உழைப்பாளர் நாள்
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வரும் உழைப்பாளர் நாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமான விடுமுறை நாளாகும். தொழிலாளர் சங்கக் கொண்டாட்ட நாளாக இருந்த இவ்விழா வேனிற்காலத்தின் வழியனுப்பு நாளாகி மெல்லமெல்ல மாறிப்போய்விட்டது. 1882-இல் Knights of Labor இதை ஒரு விழா மற்றும் ஊர்வலக் கொண்டாட்டமாக நியூ யார்க்கில் தொடங்கினர். உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுமுகமாகத் தோன்றிய இந்த ஊர்வலம் 1884-இல் மிகப் பெரிதாக இருந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுவதாக அப்போதிலிருந்து தீர்மானிக்கப்பட்டது.

சோஷலிஸ்ட்டுக் கட்சி தொழிலாளர் தினமாக மே மாதம் ஒன்றாம் தேதியைக் கொண்டாடியது. இதுவே பின்னாளில் மே தினமாக சோஷலிஸ்ட்டு மற்றும் பொதுவுடமைக் கட்சிகளால் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் பொதுவுடைமையாளர்களுடன் எந்தத் தொடர்பும் கூடாது என்ற எண்ணத்தில் செப்டம்பர் மாதமே தொடர்ந்து அனுசரிக்கப்பட்டது.

1880-களின் இறுதியில் பல தொழிலாளர் அமைப்புகளும் உழைப்பாளர் தினத்தை மாநிலத்தின் தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரின. 1887-இல் ஓரெகன், கொலராடோ, நியூ யார்க், மேசச்சூசட்ஸ் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்கள் முதல்முதலாக விடுமுறை அறிவித்தன. 1894-இல் அமெரிக்க அரசு இந்நாளை நாடுதழுவிய விடுமுறையென அறிவித்தது.

இந்நாளை அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடாவும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்நாள் வெய்யிற்காலத்தின் வால் பகுதியாகவே கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் வடபாதியில் வேனிற்கால விடுமுறைநாட்கள் நீத்தார் நினைவு நாளில் (மெமோரியல் டே) தொடங்கி உழைப்பாளர் நாளோடு முற்றுப் பெறுகின்றன. இது முடிந்ததும் பல பள்ளிகள் புதிய பள்ளியாண்டு வகுப்புகளைத் துவங்குகின்றன.

செப்டம்பர் 6-ஆம் நாளன்று நீச்சல் குளங்களும், பாடியிடங்களும் (camp grounds) நிரம்பி வழியும். விலகிப்போய்க் கொண்டிருக்கிற வெய்யிற்காலத்தை அனுபவிக்க அதுவே கடைசி வாய்ப்பு. இந்த மாதம் இலையுதிர் காலத்தின் துவக்க மாதமும் ஆகும். சராசரி உயர்மட்ட வெப்பநிலை திடீரென்று சரியத் தொடங்குவது இப்போதுதான்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் இந்த உழைப்போர் நாளன்று?

© TamilOnline.com