அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேதகு ஆளுநர் ராம்மோகன்ராவ் புத்தகத்தை வெளியிட, ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் எழுதி பார்வையற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட 'அக்னிச் சிறகுகள்' பிரெய்ல் வடிவிலான நூலை ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளை வெளியிட, பார்வைக் குறையுடையோர் இந்திய அமைப்பின் முதன்மைச் செயலர் எஸ்.எம்.ஏ. ஜின்னா பெற்றுக்கொண்டார்.

'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' புத்தகத்தைக் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. இதற்கு முன்பு அப்துல் கலாம் அவர்களின் 'அக்னிச் சிறகுகள்', 'எழுச்சி தீபங்கள்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் மொழிபெயர்த்த மு. சிவலிங்கம் அவர்களே இப்புத்தகத்திற்கும் தமிழ் வடிவம் கொடுத்துள்ளார். புத்தகத்தின் விலை ரூ 100.

திரைப்பட நடிகர் விவேக் மற்றும் டாடா மெக்ராஹில் நிறுவன நிர்வாக இயக்குனர் நந்தூரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2020-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறுவதற்கு மருத்துவம், தொழில், கல்வி, பாதுகாப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் கொண்டுவர வேண்டிய திட்டங்களைச் சில நடை முறை உதாரணங்களை முன்வைத்து, நிறைவேறப் போகும் நிஜம் என்பதை ஆணித்தரமாக விவரிக்கிறது இப்புத்தகம்.

''அமைதி தவழும் இந்தியாவில் ஆனந்தமும், சுபிட்சமும் பொங்கும் பாதுகாப்பான இந்தியாவில் வாழ விரும்புகிறோம் என்ற இந்திய மக்களின் விருப்பத்தை 2020ல் வளர்ச்சியடைந்த இந்தியா செயல்திட்டம் மூலம் நிறைவேற்றுவதில் நாம் அனைவரும் முனைந்து பாடுபட வேண்டும்" என்று இப்புத்தகத்தில் அறைகூவல் விடுக்கிறார் இந்தியப் புனர்நிர்மாணச் சிற்பி டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com