காந்திஜி நினைவுகள்
1991-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா வந்தபொழுது சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள எமரிவில்லில் இருந்த என் மகன் வீட்டில் நானும் என் மனைவியும் தங்கி இருந்தோம். ஒருநாள் சான் ·பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது 25 வயது மதிக்கத்தக்க ஒரு அமெரிக்கப் பெண் எங்களைப் பார்த்து ''இதோ பாருங்கள்... உங்கள் காந்தி'' என்று சொன்னவுடன் அவர் காண்பித்த திசையில் பார்த்தோம். எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கே காந்தியடிகள் சிலை! ஓர் அமெரிக்கப் பெண்மணி நமது காந்தியைத் தெரிந்து கொண்டு நாங்கள் இந்தியர்கள் என்பதையும் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிறார். அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். அச்சிலையை நிறுவிய நகர நிர்வாகத்திற்கும் எங்களது மனதால் நன்றியைக் கூறிக் கொண்டோம்.

காந்திஜி 1942-ஆம் ஆண்டு மதுரைக்கு வந்திருந்தார். அப்பொழுது எனக்கு வயது 12. அதற்குப் பின்பும் ஒரு தடவை வந்திருக்கிறார். எனக்குச் சொந்த ஊர் மதுரை என்பதால் இருமுறையும் அவரை நேரிடையாகத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று அவரை நினைவுகூருவோம். 'சத்தியமேவ ஜெயதே' அதாவது வாய்மையே வெல்லும் என்ற காந்தியடிகளின் திடமான கொள்கையை இந்நாளில் அனைவரும் கடைப்பிடிக்கச் சங்கல்பம் செய்துகொள்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

க. நடராசன்

© TamilOnline.com