மீனாக்ஸ்
நிலாத் தேடல்

ஏதேனும்
நீர்ப்பரப்பின் சலனங்கள் மிக்க திரையில்
முற்றுப் பெறாத ஓர் ஓவியமாய்
மட்டும் தான்
நிலவைக் கண்டிருக்கிறேன்
இதுவரை நான்.

அம்மாவின் சேலைபிடித்துப்
பின் தொடர்ந்து
கால் நனைத்த
கோயில் தெப்பக்குளப் படிக்கட்டு.

விடுமுறை இரவுகளில்
அம்மாவழித் தாத்தாவின் வயக்காட்டில்
மாமன்மார் நால்வர்
நீச்சல் கற்றுக் கொடுத்த
கிணறு.

பக்கத்து வீட்டுப்
பரிமளம் அக்காவும்
எதிர் வீட்டு
ராசு மாமாவும்
ஊரறியாமல் சந்தித்துக் கொண்டதை
அவர்களறியாமல் மரமேறிப் பார்த்த
ஆற்றோரம்.

நானும் அவளும்
முகம் மட்டும் பார்த்துக்
களைக்காமல் களித்திருந்த
கடற்கரை.

"நான் உன்னைக் காதலிக்கவில்லை"
என்று அவள்
தந்தையின் முன்னால்
பொய் சொன்னபோது
காட்டிக் கொடுத்த
அவளது கண்ணீர் மிக்க கண்கள்.

அதற்குப் பின்
அண்ணாந்து நிலவைப் பார்க்க
என்றுமே பிடித்ததில்லை
எனக்கு.

*****


அனுபவங்கள்

பருவக் கோளாறினைச்
சிலர் காதலென்பதும்
சிலர் காமமென்பதும்
இவ்விரண்டுமே
சொந்தமாய்
அனுபவித்துப் புரியத் தக்கவை..

புதுமைகளைச்
சிலர் புரட்சிகள் என்பதும்
சிலர் வீழ்ச்சிகள் என்பதும்
இவ்விரண்டுமே
சொந்தமாய்
அனுபவித்துத் தெளியத் தக்கவை..

பெண்களைச்
சிலர் தேவதைகள் என்பதும்
சிலர் ராட்சசிகள் என்பதும்
இவ்விரண்டுமே
சொந்தமாய்
அனுபவித்து அறியத் தக்கவை...

தெய்வங்களைச்
சிலர் கற்பனைகள் என்பதும்
சிலர் நற்றுணைகள் என்பதும்
இவ்விரண்டுமே
சொந்தமாய்
அனுபவித்து உணரத் தக்கவை...

அனுபவங்களைக் கூடச்
சிலர் தலைவிதி என்பதும்
சிலர் ஆசான்கள் என்பதும்
இவ்விரண்டுமே
சொந்தமாய்
அனுபவித்து விளங்கத் தக்கவையாம்!

*****


தனிமையைத் தொலைத்தவன்

எனக்குரிய பல பிழைகளில்
இதுவும் ஒன்று:
தனிமைக்குத் துணை சேர்த்துக் கொள்வது.

பிடித்த கவிஞரின் தொகுப்பு

நானும் அவளும்
இதயங்களைப்
பரிமாறிக் கொண்ட
பழைய கடிதங்கள்

ஒரு குடுவையும்
அது நிறைய பொன்னிற திரவமும்
ஒரு கோப்பையும்

ஒரு மழைநாளின் பின்னிரவில்
உடைந்த
(நான் உடைத்த)
கண்ணாடி வளையல்களின்
துண்டுகள்

முதல் காதலுக்கும்
முதல் பிரிவுக்குமாய்
நான் எழுதிய என்
முதல் கவிதைகள்

இப்படி எதையேனும்
எடுத்துக் கொண்டு தான்
கொண்டாடப் போகிறேன்
என் தனிமைகளை.
அல்ல
என் பன்மைகளை.

ஆனாலும்
ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
ஓர் உண்மையை.

எப்போதும்
போதுமானதாயிருப்பதில்லை
என் தனிமைக்கு
நான் மட்டும்.

*****


தலைமுறை நெருக்கம்

பாட்டி
திருமணமாகி
ஒரு மாதம் கழித்துத் தான்
கணவர் முகத்தை
முழுமையாகப் பார்த்தாள்.
பேத்தி
புகைப்படம் பார்த்து
வேண்டாமென மறுத்த
வரன்களின் எண்ணிக்கை இருபது.

பாட்டி
சேலை தவிர வேறேதும்
உடுத்தியதில்லை.
பேத்தி
இதுவரை
சேலையே உடுத்தியதில்லை.

பாட்டி
எம்.எஸ்.ஸின்
மதுர கீதங்களுக்கு ரசிகை.
பேத்தி
பிரிட்னி ஸ்பியர்ஸ¤டன் கண்விழித்து
ஜெனி·பர் லோபஸ¤டன் உறங்கப் போவாள்.

என்றாலும்
பூரித்துத்தான் போகிறாள்
பாட்டி,
"அப்படியே
உங்களை உரிச்சு வச்சுப்
பிறந்திருக்கிறா
உங்க பேத்தி"
என ஓரிருவர்
சொல்லக் கேட்டு.

© TamilOnline.com