எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி'
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். எதிர் காலிமனைகளில் வேலிக்காத்தான் முட்புதர்கள் அசையாமல் நின்றிருக்கும். கிணற்று நீர் பளிங்காகித் தன் ஆழம் வரைக்கும் பார்க்க அனுமதிக்கும். அங்கங்கே வற்றி வெடித்த சிறுசிறு பள்ளங்களின் கரைகளில் கடல் பாலைச் செடிகள் தலைதூக்கி, வெளிர் ரோஸ் நிறப் பூக்களின் இதழ்கள் வாட நின்றிருக்கும். ஓரிடத்தில் நிலைக்காத தட்டான் பூச்சிகளும், மஞ்சள் பச்சைப் பட்டாம்பூச்சிகளும் கூடக் காடாய் மண்டிக்கிடக்கும் கொடிகளில், கருநீலச் சங்கு புஷ்பங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். கொல்லென்று பூத்துக்கொட்டும் வேப்ப மரத்தின் நிழலடியில் வெக்கையைத் தாளமுடியாமல் ஒன்றிரண்டு தெரு நாய்கள் படுத்துக்கிடக்கும். காற்றை விரட்டியடித்து எல்லாவற்றையும் அழுத்திக்கொண்டிருக்கும் வெயிலில், ஒன்றுமே நிகழாத பாவனைக்கடியில் எல்லாமும் மெல்ல நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

காலத்தின் தொடர்ந்த முன்னகர்வில் எங்கள் தெரு அடைந்த மாற்றங்கள் எல்லாப் புறநகரங்களிலும் காணக்கூடியதுதான். நான்கைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள்; குளிர் சாதனப் பெட்டிகள் பிதுங்கிய நெருக்கமான கட்டடங்கள்; இடையில் பெருகிப்போன இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்; பால்கனித் தொட்டிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் செடி கொடிகள். கேபிள் டிவிக்கான கரிய இணைப்புக்கம்பிகளின் படையெடுப்புகள். அவசர கதியில் வாழ்க்கை. இவை என் ஞாபகங்களை கேள்விக்குரியதாக்கிவிட்டன.

நகரப்பகுதிகளில் வளர்ந்தவர்களைக் காட்டிலும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குக் காலம் கொண்டுவரும் மாற்றங்களின் பரிமாணம் பன்மடங்காகத் தெரியும். அவர்களுக்கு ஊரே தொலைந்து போய்விடுகிறது. ஆனால், உருமாறிய ஒவ்வொரு ஊரும் அதில் வாழ்ந்தவர்களின் நினைவுகளில் "தன்னைச் சிதறடித்துக் கொண்டுவிடுகிறது" என்பதுதான் உண்மை. அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொக்கிஷம் போலப் புதைந்து தன்னை பத்திரப்படுத்திக் கொள்கிறது. எத்தனை தூரம் சென்றாலும் தொடர்ந்து வருகிறது. இந்த தரிசனத்தின் ஆழத்தில்தான் 'நெடுங்குருதி' பிறந்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

தற்காலத்திய நாவல்களுள் மிகவும் முக்கியமான நாவலாகவும், எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளில் மிகவும் சிறந்ததாகவும் இது கருதப்படுகிறது. இந்த நாவலுக்கு இருக்கும் ஒரு தனித்துவத்தை அறிமுகத்தின் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். அதன் வெளிப்பூச்சற்ற எளிமையான சித்தரிப்புத்தான் அது. எந்த ஒரு செயற்கைத்தனமும் இல்லாமல் ஒரு விவரணப்படம் போல, நெடுங்குருதி படர்ந்து விரிகிறது. ஆசிரியரின் குறுக்கீடு சற்றுமில்லாத நாவல் இது. எழுத்து, மிக அரிதாய், இங்கே ஒரு புகைப்படக் கருவியாய் மட்டுமே இயங்கி வெயில் ஊடுருவும் நீர்த்தேக்கம் போல, வேம்பலை கிராமத்தையும், அதன் மனிதர்களையும், நிகழ்வுகளையும் காட்டிவிட்டுப் போகிறது. வாசகனை வசீகரிக்க இது ஒன்றே போதும். ஒப்பிட வேண்டுமென்றால், கி.ராஜநாராயணனின் 'கோபல்லபுரத்து மக்கள்' போல வேம்பலையின் மக்களும் இயல்பிலிருந்து சற்றும் பிசகாமல் வாழ்ந்து போகிறார்கள். இனி நாவலின் கதைக்கு வருவோம்.

