மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இது வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல். ஆனாலும் கொள்கைகளை விவாதிக்காமல் எதிராளி மேல் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. விவாதிக்க வேண்டியவை பல. இருந்தாலும், மிக மிக முக்கியமாக விவாதிக்க வேண்டியது பயங்கரவாதத்தை எதிர்க்கும் அரசின் அணுகுமுறை.

செப்டம்பர் 11 அன்று மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என்று நம்புபவர்கள் பலர். இவர்களுக்கு முற்றுகை மனப்பான்மை. இந்தப் போரில் நாடுகள் மோதவில்லை. இதில் படை வீரர்கள் ஒரு நாட்டைக் கைப்பற்றி எதிரியைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் இதில் எதிரி பயங்கரவாதம். இது இல்லாத இடமில்லை. இதில் தற்பாதுகாப்புக்காக நம் மரபுகளையும், வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பே ஆட்டம் காணும் போது தனிமனித உரிமைகள் பேசுவது மூடத்தனம். இது ஒரு கட்சி.

இந்தக் கட்சிக்கு, மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல், தன்னுடன் இல்லாதவர்கள் எல்லோருமே எதிரிகள்தாம். இந்த முற்றுகை மனப்பான்மை யைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர் களும் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முற்றுகை மனப்பான்மை தற்போது சற்றுத் தணிந்திருந்தாலும், இதுதான் ஒரு கட்சியின் அடித்தளம். இவர்களில் சிலர் தேவைப்பட்டால் இனக்கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். இந்தத் தீவிர மனப்பான்மைக் குக் கடிவாளம் போட்டு, நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன் என்ற உத்தர வாதம் கொடுக்கிறார் அதிபர் புஷ்.

பயங்கரவாதிகள் எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை யாரேனும் மறந்திருந்தால், ரஷ்யாவின் ப்ரெஸ்லான் பள்ளியைக் கைப்பற்றிய செச்னியன் போராளிகள் வெடிகுண்டு வைத்து குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொன்று நமக்கு நினை வுறுத்தி விட்டார்கள். இது பூச்சாண்டியில்லை, உங்கள் குழந்தைகள் போகும் பள்ளி களையும் இந்தப் பாதகர்கள் கைப்பற்றத் தயங்க மாட்டார்கள், இவர்களை ஒழிக்க நாமும் எதையும் செய்யத் தயங்கக்கூடாது என்பதுதான் அதிபர் புஷ்ஷின் வாதம்.

அது சரி, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் இராக் போருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது எதிரணி. பயங்கரவாத எதிர்ப்பு ஒரு போர் என்றால், அந்தப் போரில் நாம் வெற்றி பெறுவதற்காக நம் உரிமைகளை யெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால், அந்தப் போரை வெல்கிறோம் என்பதற்கு என்ன அடையாளம்? பிணைக் கைதிகளின் தலைகளை வெட்டிப் பட மெடுத்து பாக்தாத் சந்தையில் விற்கிறார்களே அதுவா? போர்வீரர்கள்கூடப் போகத் தயங்கும் இராக் நகர்ப்புறங்களா? 80 வயது மூதாட்டிகளையும், முன்னாள் துணை அதிபர் அல் கோரையும் விமானத்தில் ஏறும் முன்னால் தலைகீழாகப் பரிசோதிக்கிறோமே அதுவா? பள்ளிகள், விமான நிலையங்கள், பொது இடங்கள் எல்லாவற்றையுமே போர்ப் பாசறைகளாக மாற்றுகிறோமே அதுவா?

இந்த அணிக்கு என்ன சிக்கல் என்றால், பயங்கரவாதத் தடுப்புப் போர் என்ற போர்வையில் செய்யும் எதையும் தட்டிக் கேட்க முடியாது. கேட்டால், நீங்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு. பயங்கரவாதிகள் மனிதர்களே இல்லை விலங்குகள், அவர்கள் பக்கத்தில் நியாயம் ஏதுமில்லை, இருந்தாலும், அவர்கள் பாதகச் செயல்களால் அந்த நியாயங்களைப் பற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை என்ற வாதத்தை எதிர் கொள்வது எளிதல்ல.

