புவனா ஒரு புதிர்
என்ன ராகவன் அமெரிக்கா டிரிப் எல்லாம் எப்படி இருந்தது? பையன் ரமேஷ் செளக்கியமா?" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் சர்மா. ராகவனின் உயிர் நண்பர்.

''வாங்க வாங்க. முந்தாநாள்தான் வந்தோம். ஜெட் லாக் ஆளைப் போட்டு அசத்தறது.

அமெரிக்காவா... சொர்க்கபுரிதான் போங்க. ரொம்ப நல்லாத்தான் இருக்கு. எம் பையன் ரமேஷ் ஓஹோன்னு இருக்கான். சும்மா பெருமையாச் சொல்றேன்று நினைக்க வேண்டாம். அமர்க்களமா, ராஜபோகமா இருக்கான்.''

''ரொம்பக் குளிர்னு சொல்லிக்கறாங்களே உங்களால தாங்க முடிஞ்சதா?'' மெல்ல வினவினார் சர்மா.

''சே, சே! குளிராவது ஒண்ணாவது, அங்கே அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.என் பிள்ளை வீட்டில என்ன எல்லா வீடுகளிலும் குளிப்பறையிலகூட கதகதன்னு ஹீட்டிங் போயிட்டிருக்கும். பிரமாதமா வீடு வாங்கியிருக்கான். நியூ ஜெர்சியில மூணு படுக்கையறை. பேஸ்மெண்ட் அற்புதமா இருக்கு. வீட்டுப் பக்கத்திலேயே பூங்கா, சுத்தி ஏகப்பட்ட இந்தியர்கள் இருக்காங்க. மளிகைக் கடையில பச்சை பச்சையா காய்கறி, நம்ப ஊர்ல வெண்டைக்காய் பொறுக்கி ஒடச்சு வாங்க முடியுமா? 'வாங்கற மூஞ்சியைப் பாரு, எடு கையை'ன்னு அடிக்காத குறையா விரட்டுவாங்களே. அமெரிக்காவிலே என்ன மரியாதை. ஜனங்க எப்படிப் பழகறாங்க. எம் மருமகளும் வேலைக்குப் போறா. ஒரு குறையும் இல்லை. கூடிய சீக்கிரம் எங்களையும் அங்கேயே அழைச்சிக்கப் போறான். ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கோம்னு தான் சொல்லணும். சும்மா சொல்றதுக்கு இல்லே. அமெரிக்காவுக்கு ஈடே கிடையாது'' மூச்சுவிடாமல் பெருமை பொங்கப் பேசி முடித்தார் ராகவன்.

''ஏ புவனா! சர்மா சாருக்கு நாம கொண்டு வந்த சாக்லேட், பாதாம் எல்லாம் எடுத்துக் கொடேன்'' கையோடு ஒரு உத்தரவும் போட்டார்.

ஒரு ஜிப்லாக் கவரில் கொஞ்சம் எல்லாம் போட்டுக் கொண்டு வந்த புவனா சர்மா கையில் கொடுத்துவிட்டு ராகவனைச் சுட்டு எரிப்பது போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றாள். சர்மா அரைமணி பேசிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து சென்றார்.

அவ்வளவுதான் புயல்வேகத்தில் ஹாலுக்கு வந்த புவனா சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தாள். ''என்னங்க உங்களுக்குக் கொஞ்சமாவது யோசனை இருக்கா? அவரோட பிள்ளையும் நம்ப ரமேஷ¥ம் ஒண்ணாத்தானே கான்பூர் ஐஐடியில படிச்சாங்க. அவன் இங்கேயே ஏதோ ஒரு சாதாரணக் கம்பெனியில் சுமார் சம்பளத்தில் இருக்கான். இதோட மூணு கம்பெனி மாறிவிட்டான். அவர்கிட்ட இப்படி விலாவாரியாப் பேசி ரமேஷைப் பத்திப் பெருமை அடிச்சுப்பாங்களா? ஒருத்தர் கண் போல் இருக்குமா? என்னடா நம்ம பையனும் அப்படி இல்லையேன்னு அவர் நெனச்சிக்க மாட்டாரா?'' படபடவென்று ஊசிப்பட்டாசாக வெடித்தாள்.

