காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கந்தல் துணியுடனும், தலைப்பாகைத் துணி கையிலுமாக ஒரு தமிழர் வந்தார். அவரது முன்பற்களில் இரண்டு உடைந்திருந்தது, ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. உடல் நடுங்கியது. காந்தியின் முன்னே நடுங்கி அழுதபடி நின்றார். வந்தவர் பெயர் பாலசுந்தரம். அவர் ஒரு தமிழர்.

டர்பனில் இருந்த பிரபல ஐரோப்பியரின் கொத்தடிமையாக இருந்தார் பாலசுந்தரம். ஏதோவொரு விஷயத்தில் ஆத்திரமடைந்த அவரது எஜமானர் பாலசுந்தரத்தைக் கடுமையாக அடித்த தில் முன்பற்கள் இரண்டு உதிர்ந்திருந்தன. காந்திஜி உடனடியாக பாலசுந்தரத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினார். பாலசுந்தரத்தின் மேலிருந்த காயங்களைப் பற்றிய மருத்துவ அறிக்கையை வாங்கியெடுத்துக் கொண்டு ஒரு மாஜிஸ்திரேட்டிடம் போனார். பாலசுந்தரத்தைப் பார்த்து அவரது மனுவையும் படித்த மாஜிஸ்ட்ரேட்டுக்குக் கோபம் வந்தது. உடனடியாக ஐரோப்பியருக்குச் சம்மன் பிறப்பித்தார்.

ஒரு சாதாரண அடிமை தன் முதலாளியிடமிருந்து முன்னறிவிப்பில்லாமல் விலகிப் போனால் அவனுக்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்கலாம். கொத்தடிமையின் நிலையோ இன்னும் மோசம். அவனைக் குற்றவியல் வழக்கில் சிறைக்குள் தள்ளிவிடலாம். எனவே காந்தி மிக கவனமாக இதைக் கையாளவேண்டி இருந்தது. பாலசுந்தரம் விஷயத்தில் இரண்டு வழிகள்தாம் இருந்தன: ஒன்று, கொத்தடிமைப் பாதுகாவலரிடம் (இவர் ஒரு அரசு அதிகாரி) மனுப்போட்டு வேறொரு முதலாளிக்குக் கொத்தடிமையை மாற்றுவது; இரண்டாவது, தற்போதைய முதலாளியிடமே பேசி விடுதலை வாங்கி வேறொரு முதலாளிக்கு மாற்றுவது. காந்தி இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தார்.

"உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனைத் வாங்கித் தருவது எனது நோக்கமல்ல. நீ மிகக் கடுமையாக அவனைத் தாக்கியிருக்கிறாய் என்பதை உணர்கிறாய் என்று நினைக்கிறேன். வேறொரு முதலாளிக்கு மாற்றிக் கொடுத்தாலே போதுமானது" என்று காந்தி அவனிடம் கூறினார். அவன் ஒப்புக்கொண்டான். அடுத்து கொத்தடிமைப் பாதுகாவலரிடம் காந்தி பேசினார். இன்னொரு புதிய முதலாளியைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் இதற்குச் சம்மதிப்பதாக அவரும் கூறினார். ஒருவழியாக பாலசுந்தரத்தின் பிரச்சினை குழப்பமின்றித் தீர்ந்தது.

கொத்தடிமைகளுக்கும் பொதுவாகவே இந்தியர்களுக்கும் எதிராக தென்னாப்பிரிக்காவில் அப்போதிருந்த சூழ்நிலையில் காந்திஜி இதைச் சாதித்தது பெரிதுதான். இப்போது தலைசிறந்த பத்து தென்னாப்பிரிக்கர்களில் ஒருவராக மஹாத்மாவை அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதில் வியப்பெதுவும் இல்லைதானே!


ரமணதாசன்

© TamilOnline.com