காதில் விழுந்தது......
விமானத்துக்கு ஏற்றப்பட்ட பெட்டிகளிலிருந்து பயணிகளின் உடமைகளைக் களவாடியதற்காகக் கைது செய்யப்பட்ட விமான நிலைய ஊழியர்கள் எண்ணிக்கைக் கூடி வருகிறது. கென்னடி, லா கார்டியா, டெட்ராய்ட், ·போர்ட் லாடர்டேல், நியூ ஆர்லியன்ஸ் விமான நிலையங்களில் பயணிகளின் பணம், மடிக் கணினி, நிழற்படக் கருவி, வாசனைத் திரவியங்கள் இவற்றைத் திருடியிருக்கிறார்கள். 28,000 பயணிகளின் புகார்கள் பதிவாயிருக்கின்றன. தன் ஊழியர்களிடமிருந்தே பயணிகளின் உடமையைப் பாதுகாக்க வக்கில்லாத பயணிகள் பாதுகாப்புக் கழகமா நம் விமானப்பயணத்தைப் பத்திரப்படுத்தும்?

ஜேம்ஸ் போவார்ட், நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில்.

******


மற்றவர்கள் மேல் மதிப்பு, நம் நடத்தை பற்றிய நேர்மை, நம் லட்சியங்களைப் பற்றிய நம்பிக்கை என்ற உன்னத மனித குணங்களைக் கடைப்பிடிப்பதால் கடவுள் முன்னே நமக்கு உயிர் வருகிறது. நமது மற்றும் நம் நாட்டின் ஆன்மா அப்படித்தான் புலப்படுகிறது. ஆனால், நம் அமெரிக்க அரசு நம்முடைய விழுமியங்களிலிருந்து வெகுவாக விலகி விட்டது. நாம் முன்னேற வேண்டிய நாள் நெருங்கி விட்டது. நம் இதயத்தில் குடியிருக்கும் நம் நாடு காத்திருக்கிறது.

ராக் இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், அதிபர் புஷ்ஷ¤க்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கலைஞர்கள் குழுவுக்காக.

******


அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் நுண்ணறிவுப் புலத்தில் துணைச் செயல் லெ·பினன்ட் ஜெனரல் வில்லியம் போய்க்கின், சோமாலியாவில் தான் போரிட்ட போராளியத் தலைவனைப் பற்றிக் குறிப்பிட்ட போது "என்னுடைய கடவுள் அவனுடைய கடவுளை விட உயர்ந்தவர். எனக்குத் தெரியும் என் கடவுள் உண்மையானவர், அவன் கடவுள் வெறும் சிலைதான்" என்றிருக்கிறார். இது போதாதென்று பயங்கரவாத எதிர்ப்புப் போர் பற்றிக் குறிப்பிட்டபோது "சாத்தான் நம் நாட்டை அழிக்க விரும்புகிறான். ஏசுவின் பெயரால் நம் நாடு, நம் தலைவர்களுக்காக நாம் வேண்டினால் தான் சாத்தானைத் தோற்கடிக்க முடியும்" என்றிருக்கிறார்.

வாஷிங்டன் போஸ்ட்

******


செப்டம்பர் 11க்குப் பின் முஸ்லிம் வெறுப்புணர்வு மேலைநாடுகளில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்களுக்கு இஸ்லாம் மதத்தைப் பற்றிய ஒருதலைக் கண்ணோட்டம் தான் கிட்டுகிறது. நியூயார்க் மாநகரில் வாழும் நாங்கள் அந்நியமாக உணர்ந்ததில்லை, செப்டம்பர் 11 வரை. என்னை முஸ்லிம் என்று யாரும் தவறாக நினைக்கிறார்களா? ஏன் முஸ்லிம்களும் மற்ற மனிதர்களைப் போலத்தானே இருக்கிறார்கள்? நான் பிறந்த வீடு இந்து, புகுந்த வீடு முஸ்லிம். என்னை முஸ்லிமாக நினைத்துக் கொண்டால் பரவாயில்லை.

திரைப்பட இயக்குநர் மீரா நாயர், நியூயார்க் டைம்ஸ் வார இதழில்...

******


"பத்து ஆண்டுகளுக்கு முன்பே இராக்கைப் பிடித்திருந்தால், அநேகமாக செப்டம்பர் 11 தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம்."