வேம்பலை பிறந்து, வேர்பிடித்து, உருமாறி, முடிவின்றிச் சிதறிச் சிதைந்துபோகிறது. இருந்தும் அதன் உயிர்ப்பு, களவுக்குப் பெயர்போன வேம்பர்களின் தெருவில் தகிக்கும் வெயிலாய் இன்னும் மிச்சமிருக்கிறது. நாகுவின் ஞாபகங்களில் வேப்ப மரங்களின் காற்றும், வெக்கை அலையும் தெருக்களும், சாரைசாரையாய் ஊர்விட்டு வெளியேறும் எறும்புகளுமாய் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. திண்ணையைத் தாண்டாத ஆதிலட்சுமிக்கு எங்கிருந்தோ மாங்காய்ச் சுவையூட்டும் கற்களைத் தருவிக்கிறது. பக்கீரின் மனைவி மகள்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வானத்தில் அலையும் சென்னம்மாவின் ஆவியாய் தணியாத தாகம் கொண்டு மண்ணை வறள வைக்கிறது. நாகு வேம்பலையை விட நினைத்த போதும், அது அவனை விடாது பற்றிக்கொண்டு அவனது குடும்பத்தையே தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்கிறது. அவனது சந்ததிகள் வளர வளர அவர்களையும் தன்னுடன் விலங்கிட்டுப் பிணைத்துக்கொள்கிறது. நாகுவின் குடும்பம் என்றில்லை, ஆதிலட்சுமி, காயாம்பூ, சென்னம்மா ஏன், சிங்கிக்கிழவனையும் கூடத் தன்னடியிலேயே நிலை கொள்ளும்படிச் செய்துவிடுகிறது. வேம்பர்கள் அனைவரையுமே தன் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் இழுத்துக்கொள்கிறது. என்றோ வருகைதரும் பரதேசிகளைக் கூட விட்டு வைக்காமல் தனது ஊமை ரகசியங்களைக் காட்டி ஈர்த்துவிடுகிறது.

நாகுவின் அய்யா வேட்டைக்கு உதவும் என்று வைத்திருந்த சிப்பிப்பாறை நாய், அக்காள் நீலா நீர் சேந்தும்போது கிடைத்த மை, திண்ணையைத் தாண்ட முடியாத ஆதிலட்சுமியின் விசித்திரமான ஆரூடங்கள், கண்டுபிடிப்புகள், ஊருக்கு வெளியே சுண்ணாம்பு ஓடையில் பார்த்த மயில், நெட்டைப் பனைகள், பூக்கவும் காய்க்கவும் மறந்த ஊமை வேம்பு என வேம்பலையில் நாகுவின் பால்யகாலம் (நாவலின் முதல் பகுதி) அசைபோடக்கூடிய அனுபவங்களுடன் இருக்கிறது. ரத்னாவதி - அவள் அத்தை இருவருக்குமான நிபந்தனையற்ற உறவு, நாகுவின் மேல் அவள் வைத்த காதல், கோவில் கோபுரத்திலிருந்து அவளைப் பார்த்தபடி நிற்கும் கந்தர்வன், தவளைகளிடம் பேசும் அவள் மகன் திருமலை, பூபாலனுடன் நிலைக்காத அவளது மணவாழ்க்கை என்று இரண்டாம் பகுதி இலக்கற்ற வாழ்க்கையைப் போல அலைகிறது. தேவனிடம் மிகுந்த பக்தி கொண்ட லியோனில் சார், சமூகத்தின் எந்த கட்டிலும் வாழத் தயங்காத ஜெயராணி, நாகுவின் மனைவி மல்லிகாவும் மகள் வசந்தாவும் உள்ளாகும் கஷ்டங்கள், திருமலை, ரத்னாவதியின் குழப்பங்கள், சந்திக்க நேரும் கொடூரங்களுக்கான கேள்விகள் என நாவலின் கடைசி பகுதிகள் வாழ்க்கை எனும் முடிவுறாத ஓவியத்தைத் தொடர்ந்து தீட்ட முயல்கின்றன.

நகரத்தின் அதிவேகச் சுழலுக்குள் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு இதில் காணக்கிடைக்கும் கிராமத்து வாழ்க்கை முற்றிலும் வேறு கிரகத்தில் நடப்பது போன்ற பிரமையைத் தரலாம். பொருளை ஈட்டுதலும், சுயமரியாதையைச் சம்பாதிப்பதிலும் உழைப்பைச் செலவிடும் நகர வாழ்க்கையைத் தாண்டி இப்படிப்பட்ட குறிக்கோள்களே இல்லாமல் மண்ணுடனும் இயற்கையுடனும் ஒன்றிய கிராம வாழ்முறை வியப்பிலாழ்த்தக்கூடியது. நாம் கடந்து வந்த தொலைவைப் பன்மடங்காக்கிப் பூதாகாரமாக்கக்கூடியது. எல்லாரையும் போல இவர்களுக்கும் சிக்கல்கள், சண்டைகள், துன்பங்கள், மரணங்கள் என்று வாழ்வின் குருதிப் பெருக்கெடுக்கும் தருணங்கள் பொதுதான். இருந்தும் இவற்றிற்கு நடுவில் இந்நாவலில் வாழ்வின் எளிமை, அழகுகூடித் தான் அனுபவிக்கக் கிடைக்கிறது.

கிராமத்தில் வாழும் ஒரு சிலரின் வாழ்க்கையை 400 பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா? அதைத் தாண்டியும் வாழ்க்கை என்னவோ எப்போதும் அடையமுடியாத கடலைத் தேடிப் பாய்ந்தோடியபடியே இருக்கிறது. எத்தனை நாவல்கள் எழுதினாலும் வாசித்தாலும் தீராத தாகமாய் அது வளர்ந்தபடியே இருக்கிறது. 'நெடுங்குருதி'யில் அதன் சிறு பகுதி துல்லியமாய் பிரதிபலித்துக் கொண்டிருப்பது உண்மை.

நெடுங்குருதி
எஸ்.ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம்
டிசம்பர் 2003
uyirmmai@yahoo.co.in

மனுபாரதி

© TamilOnline.com