காளான், பட்டாணி பிரியாணி
தேவையான பொருட்கள்

காளான் (நறுக்கியது) - 12
பட்டாணி (வேக வைத்தது) - 1/2 கிண்ணம்
பாசுமதி அசிரி - 1 1/2 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
வெங்காயம் (பெரியது) - 1
கிராம்பு - 6
பட்டை - 6
ஏலக்காய் (பெரியது) - 3
ஏலக்காய் (சிறியது) - 3
தக்காளி (நறுக்கியது) - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குங்குமப்பூ அல்லது மஞ்சள் நிறம் - சிறிதளவு

அலங்கரிக்க

ஒரு வெங்காயத்தை வட்டங்களாக நறுக்கி, பொன்னிறமாகப் பொரித்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

அரிசியை நன்றாகக் கழுவி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பாதி நெய்யை வாணலியில் ஊற்றி, அதில் பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய், 3 கிராம்பு, 3 பட்டை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதில் அரிசியைப் போட்டு இரண்டு நிமிடங்கள் ஈரம் போக வதக்கவும்.

பின் 2 1/2 கிண்ணம், கொதிக்கும் நீர்விட்டு, உப்புப் போட்டு மூடி வேக வைக்கவும். சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேண்டும். அதில் சிறிதளவு நீரில் குங்குமப்பூவைக் கரைத்து விட்டுக் கலக்கவும்.

இன்னொரு வாணலியில் மீதமுள்ள நெய்யில், பாக்கி உள்ள கிராம்பு, பட்டை இவற்றைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளி, மற்றும் மீதமுள்ள பொருட்களைப் போட்டு நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். காளானைச் சேர்த்து வேகும்வரை வதக்கவும். தேவையானால் சிறிது நீர் சேர்க்கவும். பட்டாணியைச் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.

ஒரு கண்ணாடி பேக்கிங் டிஷ்ஷில் வெந்த சாதத்தில் பாதியைப் பரப்பவும். அதன் மேல் காளான், பட்டாணிக் கலவையைப் பரப்பவும். மீதமுள்ள சாதத்தை அதன் மேல் பரப்பி, அலுமினியம் தாள் (foil) கொண்டு மூடவும். 200டிகிரி சூடேற்றப்பட்ட அவனில் (oven) 15 நிமிடங்கள் வைக்கவும்.

வெளியே எடுத்து, பொன்னிறமாகப் பொரித்து வைத்திருக்கும் வெங்காயங்களைக் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

மீனாக்ஷி கணபதி

© TamilOnline.com