அக்டோபர் 2004 : வாசகர் கடிதம்
ஜூலை மற்றும் செப்டம்பர் தென்றல் இதழ்களில் ஜே.சி. குமரப்பாவைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுப் பெருந்தொண்டு செய்திருக்கிறீர்கள். ஊரக வளர்ச்சிக்குத் தொண்டுபுரியும் என் போன்றவர்களுக்கு இது மிகுந்த ஊக்கத்தைத் தருவதாக உள்ளது. நான் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளேன். மீண்டும் இந்தியா திரும்பியதும் என் பணியைத் தொடருவேன். சென்ற இதழில் குமரப்பாவுடன் பணியாற்றியதைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நடராசன் அவர்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

எஸ். ராமமூர்த்தி,
மவுண்டன்வியூ, கலி.
******

செப்டம்பர், 2004 இதழில் விஜய் அமிர்தராஜின் நேர்காணல் படித்தேன். அதில் விளையாட்டுத்துறையில் அரசு குறுக்கிடக்கூடாது என்கிற குறிப்பைப் பார்த்தேன். அரசு பொதுவாக மக்களுக்குச் செய்ய வேண்டிய சகல செளகரியங்களைச் செய்யத்தான் இருக்கிறது. தனிப்பட்டவர்களைத் திருப்தி பண்ண அரசு இல்லை. ஆனால் அளவுக்கு மேல் போனால் ஆபத்துதான். தனிப்பட்ட மனிதனைவிட அரசுக்கு அதிகப் பொறுப்பும், கடமையும் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவிருப்பம்.

அட்லாண்டா ராஜன்,
அட்லாண்டா, ஜோர்ஜா
******

நல்ல யதார்த்தமான சம்பவங்களைக் கொண்ட கதைத் தொகுப்பு. அமெரிக்காவில் நல்ல தரமான புத்தகம் படித்த திருப்தி. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

கணேசன் சங்கரன்
******

செப்டம்பர் தென்றலில் மணிவண்ணனின் புழைக்கடைப் பக்கத்தில் 'மனம் இருந்தால் வழி உண்டு' என்று வடமொழி சேர்க்காமல் மாற்றி எழுதியது பாராட்டத்தக்கது. நாம் பேசுவது தமிழா, ஆங்கிலமா, வடமொழியா என்று தெரியாமல், கவனிக்காமல் கலந்து பேசும் இந்நாளில் கலப்பில்லாமல் தமிழ் எழுத முடியும் என்று காண்பிக்கும் தென்றலின் தொண்டு பாராட்டத்தக்கது.

மீரா சிவக்குமார்,
கலிஃபோர்னியா
******

எனது 74 ஆண்டு வாழ்க்கையில் 1955ம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் படிக்கும் பொழுது முதன்முதலாக கல்லூரியில் நடந்த கதை கட்டுரைப் போட்டியில் கதை எழுதினேன். அது கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டது. அதன்பின்பு இப்பொழுதுதான் தென்றல் இதழுக்கு பழம்பெரும் காந்தியவாதி மறைந்த ஜே.சி. குமரப்பா அவர்களுடன் இருந்த காலத்தில் நான் பெற்ற மறக்க முடியாத அனுபவம் பற்றி எழுதியிருக்கிறேன். அதைத் தென்றல் இதழில் வெளியிட்டதற்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க. நடராசன்,
சான் ஹோசே

******


மின்னல் போல் சிறிதான ஒரு வரி தான். ஆனால் ஒரு துளி நொடியிலும் மின்னல் எப்படி அகண்ட வானத்தைப் பிரகாசமாக்கு கிறதோ அதுபோல்தான் புழைக்கடைப் பக்கத்தில் நான் படித்த ஹென்றி டேவிட் தொரோ எப்படி காந்தியடிகளுக்கு 'ஒத்துழையாமை இயக்க' எண்ணம் வர உந்துகோலாக இருந்தார் என்ற சிறு செய்தி.