நாகரீக வளர்ச்சி அடைந்த நாடுகள் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர் கொள்வது சிக்கலானது. நமக்கு நம் எதிரிகளைத் தள்ளி நின்று குண்டு வெடித்துப் பூண்டோடு அழிக்கும் வல்லமை உண்டு. நம் பேரழிவு ஆயுதங்களை வைத்து மற்றவர்களை மிரட்டி நமக்குக்கீழ்ப் பணிய வைப்பது நம் பழக்கம். அதனால்தான் எதிரிகள் கையில் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

இந்த வரம்பற்ற வல்லமையுள்ள நம்மை, வழக்கமான ஆயுதங்களாலோ, போர்த் திறமையாலோ தோற்கடிக்க முடியாது என்பது நமது எதிரிகளுக்கும் தெரியும். நாம் குட்டக் குட்ட அவர்கள் குனிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது நமது எதிர் பார்ப்பு. ஆனால், ஏதோ ஒரு வரம்பை நாம் மீறினால் நம் எதிரிகள் தங்கள் மனிதத் தன்மையை இழந்து விலங்குகளாக மாறி விடுகிறார்கள் என்பதை நாம் காண மறுக்கிறோம்.

விமானங்களை ஆயுதங்களாக்கி அலுவலகக் கட்டிடங்களைத் தாக்குவதும், குண்டு வெடித்துப் பள்ளிச் சிறுவர்களைக் கொல்வதும், பிணைக்கைதிகளின் தலைவெட்டு விழாவை விழிமப் பதிவு களில் கண்டு களிப்பதும் மனித இயல் பல்ல. பண்பட்ட எந்த மதமும், எந்த நாகரீகமும், எந்த நாடும் இவற்றைக் கொண்டாடுவதில்லை. ஆனால், இப்போது இந்தச் செயல்களை நாகரீகங்களின் தொட்டில் எனக் கருதப்படும் மெசபடோமியா/இராக் பகுதியில் கண்கூடாகப் பார்க்கிறோம். ஏன் இந்த வீழ்ச்சி?

மேலைநாடுகளைத் தாக்கும் பயங்கர வாதிகள் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள் தாம். அதனால் முஸ்லிம் நாகரீகமே பயங்கரவாதத்தை வளர்க்கிறது, அதைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று குரல்களை வலைப்புலத்தில் காணலாம். இவர்கள் ஏனோ, ஓக்லஹோமா அரசுக் கட்டிடம், கொலம்பைன் பள்ளித் தாக்குதல் கள், ஆந்த்ராக்ஸ் கடிதங்கள் இவற்றிற்கு முஸ்லிம்கள் அல்லாத உள்நாட்டுப் பயங்கரவாதிகள் பொறுப்பு என்பதை மறந்து விடுகிறார்கள்.

செச்னியா தனிநாடு கேட்பவர்களுக்கு ஏன் இந்த வெறி? இதை ரஷ்யப் பத்திரிக்கையாளர் மாஷா கெஸ்ஸன், ஸ்லேட் வலையிதழில் விளக்கியிருந்தார். சோவியத் தலைவர் ஸ்டாலின், 1944-ல், 500,000 செச்னிய மக்களை நாஜிகளுக்கு உடந்தை என்ற குற்றம் சாட்டி சைபீரியாவுக்கு நாடு கடத்தினார். அதில் பாதிக்கு மேற்பட்டோர் வழியிலேயே இறந்தனர். மேலும் பலர் சைபீரியக் குளிரில் மடிந்தனர். 1957ல் தான் அவர்கள் செச்னியாவுக்கு மீண்டனர். சோவியத் யூனியன் உடைந்த போது செச்னியாவில் இருந்த வயது வந்தோரில் பெரும்பான்மை யானோர் சைபீரியச் சிறையில் பிறந்தவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்ட இனம் தன்மானத்தோடு வாழப் போராடும்போது போராட்டத்தை விதிமுறைகளோ நாகரீகமோ கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு மகாத்மா காந்தி போன்ற ஒரு தலைவர் இருக்க வேண்டும்.

கண்ணுக்குக் கண் என்ற பழி வாங்கும் தன்மை உலகையே குருடாக்கி விடும் என்றார் காந்தி. அது முன்னெப்போதையும் விட இப்போது இன்னும் பொருத்தமாகத் தோன்றுகிறது. காந்தி யைப் போல் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்பதை வரும் தலைமுறைகள் நம்புவது கடினம் என்று போற்றினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். உண்மைதான். காந்தி பிறந்தநாளைக் கொண்டாடும் போது மனிதர்களுக்குள் நிலவும் பிணக்குகளுக்கு மனித நேயத்துடன் தீர்வு காண்பதைப் பற்றியும் சற்று சிந்திக்கலாமா?

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com