆகஸ்ட் மாத இதழில் ஒரு சிறு அச்சுப் பிழை - கண் படத்திற்குக் கீழ் தரப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுமே படத்துடன் ஒத்துப் போகவில்லை. கடந்த ஒரு வருடமாக அட்லாண்டாவில் லட்சுமி சங்கரனிடம் தமிழ் பயிலும் என் மகன், அதைப் பார்த்துவிட்டு உடனே 'விழி' என்பது 'வழி' என்று தவறாக அச்சாகியுள்ளது என்று சொன்னதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பல வருடங்களாக இலவசமாகத் தமிழ் கற்றுக் கொடுக்கும் சேவையைச் செய்து வரும் லட்சுமி சங்கரனுக்கும், இலவசமாகத் தரமான பத்திரிக்கையை அளித்து வரும் தென்றலுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ராஜி ராமச்சந்திரன்
அட்லாண்டா

(இந்தப் பிழையை அட்லாண்டா ராஜன் அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார். தவறுக்கு வருந்துகிறோம். சுட்டியமைக்கு நன்றி - ஆசிரியர்)

******


ஆகஸ்ட் மாத தென்றல் 'மாயாபஜார்' பகுதியில் எனது பிளம்ஸ் தயாரிப்புகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. பிளம்ஸ் ஊறுகாயில் ஒரு சின்ன திருத்தம். பிளம்ஸ் துண்டுகளையும் மசாலாவுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

எஸ். கமலா சுந்தர்

******


ஆகஸ்டு தென்றல் இதழ் புழைக்கடைப் பக்கத்தில் கும்பகோணம் பற்றிய சில வரிகள் மனதைத் தொட்டன. மணி மு. மணிவண்ணன் மீண்டும் தனது தீர்க்கமான பார்வையையும், எழுத்தாற்றலையும் புலப்படுத்தியிருக்கிறார்.

அருண் மகிழ்நன்,
சிங்கப்பூர்

© TamilOnline.com