ஜீன் காக்ஸ், அதிபர் புஷ்ஷின் ஆதரவாளர், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்..

******


நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்ததை விட இப்போது வசதியாக இருக்கிறீர்களா என்று வாக்காளர்களைக் கேட்க வருகிறாரா அதிபர் புஷ்? பார்க்கலாமா? என்ற நாடு இராக்கில் தேவையற்ற படையெடுப்பில் மாட்டிக் கொண்டிருக்கிறது. என் நகரம் எப்போது ஆரஞ்சு நிலை பயங்கரவாத எச்சரிக்கையின் கீழ் இருக்கிறது. என்னுடைய வாக்கு எண்ணப்படுமா என்று தெரியாது. விமான நிலையத்தில் எனது பைகளிலிருந்து சாமான்களை உருவிக்கொள்கிறார்கள். பெட்ரோல் விலை கூடிக் கொண்டே போகிறது. என் வாடகை இன்னொரு 4% ஏறிவிட்டது. என் சம்பளமோ இரண்டு ஆண்டுகளாக ஏறவில்லை. ம்ம்ம்.... அதனால் என்ன, இன்னும் ஒரே மாதத்தில் என்னால் ஒரு துப்பாக்கி வாங்க முடியும். இன்னும் நாலு ஆண்டுகளை ஒட்ட அது போதாதா?

நீல் ஃப்ரீட்மன், நியூயார்க் டைம்ஸ் ஆசிரியருக்குக் கடிதம்

******


அமெரிக்காவின் நட்பு நாடுகளாக பிரிட்டன், ·பிரான்ஸ், ஜெர்மனி. இத்தாலி, ஸ்பெயினில் கூட 7% பேருக்குத் தான் அமெரிக்க அரசு பற்றிய நல்லெண்ணம் இருக்கிறது. உலகில் அமெரிக்க வெறுப்பு உலவுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் - உலகமயமாக்கலின் பாதிப்பு, அமெரிக்கக் கலாச்சாரத்தின் தாக்கம், அமெரிக்கர்களின் குணாதிசயம் பற்றிய கண்ணோட்டம். 130 நாடுகளில் நடத்திய கணிப்பில், அமெரிக்கர்கள் அகந்தை, அறியாமை, அடக்கமின்மை, இரைச்சல், பிறர் சொல் கேளாமை என்ற குணம் கொண்டவர்கள் என மக்கள் கருதுகிறார்கள் எனத் தெரிகிறது. நம் திறந்த மனம், கலகலப்பான குணம் பாராட்டப்பட்டாலும், அகங்காரம், அறியாமைக்கு நாம் பெயர் போனவர்கள். உலகமே நம்மைப் போலத்தான் வாழத் துடிக்கிறது என்று நினைப்பதே நம் அகந்தையின் உச்சநிலை என்கிறார் உலக விளம்பர நிறுவனத் தலைவர் கீத் ரைன்ஹார்ட்இ

சி.என்.பி.சி.

******


ஒருநாள் என்னவென்றால், நாம் பொதுமக்களை சுடுகிறோம், அவர்கள் காதை வெட்டுகிறோம், கழுத்தை வெட்டுகிறோம் என்று சொல்லித் தன் போர்ப் பதக்கங்களை விட்டெறிகிறார் இந்த ஜான கெர்ரி. மறுநாள் பார்த்தால், நான் அதிபர் வேட்பாளராக நிற்கிறேன், ஏனென்றால் நான் முன்னாள் வியட்நாம் போர் வீரன் என்று பீற்றிக் கொள்கிறார். மூன்று பதக்கங்கள் - ஆனால் ஒரு சொட்டு ரத்தம் இல்லை. மேல் காயத்துக்குப் பதக்கம் வாங்கிக் கொண்டு போர்க்களத்திலிருந்து சாவரி விட்டிருக்கிறார்.

வேறு போர்க்களத்தில் ஊனமுற்ற முன்னாள் அதிபர் வேட்பாளர் பாப்டோல், சி.என்.என். நேர்காணலில்.

