நடந்தாய் வாழி காவேரி!
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுகிற மேட்டூர் அணை கடந்த மூன்றாண்டுகளாக பருவமழைபொய்த்ததாலும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரமறுத்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது.

மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் தமிழக டெல்டா பாசன மாவட்டங்களான ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலபரப்பில் உள்ள நிலங்களில் பாசனத்திற்கு ஏதுவாக இருக்கும். தொடர் வறட்சியினால் இப்பகுதி விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இதே சமயத்தில் கேரளா மற்றும் கர்நாடகக் காவிரி பாசனப்பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து அங்குள்ள நீர்த்தேக்கங்களுக்குத் தண்ணீர் மிகவேகமாக வரத்தொடங்கியது. கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழுவதுமாக நிரம்பி வழிந்ததையடுத்து, பலமுறை கேட்டாலும் கிடைக்காத காவிரிநீர் வேறுவழியின்றித் திறந்துவிடப்பட்டது.

ஒருவழியாக ஆகஸ்டு 12-ஆம் தேதி மேட்டூர் அணையைப் பாசனத்திற்காக திறந்துவிடும்படி முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து மேட்டூர் அணை மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு மேலும் அதிகரித்தால், காவிரி பாசனப் பகுதிகளுக்கு ஜனவரி இறுதி வரைகூடத் தண்ணீர் கிடைக்கவாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வெள்ள அபாயத்தால் அணை திறந்தது. டெல்டாவில் பதினெட்டாம் பெருக்குக் கொண்டாடப்பட்டது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com