SIFA வழங்கிய இலையுதிர்கால இசைத்தொடர்
ஆகஸ்ட் 22, 2004 அன்று சான் ஹோசேவில் நடந்த மஹாராஜபுரம் ராமச்சந்திரன் அவர்களின் கச்சேரி 'தென்னிந்தியக் கவின்கலைகள்' (South India Fine Arts) அமைப்பு வழங்கும் இலையுதிர்கால இசைத் தொடரின் துவக்க நிகழ்வாக அமைந்தது.

கர்நாடக சங்கீதம் இந்த நூற்றாண்டிலும் தொடர்வதற்கான காரணங்களுள் ஒன்று நம்முடைய குரு-சிஷ்ய பாடமுறை. பதிவு செய்யும் வசதிகள் இல்லாத அந்நாட்களில் இந்த முறையில்தான் இசை வளர்ந்தது. இன்றும் இந்தப் பாரம்பரியத்தைக் காக்கும் குடும்பங்களில் ஒன்று மஹாராஜபுரம் குடும்பம். திருவையாறு தியாகப்பிரும்மத்தின் சிஷ்யப் பரம்பரையில் வந்த மஹாராஜபுரம் ராமச்சந்திரன் இவ்வழியில் வந்தவர்.

துவக்கத்தில் பாடிய 'விநாயகா விநாயகா' என்ற கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஸ்துதி கனராகங்களைத் தன்னுள் அடக்கி, அனைத்தும் அந்த கணபதிக்குள் அடக்கம் என்று உணர்த்தியது. தொடர்ந்து வந்த நாட்டைக்குறிஞ்சி, சங்கராபரணம் ராகங் களில் அமைந்த கீர்த்தனைகள் சம்பிர தாயமாக அமைந்திருந்தன. கச்சேரியின் சிறப்பு கல்யாணவசந்தம் ராகத்தில் அமைந்திருந்த பல்லவி. இதில் கல்யாணியையும் வசந்தாவையும் நடுவில் இணைத்த விதம் அவரது புலமையை வெளிப்படுத்தியது.

வாசந்தி, தன்யாசி, மோகன கல்யாணி என இனிய ராகங்களைச் சிறு பாடல்களில் உபயோகித்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் இறுதியில் 'சம்போ ஸ்வயம்போ' பாடலில் பக்திப் பரவசமூட்டினார். தனியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் மிருதங்கம் வாசித்த மன்னார்குடி ஈஸ்வரன். வயலின் வாசிப்பில் கச்சேரிக்கு மெரு கூட்டியவர் டெல்லி சுந்தரராஜன். தொடர்ந்து நடக்கப்போகும் இசை நிகழ்ச்சிகளுக்கு SIFA ரசிகர்களை வரவேற்கிறது.

பத்மப்பிரியன்

© TamilOnline.com