சிங்களத் தீவினிற்கோர் கப்பல்...
முன்பு மத்தியில் தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சியின் போது தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்திற்காக கப்பலை இயக்கத் திட்டமிடப்பட்டது. அப்போதைய மைய அரசில் கப்பல்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசரும் இதில் அதிக ஆர்வம் காட்டினார். இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தூத்துக்குடி துறைமுகத்தில் பயணச் சீட்டு வழங்கல், குடியுரிமை, சுங்கச் சோதனை என்று பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதற்கிடையில் மத்தியில் அரசு மாறியது. கப்பல்துறை அமைச்சராக டி.ஆர். பாலு பொறுப்பேற்றவுடன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். வெகுவிரைவில் தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்ததையடுத்து தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மிகுந்த பலனை அடையும் என்று எதிர்பார்ப்பு இருந்தவேளையில் இந்தத் திட்டத்திற்குத் தமிழக முதல்வர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகக் கடல்பகுதியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் விட்டால் தீவிரவாதிகள் சுலபமாகத் தமிழகத்திற்குள் ஊடுருவக்கூடும் என்று கூறித் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

திட்டத்திற்குத் திடீர் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் கேரளா இந்த வாய்ப்பைத் தட்டிச்செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கேரள முதலமைச்சர் ஏ.கே. அந்தோணி, கொச்சியிலிருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அனுமதி கோரி கப்பல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com