''சரி சரி விடு. ஏதோ உள்ளது உள்ளபடி இருக்கறதைத்தானே சொன்னேன். சர்மா ரொம்ப நல்ல மாதிரி. அப்படியெல்லாம் நினைச்சுக் கம்ப்பேர் பண்ற ஆள் இல்லை. நீ சும்மா ஒண்ணுமில்லாத்துக்குப் புலம்பாதே. எனக்கு எல்லாம் தெரியும்.''

மறுநாள் தூரத்து உறவுக்காரர் மணியன் வந்தார்.

''என்ன ராகவன் அமெரிக்கா ரிடர்ன் ஆயிட்டீங்க. எப்படி இருந்தது உங்க அமெரிக்க வாழ்க்கை? நல்ல அனுபவிச்சீங்களா?'' என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

''அடேடே மணியனா! வா வா. வந்து உட்காருப்பா.''

''ஹ¥ம்... என்னத்தைச் சொல்றது. அமெரிக்கா இப்போ பழைய மாதிரி இல்லை. அதிலேயும் செப்டம்பர் பதினொண்ணுக்கப்புறம் நிலைமையே தலைகீழாப் போயிட்டுது. பொருளாதாரம் ரொம்பப் படுத்துப்போச்சு. பாதி கம்பெனிகள் மூடிடுச்சு. சில கம்பெனிகள் இந்தியாவுக்கு வந்திட்டிருக்கு. பாவம் சில பேர் இந்தியாவுக்கே மூட்டை கட்டிட்டு வந்திட்டிருக்காங்க. என் பிள்ளை ரமேஷ¤க்கே வேலை எந்த நிமிஷம் போயிடுமோன்னு ஆட்டம் கண்டிருக்காம். எல்லாம் கேட்டால் பரிதாபமாக இருக்கு'' ஒரு பாட்டம் குறை கூறிவிட்டு ஓரக்கண்ணால் புவனா இருக்கும் அறைப் பக்கம் பெருமை பொங்கப் பார்த்தார்.

"த்சொ த்சொ. அட கஷ்டகாலமே. நானும் கொஞ்சம் கேள்விப்பட்டேன். இவ்வளவு மோசமா? ரொம்ப அநியாயமா இல்ல இருக்கு. ஐயோ பாவம்'' சிறிது வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு மணியன் எழுந்து போனார்.

''என்ன புவனா நான் சொன்னதெல்லாம் கேட்டியா!'' கேட்டுக் கொண்டே இருக்கையில் சீறியபடி வெளியே வந்தாள் புவனா.

''ஐயோ! சரியான மரமண்டைதான் ஒங்களுக்கு. மணியனோட பிள்ளை நம்ப ரமேஷைவிட ஒரு வருஷம் ஜூனியர் இல்லையா? அவன் இப்போ ஆஸ்திரேலியாவில பெரிய கம்பெனியில மானேஜராம். ரொம்ப ஒசத்தியா இருக்கானாம். லட்ச லட்சமாய் சம்பாதிக்கறானாம். அவர்கிட்டப் போய் நம்ப ரமேஷ¤க்கு வேலையே ஆட்டங்கண்டிருக்கு அப்படி இப்படின்னு மட்டமாப் பேசியிருக்கீங்களே. உங்களை என்ன சொல்றதுன்னே எனக்குப் புரியலை. எனக்குன்னு இப்படி ஒரு ரெண்டுங் கெட்டானா சாமர்த்தியமே இல்லாத ஒரு புருஷன். எல்லாம் என் தலையெத்து'' ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள் புவனா.

ராகவன் விக்கித்துப் போய் மிரள மிரள விழித்தார்.

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com