நினைவுகள் - ஜே.சி. குமரப்பா
ஜூலை திங்கள் தென்றல் படித்தேன். அதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த ஜே.சி. குமரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தியாவிலேயே கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரியாத கிராமப்புற மேம்பாட்டுத் தத்துவ ஞானியின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அதிலும் தென்றல் வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதம் சுருக்கமாக எழுதிய தெ. மதுசூதனன் அவர்களுக்கு மிக்க நன்றி.

நான் 1955ம் ஆண்டு கல்லூரி இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு குமரப்பா அவர்கள் இருந்த தே.கல்லுப்பட்டியில் மாநில அரசுப் பணியில் சேர்ந்து ஆறுமாத காலம் பணியாற்றினேன். அப்பணி மனசாட்சிக்குப் பிடிக்காததால், பணியைத் துறந்துவிட்டு காந்தீய வழியில் பல பயிற்சிகளை அளித்துக் கொண்டிருந்த தே. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் கிராம எண்ணெய் மற்றும் அது சம்பந்தமான தொழில் (வேர்க்கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் வார்தா செக்கில் ஆட்டி எடுத்தல், உணவிற்கு ஆகாத எண்ணெயில் சோப்பு தயாரித்தல்) பயிற்சியில் ஆய்வாளராகச் சேர்ந்து ஆறுமாத காலப் பயிற்சி பெற்றேன். அது முடிந்தவுடன் தொழில் வளர்ச்சி அலுவருக்கான எட்டுமாதப் பயிற்சி பெற்றேன்.

தே.கல்லுப்பட்டியிலும், காந்தி நிகேதன் ஆசிரமத்திலும் இருந்த இருபது மாத காலத்தில் ஜே.சி. குமரப்பாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடன் பழகிய காலம் குறைவாக இருந்தாலும் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன். எனவே எனக்கு நேரிடையாகக் கிடைத்த அனுபவத்தையும், அவரைப் பற்றிய சில குறிப்புகளையும் தென்றல் வாசகர்களுக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குமரப்பா அவர்கள் கிராமப்புற மக்களின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்து, அவர்களின் நல்வாழ்விற்காக உழைக்கின்ற வாயில்லாப் பிராணிகளின் வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தினார். 1950-55 ஆண்டுகளில் பேருந்துகளில் பயன்படாத சக்கரம், டயர்களைக் கொண்டு மாட்டு வண்டிகள் தயாரிக்கப்பட்டன. அந்த வண்டிகளை இழுக்கும் மாடுகளுக்கு மிகவும் துன்பம் விளையும் என்பதை ஆணித்தரமாகப் பொறியியல் சார்ந்த அறிவாற்றலுடன் விளக்கிக் கூறிப் பிரசாரம் செய்தார்.

நடைமுறையில் இருக்கும் மாட்டுவண்டிகள் சக்கரங்களின் விட்டம் சுமார் 5 அடி இருக்கும். கிராமப்புறச் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களிலும், வயல்களிலும் வண்டியைச் சுலபமாக மாடுகள் இழுத்துச் செல்லும். மேலும் அச்சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்புப்பட்டைகள் 4 அங்குல அகலம் இருப்பதால் சாலையில் பிடிப்புக் குறைவாக இருக்கும் என்று அழகாக விளக்கமளித்தார்.

பேருந்துச் சக்கரங்களின் விட்டம் குறைவு, டயரின் அகலம் அதிகம் எனவும், வண்டிகளை இழுத்துச் செல்லும் மாடுகள் சக்தியை இழந்து துன்பப்படும் எனவும் எடுத்துரைத்தார். இது வண்டி இழுக்கும் மாடுகள் படும் துன்பத்திலிருந்து அவைகளைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட மாபெரும் நடவடிக்கையாகும்.

அச்சமயம் மக்கள் அவரின் ஆழமான கொள்கையையும் விளக்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் 1955ம் ஆண்டுக் கடைசியில் காந்தி நிகேதன் ஆசிரமத்தில் எண்ணெய்த் தொழில் ஆய்வாளர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தேன். அப்பொழுது நமது பாரம்பரியமான நாட்டுச் செக்கில் பல முன்னேற்றங்கள் செய்து, 'வார்தா செக்கு' எனப் பெயரிட்டு அந்தச் செக்கில் எண்ணெய் விதைகளிலிருந்த எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்டது.

ஒருநாள் நான் செயல்முறைப் பயிற்சியில் செக்கைச் சுற்றி வந்து, எண்ணெயைப் பிழிந்து கொண்டிருந்தேன். அச்சமயம் குமாரப்பா அவர்கள் அங்கு வந்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னை அழைத்து சிறிது கவலையுடன் பேசினார்.

''தம்பி அங்கே பார்... அந்த மாடு இரண்டு தோல் பட்டைகளுக்கு இடையில் நுகத்தடியை இழுத்துக் கொண்டு செக்கைச்சுற்றி வருகிறது. அதில் வெளிப்புறத்திலுள்ள ஒரு தோல் பட்டை மாட்டின் இடது தொடைப்பாகத்தை எவ்வளவு வேதனையைக் கொடுக்கும் என்று நினைத்தாயா? அதற்கு வாயிருந்தால் அதன் துயரத்தை உன்னிடம் சொல்லியிருக்கும். அந்த வாயில்லாப் பிராணியின் மீது இரக்கப்பட்டு அதன் துன்பத்தை நீக்க ஒரு மாற்று ஏற்பாடு செய்தால் என்ன?" என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அந்த மாடு அடையும் துன்பத்தை உணர்ந்தேன். அவரிடம், ''ஐயா அதற்கு நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்கிறேன'' என்று உறுதியளித்தேன். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. அந்த மாடு என்னையே சுற்றிச்சுற்றி வருவதாகக் கனவு கண்டேன்.

