தூங்காதே ரயிலில் தூங்காதே!
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம்.

இதுவே திடீரென்று சட்டவிரோதம் ஆகிவிடுமென்று (ரயில்தூக்கக்) கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார்.

அவர் ஐஐடி வளாகத்தில் குடியிருக் கிறார். சிகாகோ பெட்·போர்டு பார்க்கில் இருக்கும் ஒரு வேதியல் தொழிற்சாலையில் வேலைசெய்கிறார். அதற்கு 2 ரயிலும் 2 பேருந்தும் பிடித்தால்தான் ஒருமணி நேரத்தில் வேலைக்குப் போகமுடியும்.

எப்போதும்போல்தான் அன்றும் காலை 7 மணிக்கு சிகாகோ போக்கு வரத்து ஆணைய (CTA) ரயிலில் ஏறி ஒரு தூக்கம் போட்டார். மிட்வே ரயில்நிலையம் வந்துவிட்டது. பழக்கம் காரணமாகக் கண் தானாக விழித்துக் கொண்டது. மற்றவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது வந்தார் போலீஸ்காரர். 'அபாயகரமாகத் தூங்கிய குற்றத்துக் காக' பாட்டியாவுக்கு 50 டாலர் அபராதம் விதித்துவிட்டார். "நானாவது அபராதம் கட்டுவதாவது" என்கிறார் பாட்டியா. வழக்காடியே தீருவதென்று தீர்மானித்திருக்கிறார் கவுரவ் பாட்டியா. அவர் முனைவர் பட்ட ஆய்வும் செய்துகொண்டிருக்கிறாராம்.

"தூங்கும்போது உங்கள் பணப்பையைத் திருடியிருக்கலாம் தெரியுமா?" என்று மரியாதையாகத்தான் போலீஸ் காரர் பேசினாராம். ஆனால் சட்ட ரீதியாக பாட்டியாவின் பணப்பையைக் கவர வழிசெய்துவிட்டார்.

கிடக்கட்டும், அடுத்தமுறை இரயிலில் பயணம் செய்யும்போது கண் அசந்து விடாதீர்கள். செலவு அதிகமாகிவிடலாம்!

தகவல்: ம.பா.

© TamilOnline.com