சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
போனமுறை அமெரிக்கா வந்த போது இருந்த மனநிலைக்கும் இந்த முறை வந்திருக்கும் போது உள்ள மனநிலைக்கும் மாறுதல்கள். இடையில் இருந்த மூன்றாண்டுகளில் நான் பயின்ற 'மனவளக் கலை'யின் தியானப்பயிற்சிகள், அகத்தாய்வு (introspection) பயிற்சிகள் என்னை அந்த அளவுக்கு மாற்றி இருக்கின்றன. என் மருமகள் நல்ல முறையில் என்னை நடத்திவந்த போதிலும், அவள் நடந்தவிதங்களிலும், சொற்களிலும் கண்டுபிடித்த தவறுகள், உள்ளர்த்தங்கள் இவற்றை நினைத்து நான் நடந்து கொண்ட விதம் எனக்கே என்மேல் கோபமாக வருகிறது. "நானா அப்படி இருந்தேன்?" என்று வெட்கமாக இருக்கிறது.

அவள் குழந்தையை ஏதாவது சொன்னாலோ கண்டித்தாலோ அது என்னைக் குறிப்பிடுவதாக நினைப்பேன். பையன் வீட்டில் இருந்தாலும் உபசரிப்பை எதிர்பார்ப்பேன். நம் பிள்ளை வீடு தானே என்று சுவாதீனமாக இருக்கமாட்டேன். முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு மருமகளுடன் பேசாமல்கூட இருப்பேன். அவள் அதைப் பொருட்படுத்தாமல் "நான் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிச்சுக்கோங்கோ" என்று கூறுவாள். அந்த அளவு அகந்தை என்னுள் இருந்தது மாமியார் என்ற உறவுக்கு. இந்த முறை வந்தபோது என்னுடைய தெளிவான சிந்தனைகள், தியானப்பயிற்சியால் எனக்கு கிடைத்த நிம்மதி, யாரையும் நேசிக்கும் குணம், யாரையும் எதையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காமல் 'அவர்கள் சுபாவம், அதை மாற்ற நாம் யார்?' என்று எல்லோரையும் அவரவர் குணநலன்களோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மனநிலையில் யார் செய்வதும், தப்பாகவே தெரியவில்லை. கடல்கடந்து வந்தும் மனநிலை இங்கு ஒன்றிப் போன தால் இந்தியாவில் இருப்பது போலவே உணர்கின்றேன்.

'என் பிள்ளை வீடு' என்று சுவாதீனமாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்துக் கொண்டு அமைதியாகக் காலம் கழிகின்றது. இந்த நிம்மதிக்குக் காரணம் என் தியானப் பயிற்சியும், சுய பரிசீலனையும்தான். தியான முடிவில் குடும்பத்தவர் அனைவரையும், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் வாழ்த்துவது, உலகத்தை வாழ்த்துவது என்ற முறை இருப்பதால் மனம் ரொம்பவும் அமைதியாகிவிடுகின்றது. போனமுறை வந்போது அமெரிக்காவை விட்டு எப்போது கிளம்புவோம் என்றிருந்தது போய் இப்போது 'விசா முடிகிறதே; இனி எப்போ வந்து இவர்களோடு இருப்போம்!' என்று மனது வருத்தமடைகிறது.

பிள்ளை, மருமகள், குழந்தைகள் அடுத்து எப்போது வரப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இக்காலத்தில், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து என்னை அன்போடு வரவழைக்கும் என் குழந்தைகளை நினைத்தால் எனக்கும் என் கணவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தியாவில் இருக்கும் என் பெண்கள், மாப்பிள்ளைகள் உறவினர்கள் அனைவருக்கும் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பும் போது கண்ணீர் மல்க அவர்கள் நிற்பதை மனதால் நினைக்கும் போது இந்த மகிழ்ச்சியை என் மதியீனத்தால் இழக்க இருந்ததை நினைத்து வேதனையாக இருந்தது.

முட்களை நீக்கிப் பார்த்தால் தானே பலாச்சுளை என்ற இனிப்பான பழம் கிடைக்கும். அதுபோல அவர்களின் தேவையற்ற குணங்களை நீக்கி பார்க்கும் போது இனிப்பான சுளை போன்ற மனம் இருப்பதை உணர்ந்தேன். எதையும் ஆராய்ந்து பார்த்து உணரும் மனம் என் பயிற்சியால் எனக்கு கிடைத்ததால் என் குடும்பத்தில் மகிழ்ச்சியை அடைய முடிந்தது.

ஜெயலட்சுமி சேஷாத்திரி

© TamilOnline.com