அமெரிக்காவில் விழுது விட்ட இந்திய நெஞ்சங்கள், அமெரிக்காவை வேற்று மண் என்று நினைத்திட வேண்டியதில்லை. இது காந்தியடிகளுக்கு ஒரு விஷயத்தில் கிரியா சக்தியாக இருந்த தொரோ அவதரித்த இடம். ஹென்றி டேவிட் தொரோ என்ற அக்கினி மனிதனை நாங்கள் அறிந்து கொள்ள புழைக்கடைப்பக்கத்தில் தீக்குச்சி கிழித்தது போல் நச்சென்று சில வரி எழுதிய மணிவண்ணனுக்கு நன்றி.

கோவிந்த், பிரபா, காயத்ரி
சான் ஹோசே
******

தென்றலில் வரும் குறுக்கெழுத்துக்கு விடை கண்டுபிடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். ஹிந்து செய்தித் தாளில் வரும் ஆங்கில குறுக்கெழுத்துப் போல் மிகவும் 'தொழில்முறை' ஆக (கட்டங்களின் சமச்சீர், சொல்விளையாட்டு ஆகியன) உள்ளது. இவற்றை வடிவமைக்க நீங்கள் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள்.

பாலசுப்ரமணியன் S
******

கும்பகோணம் சோகம் பற்றிய 'ஆசிரியர் பக்கம்' ஒரு நல்ல சமூக சிந்தனை. பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சென்று சேர வேண்டிய செய்தி. கந்தர்வன் என்ற இலக்கிய ஜாம்பவானுக்கு விலை மதிப்பற்ற பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

புகாரியின் கவிதைகள் கங்கையாய் - காவிரியாய் மனதில் பாய்கின்றன. கும்பகோணப் 'பாவிகளுக்கு' அவரது கவிதை ஒரு சவுக்கடி. இலக்கியத்தரத்தோடு செறிந்த பெரியண்ணனின் தொடர் படைப்பு இதழின் கனத்தைக் கூட்டுகிறது.

அவிநாசிலிங்கம் செட்டியார் அய்யாவின் தமிழ்ப் பணி குறித்த மதுசூதனின் கட்டுரை வளம் மிக்கது. (நானும் அய்யாவின் வித்தியாலயத்தில் படித்தவன்).

புழைக்கடைப்பக்கம் அர்த்தமுள்ள பக்கம். சமூக அதிர்வுகளை ஏற்படுத்தவல்ல சிந்தனைப் பக்கம்.

வெ. ஜகநாதன்
******

சிகாகோவில் என் மகன் வீட்டில் காலடி வைத்தவுடன் தமிழ்ப் பத்திரிகை இல்லாமல் எப்படிப் பொழுது போகப் போகிறதோ என்று கவலைப்பட்டபோது என் மருமகள் ''நீங்கள் கவலைப்படாதீங்கம்மா. நான் உங்களுக்காகத் தென்றல் பத்திரிகை வைத்திருக்கிறேன்'' என்று சொல்லி அவள் எனக்காகப் பாதுகாத்து வைத்திருந்த தென்றல் இதழ்களைக் கொடுத்தபோது என் பேத்தி நிவேதாவின் மழலைச்சொல் கேட்டு மகிழ்ந்ததைப் போல் பேரானந்தம் கொண்டேன்.

இதழ்களைப் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். உண்மையிலேயே தென்றல் இதமான இலக்கிய நயம் கொண்ட அற்புதமான பத்திரிகை. தென்றல் போன்றதோர் பத்திரிகை தமிழர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

நான் இந்தியா திரும்பியதும் அமெரிக்காவைப் பற்றிப் பேசுவதைவிடத் தென்றல் இதழைப் பற்றி பேசும் அளவுதான் அதிகமாக இருக்கும்!

எஸ். விஜயா சீனிவாசன்,
சிகாகோ

© TamilOnline.com