கனடா நாட்டுக்கே செல்லப்போவதில்லை
பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நானும் எனது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், கனடா நாட்டுப் பத்திரிகைகள் என்னைப் பற்றித் தவறாக எழுதியுள்ளன.

நான் பயங்கரவாதி என்று நிரூபிக்கப்படவில்லை. கனடா சுதந்திரமான நாடு என்று கருதினேன். குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்று எவரையும் கூறமுடியாது என்ற நிலைதான் இந்நாட்டிலும் இருக்கிறது என்று நினைத்தேன்.

என்னை பயங்கரவாதியாக சித்திரித்துக் கனடா நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளால் மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் இனிமேல் கனடா நாட்டுக்கே செல்லப்போவதில்லை.

சஞ்சய் தத், ஹிந்தி நடிகர், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில்...

******


சமீபத்தில் பள்ளிகளில் வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பி அதன் மூலம் மாநிலத்தில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகளில் பெரும் பீதி ஏற்பட்டு பல மாணவ மாணவியர் காயமடைந்தனர்.

இத்தகைய தீய சக்திகள் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலையைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற விஷமிகள் விஷயத்தில் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு விளங்குகிறது. மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஆங்காங்கு சில சிறிய சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கை மூலம் பெரிய அளவிலான கலவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா, தமிழக முதல்வர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களின் மாநாட்டில்...

******


பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணவீக்கம் வெகுவாகக் குறைந்துவிடும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நிதிசார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி ரிசர்வ் வங்கியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் எதிர்பாராத விதத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை அரசால் தடுக்க இயலாது. இதனால்தான் பணவீக்கம் 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த எண்ணெய்த் தேவையில் 65 சதவீதம் இறக்குமதி மூலமே சமாளிக்கப்படுகின்றன. எனவே எண்ணெய் விலை உயர்ந்தால் பணவீக்கம் ஏற்படத்தான் செய்யும். பணவீக்கம் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான்.

ப. சிதம்பரம், மத்திய நிதியமைச்சர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்...

******


இன்றைய இளையோரின் கரங்களே நாளைய நாட்டை ஆளப் போகிறது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையல்ல. குறிக்கோள்கள்தாம் நீங்கள் வாழ்வில் எட்டும் சிகரம். குறிக்கோள் உங்களை உயர்த்துவதுடன் மற்றவர்களுக்கும் நலன் பயப்பதாக இருக்க வேண்டும்.

உறுதியான, உயர்ந்த குறிக்கோளுடன் ஓயாது உழைத்து வெற்றி பெறுங்கள். முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள். குட்டி நாய்களின் குரைப்புக்கு அஞ்சாதீர்கள். சுவாமி விவேகானந்தரின் வாக்குப்படி தன்னம்பிக்கையுடன் வீரர்களாகத் திகழ வேண்டும்.

சுவாமி ஆத்மானந்த மகராஜ், கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரித் தாளாளர் ஒரு மாணவர் தன்னம்பிக்கை நிகழ்ச்சியில்...

******


ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் 15 ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் விதிப்பது பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அமைந்துள்ளது.

தற்போது பேட்ஸ்மேன்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம். பந்து வீச்சாளர்களின் பங்கை உணருவதில்லை. வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகள்தான் இக்கட்டுப்பாட்டால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தலைசிறந்த அணிகளின் பந்து வீச்சாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

உலகிலேயே மிகவும் வேகமாக பந்துவீசக்கூடியவரான ஷோயப் அக்தர், வளர்ந்து வரும் இந்தியாவின் இர்·பான் பதான் ஆகியோரும் இக்கட்டுப்பாட்டால் சோர்ந்துவிடுவதைக் காண்கிறோம்; அவர்கள் அதிக அளவில் ரன்கள் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜாவேத் மியான்தத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், தொலைக்காட்சிப் பேட்டியில்...

கேடிஸ்ரீ

© TamilOnline.com