கனவொன்று நனவாகிறது!
140 ஆண்டுகளாக எல்லாத் தரப்பினராலும் பேசப்பட்டு வந்த, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் ஜலச்சந்தி வழியாக வங்கக் கடலுக்குக் கப்பல்கள் செல்ல வழிவகுக்கிறது இத்திட்டம். சமீபத்தில் நடந்த பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியமைச்சரவைக் கூட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த ஆதம்ஸ் பாலம் (இராமாயண காலத்துப் பாலம் என்று NASA-வால் கணிக்கப்பட்டது) பகுதியில் கால்வாயைத் தோண்டிக் கடலை ஆழப்படுத்துவதன் மூலம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேரடியாகக் கப்பல்களை இயக்க முடியும். இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் 400 கடல்-மைல்கள் (Nautical Miles) தொலைவு பயணதூரம் குறையும். இதனால் பயண நேரமும் 36 மணிநேரம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியக் கப்பல் கழகமும், தூத்துக்குடித் துறைமுகப் பொறுப்புக் கழகமும் இணைந்து தலா 50 கோடி ரூபாய் வழங்கவிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் மற்றும் டிசிஐ ஆகியவை தலா 30 கோடி ரூபாயை வழங்கவிருக்கின்றன. இதன் மூலம் 350 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். மீதமுள்ள தொகையை அரசே ஒதுக்கவிருக்கிறது.

இத்திட்டத்திற்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 'சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்கிற புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 800 கோடி ரூபாய். இன்று எல்லா தமிழகக்கட்சிகளும் இத்திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அறிக்கைவிடுகிற நிலையில் இதன் ஆரம்பகர்த்தா யார் என்றால் ஏ.டி. கமாண்டர் டெய்லர் என்கிற நீர்வழிப்பாதை சிந்தனையாளர்தான்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com