******


அதிபர் புஷ் தன் தேர்தல் விளம்பரத்தில் இராக், ஆ·ப்கானிஸ்தான் கொடிகளைக் காட்டி, இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இரண்டு புது சுதந்திர நாடுகள் பங்கேற்கும் என்று பறை சாற்றியிருக்கிறார். இராக் ஒலிம்பிக்ஸில் கால்பந்தாட்ட வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இத்தனை பேரைக் கொன்று குவித்த குற்றவாளி புஷ் எப்படி இறைவனைச் சந்திப்பார் என்கிறார் ஒரு வீரர். அமெரிக்கப் படை இராக்கில் பலரைக் கொன்றிருக்கிறது. தெருவில் துப்பாக்கி சூடு நிலவுவதா சுதந்திரம் என்கிறார் இன்னொரு வீரர்.

எம்.எஸ்.என்.பி.சி.

******


அதிபர் புஷ்ஷ¤க்கும் கெர்ரிக்கும் உள்ள இடைவெளி குறைவுதான். அதனால் புஷ் ஜெயிப்பது பற்றி எனக்கு அக்கறையில்லை என்று சொல்வது, ஏழைகளிமும் உழைப்பாளிகளிடமும் உங்கள் வாழ்க்கை நாசமாவது பற்றி எனக்கு அக்கறையில்லை என்று சொல்வதற்குச் சமம்.

பேரா. நோம் சாம்ஸ்கி

******


"ஏழைகளைப் பலியாடுகளாகவோ, அல்லது சமுதாயச் சுமையாகவோ எண்ணுவதை நிறுத்தி, அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய, படைப்புணர்வுள்ள தொழில் தொடங்குவோராக, நுகர் பொருட்களின் மதிப்பை உணர்ந்தவர்களாக எண்ணத் தொடங்கினால், ஒரு புதிய உலகமே திறக்கிறது" என்கிறார் மிக்சிகள் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத். அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஏழைகளுக்குப் பிச்சை போட்டு அவர்களைக் கெடுத்து விடுகிறார்கள் எனச் சாடுகிறார் அவர். இன்று 500% கந்து வட்டி கொடுக்கும் ஏழைகளுக்கு 20% வட்டியில் கடன் கொடுக்க வங்கிகள் முன் வந்தால் இருவருக்கும் லாபம் என்கிறார்.

எக்னாமிஸ்ட் இதழில்...

******


இந்தியாவும் சீனாவும உலகமயமாக்கலால் முன்னேறும்போது ஏன் ஆப்பிரிக்காவால் முன்னேற முடியவில்லை? ஏனென்றால் இந்தியாவிலும், சீனாவிலும் வலிமையுள்ள, நன்கு வளர்ந்த அரசு அமைப்புகள் அடிப்படை வசதிகளையும், நிலையான ஆட்சியையும் கொடுக்கின்றன. அரசுகள் தனியார்ச் சந்தை குறுக்கே வராமல் ஒதுங்குவதே வளர்ச்சியைத் தூண்டுகிறது. ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் நவீன அரசுகளே இல்லை. ஆப்பிரிக்காவின் வலிமையற்ற அரசு அமைப்புகளே அதன் கேட்டுக்குக் காரணம்.

பேரா. ஃபிரான்சிஸ் ·புகுயாமா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், நியூயார்க் டைம்ஸ்

******


இங்கிலாந்தின் தலைசிறந்த விஞ்ஞானிகள் "பிளேட் ரன்னர்" ("Blade Runner", 1982) என்ற படம்தான் உலகின் தலைசிறந்த அறிவியல் புதினப் படம் (sci-fi-film) என்று கார்டியன் நாளேட்டின் கருத்துக் கணிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் ஹாரிசன் ·போர்டு பாத்திரம் இந்தப் படத்தில் ஓர் இருளடைந்த வருங்கால லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தப்பித்துப் போன மனிதப் பிரதிகளை வேட்டையாடும் ஓய்வு பெற்ற போலீஸ்காரன். "அந்தப் படம் அதன் காலத்துக்கு முற்பட்டது. அதிலும், அந்தக் கதை - மனிதனாக இருப்பது என்பது என்ன, நாம் யார், எங்கிருந்து தோன்றினோம் என்பதைப் பற்றியது. இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் கேள்விகள்தாமே" என்றார் ஒரு விஞ்ஞானி.

கார்டியன் நாளேடு, லண்டன்.

நெடுஞ்செவியன்

© TamilOnline.com