காலை 4 மணிக்கு எழுந்து செக்கின் தோல் பட்டைகளில் மாற்றங்கள் செய்து பல வரைபடங்களை வரைந்தேன். முடிவாக ஒரு வரைபடம் எனக்கு திருப்தியளித்தது. அதற்கான கணக்குகளையும் போட்டு வைத்துக் கொண்டேன். காலையில் பயிற்சி ஆசிரியரிடம் சென்று வரைபடத்தைக் காண்பித்து தொழில்நுணுக்க ரீதியாக விளக்கம் அளித்தேன். அவருக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. எனினும் குமரப்பா சொல்லிவிட்டாரே என்று ஒப்புக்கொண்டார்.

இதற்காக எந்த வகையில் உனக்கு உதவி தேவை என்றார். ஒரு தச்சுத் தொழிலாளியை மட்டும் என்னுடன் அனுப்புங்கள் என்றேன். அவரும் ஒரு தச்சுத் தொழிலாளியை ஏற்பாடு செய்தார். அவரைக் கொண்டு செக்கில் உள்ள வெளிப்புறத்தோல் பட்டையை நீக்கிவிட்டு ஒரு மாற்றத்தை இரண்டு மணிநேரத்தில ஏற்படுத்தினேன். அந்தச் செக்கில் எந்தவித துன்பமும் இன்றி மாடு செக்கை இழுத்தது. உள்புறம் உள்ள தோல்பட்டையும் மாட்டை தொடவில்லை. ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி.

மறுநாளே இருவரும் குமரப்பா குடிலுக்குச் சென்று விளக்கினோம். அவரும் நேரில் வந்து பார்த்துவிட்டு என்னை மிகவும் வாழ்த்தினார். பயிற்சி ஆசிரியரும் இந்த மாற்றத்தை இந்தியாவில் உள்ள அனைத்துப் பயிற்சி நிலையங்களுக்கும், வார்தாவிற்கும் தெரியப்படுத்தி அதை மேற்கொள்ளும்படி எழுதினார். செக்கில் செய்த மாற்றத்தையும், குமரப்பா என்னை வாழ்த்தியதையும் 49 ஆண்டுகளுக்குப் பின்பும் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஜே.சி. குமரப்பா அவர்கள் தனது கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். அவர் அணிந்து கொள்ளும் ஆடைகளை மதுரையில் உள்ள ஒரு தையல்காரரிடம் தைத்து வாங்கிக் கொள்வது வழக்கம். அதற்காகத் துணியைக் கொண்டு போய்க் கொடுத்து ஆடையாகத் தைத்து வாங்கிக் கொண்டு வரும் வேலையைத் தங்கவேலு என்ற ஜீப் ஓட்டுநரிடம் கொடுப்பார். அவர்தான் குமரப்பாவிற்கு அந்த வேலையில் நம்பிக்கையான நபர்.

ஒரு சமயம் துணியைக் கொடுக்கும் பொழுது சொன்னார், ''தங்கவேலு தையல் கடைக்காரனிடம் சட்டைக்குப் பொத்தான் வைக்கும் பொழுது கதர் துணியையே பொத்தான் போல உருட்டித் தைக்கும்படி நீ சொல்ல வேண்டும். அப்படி நீ சொல்லவில்லையானால் தையல்காரன் இயந்திரத்தில் செய்த பிளாஸ்டிக் பொத்தனை வைத்துத் தைத்து விடுவான். அதிகக் கவனமாக இருக்க வேண்டும்".

தங்கவேலு சிறிது யோசனை செய்துவிட்டு, ''ஐயா, ஒரு சந்தேகம்..'' என்றார்.

''என்ன சந்தேகம்?'' என்றார் குமரப்பா.

''ஐயா, நீங்கள் சொன்னதுபோல் கவனமாக பக்கத்திலேயே இருந்து இயந்திரத்தின் மூலம் செய்த பிளாஸ்டிக் பொத்தானை உள்ளே வைத்துத் தைக்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த கதர்த் துணியினால் செய்த பொத்தானை சட்டையுடன் வைத்துத் தைக்கவும், சட்டையைத் தைக்கவும் இயந்திரத்தினால் செய்த நூலை உபயோகப்படுத்துவானே.. என்ன செய்வது'' என்று வேடிக்கையாகவும் விநயமாகவும் தங்கவேலு கேட்டான்.

குமரப்பா உடனே சிரித்துவிட்டார்.

''தங்கவேலு, நீ மிகவும் புத்திசாலி'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

குமரப்பா நினைத்திருந்தால் அவர் டில்லியிலோ, மும்பையிலோ, சென்னையிலோ கடைசிக்காலத்தை கழித்திருக்கலாம். ஆனால் அவர் கிராமப்புறச் சூழ்நிலையில் இருக்கவே விரும்பினார். எனவே கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் ஒரு கூரைவேய்ந்த குடிலைக் கட்டி தனது வாழ்நாள் கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாது கிராமப்புற மக்களுக்காகவே, தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த உத்தமராவார்.

அவருடன் காந்திநிகேதன் ஆசிரமத்திலும், கல்லுப்பட்டியிலும் இருந்த இருபது மாத காலம் எனது வாழ்க்கையில் பொன்னான காலம் என மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்.

க. நடராசன்

© TamilOnline.com