குடிசெலவு
விமானம் இறங்கியபோது காலை ஏழு மணி. ரொம்பத் தொல்லை கொடுத்த வெள்ளைச்சட்டை அதிகாரிகளைச் சமாளித்து, வாடகையூர்தி பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது.

நிறையக் குழாய்களைப் பொருத்தியிருந்தார்கள். மூக்கில் ஆக்ஸிஜன் முகமூடி. பலரது இரத்தம் கலந்ததாலோ என்னவோ அப்பாவின் கைகள் கறுத்துப் போயிருந்தன. கண்கள் திறந்திருந்தன, முகட்டைப் பார்த்தவாறு.

இரண்டுபேருமே என் வரவை எதிர்பார்க்கவில்லை. அம்மா முகம் மூடி அழுதார். அப்பா பிரயத்தனப்பட்டு கைகளைப் பிடித்துக்கொண்டார், ரொம்ப இறுக்கமாக, இனிமேல் போய்விடாதே என்று. பதினெட்டு வருடங்களுக்கு முன், இதே கைகள் தள்ளாத குறையாக, நாட்டை, வீட்டை விட்டு விரட்டியது நினைவுக்கு வந்தது.

நாலு மணியளவில் உயிர் பிரிந்தது. எனது வரவுக்காகக் காத்திருந்ததுபோல். சத்தமிருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக. மூக்கைத் தழுவியிருந்த ஆக்ஸிஜன் கண்ணாடி மூடிக்குள் நீர்ப்புகை குறைந்த போதுதான் இறப்பைக் கவனித்தோம். கண்கள் இன்னமும் முகட்டைப் பார்த்தவாறு.

எல்லோரும் வந்தார்கள். ஊரே வந்தது.

அவள்கூட வந்திருந்தாள், கிணற்றுக்குள் கல்லெறிந்து விளையாடிய முகம் முதிர்ந்து ஒளிர்ந்திருந்தது. என்னை அந்நியன் போல பார்த்தாள். கண்களில் காதல் பிரிந்திருந்தது, 'நாங்களெல்லாம் போராடிக் கஷ்டப்பட நீ மட்டும் உயிர் பிழைக்க ஓடிவிட்டாயே' என்ற குற்றச்சாட்டில்.

ஒரு பின் மதியத்தில் அம்மாவின் கதறல்களைத் தாண்டி, நெஞ்சைப் பிடித்து ஏங்கி நின்ற அக்காவைத் தாண்டி ஒரு இருண்ட பெட்டிக்குள், அப்பாவைத் தீ ஆட்கொண்டது.

மூன்று நாட்கள் கழித்து, எட்டுச் செலவின் பின் அவளைப் பார்க்கச் சென்றேன். பாடசாலை ஒழுங்கைக்குப் பின் அவள் வீடிருந்தது, வளர்ந்து நின்ற பனைமர வளவுக்குள். முன் திண்ணையில் அவளது அம்மா. எங்கோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

'அம்மா என்னைத் திரியுதோ? நான்தான் கஜன்.'

'யாரு..?' வெகு கஷ்டப்பட்டு எழும்பி வந்து முகத்தை கைகளில் ஏந்தி கூர்ந்து பார்த்தார். எனது முகம் ஞாபகம் வந்துவிட்டதில் தோன்றிய ஒரு சிறு பிரகாசம் தோன்றிய கணத்திலேயே சட்டென்று மறைந்தது. பின் கடகடவென திரும்பிப்போய் திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

'யாரைப் பார்க்க வந்த..? எங்கட பிணச் சாம்பலை நெத்தியில பூச வந்தியா?' வார்த்தைகள் தைத்தன பூவரசு முள்ளாக.

வீட்டுக்குள் இருந்து அவள் வந்தாள். 'கோவிச்சுக் கொள்ளாதீங்க. அம்மா அப்படித்தான். எங்க கஷ்டத்துக்கெல்லாம் மாற்றார்தான் காரணம் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறார். உள்ளே வாங்கோ..'

முன்கூடம் மெலிதான நாற்காலிகளைத் தாங்கி நின்றது. வலது பக்கச் சுவற்றில் இரண்டு படங்கள். இரண்டு சிறுவர்கள். இராணுவ உடையில். செருகியிருந்த செவ்வரத்தம் பூக்கள் வாடியிருந்தன. நேற்று வைத்தவையாக்கும்.

'பன்னிரண்டுல இயக்கத்தில் சேர்ந்து பதினைந்திலேயே போய்ச் சேர்ந்துட்டாங்க.' அவள் முகத்தில் சோகம் பழசுப்பட்டு, இறுகி, பெருமிதம் மட்டும் மிஞ்சி குடியிருந்தது.

வீட்டின் உள்ளே இருந்து ஒருவன் வந்தான், மேல் சட்டையின்றி. அக்கறையில்லாத தாடி வளர்ந்திருந்தது.

'கஜனா? வா...வா..'

'அட! சிறீ..?' எனது நண்பன் அவளது கணவன்.

'மன்னிக்கணும் கஜன். உங்க அப்பா செத்ததுக்கு வரமுடியல்ல. இங்க சிறுவர் மீள்வாழ்வு முகாமில் சுவர் ஒன்று இடிஞ்சு விழுந்து ஒரே பாடாய்ப் போயிட்டுது. அதுதான் இங்கேயே இருந்து சனங்களுக்கு உதவி செய்யலாமென்று இவளைமட்டும் அனுப்பினேன்.'

ஒரு சலனமும் இன்றி எது முக்கியம் என்பதை சிறீ சொல்லாமல் சொன்னான்.

இந்த வீட்டில், இந்த இதயங்களில் எனக்கு இடம் இல்லையென்றது தெளிவாகத் தெரிந்தது. ஒரு பக்கம் மரணித்துவிட்ட தியாகிகள், மற்றப் பக்கம் உயிர்வாழும் தியாகிகள். நான் மட்டும் கடல் கடந்து ஓடித் தப்பித்துவிட்ட குற்றவாளியாகக் குறுகி நின்றேன்.

பஸ் நிலையம் வரை சிறீ என்னுடன் நடந்து வந்தான். சைக்கிளை உருட்டியபடி. எதுவும் பேசவில்லை. என்னைப் பற்றி, என் வெளிநாட்டுக் குடும்பத்தைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. பாடசாலை வளைவில் திரும்பும்போது நாங்கள் இருவரும் தினமும் அமர்ந்து கதையளக்கும் மதிற்சுவர் எதிர்ப்பட்டது, இப்போது கொஞ்சம் உடைந்து போய். பழைய ஆவலோடு அவனைப் பார்த்தேன்.

'எங்களுக்கு ஞாபகங்கள் மரத்திட்டுது கஜன். நினைத்து வீணாக வடிக்கிற கண்ணீரை மிச்சம் பிடிச்சு நாங்கள் எதிர்காலம் வளர்க்கப் போறோம்.'

இறுகிய பாவனையில் சொன்னான், உனக்கும் இந்த மண்ணுக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லாததுபோல்.

பஸ்ஸில் ஏறியபின் கைகாட்டத் திரும்பினேன். சிறீ ஏற்கனவே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு சிறுவர் முகாம் பக்கம் சென்று கொண்டிருந்தான்.

அப்பா செத்த சோகத்தைவிட அந்நியச் சோகம் நிறைய வலித்தது.

செந்திலான்

© TamilOnline.com