மனதைக் கவரும் குழந்தைப் பாடல்கள்
'மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்' போன்ற எளிமை, அழகு மற்றும் கருத்தாழம் கொண்ட குழந்தைப் பாடல்களைப் பாடியவர் அழ. வள்ளியப்பா. அவர் எழுதிய 10 பாடல்களைத் தேர்ந்தெடுத்து விழிமத் தகடாக (video CD) வெளியிட்டிருக்கிறார் காம்கேர் புவனேஸ்வரி.

வண்ணமயமான அசைவூட்டிய ஓவியங்கள், செவிக்கினிய இசை இரண்டும் இவற்றில் உண்டு. பாடல்களை உற்சாகமான ஏற்ற இறக்கங்களுடன் பாடியிருக்கிறவரின் பெயரை தகட்டுப் பேழையின் அட்டை சொல்லவில்லை. சித்திரப் பாடல் முடிந்ததும் பாடல் மீண்டும் ஒலிக்கிறது. இந்தமுறை திரையில் பாடல் வரிகள் காணப்படுகின்றன. பாடப்படும் வரி வண்ணத்தால் வேறுபட்டுத் தெரிகிறது.

பாடலுக்கான இசையும் பின்னணியும் சற்றே 'பாப் இசை' பாணியில் இருப்பதால் குழந்தைகளின் மனதைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. மாறுதலுக்காகச் சில பாடல்களாவது பாரம்பரிய முறையில் அமைத் திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

குழந்தைகள் இந்தப் பாடல்களின் மூலம் தமிழ்கற்கும் ஆர்வம் கொள்வார்கள் என்பது நிச்சயம். ஏன், பெரியவர்களேகூட இப்பாடல்களை முணுமுணுத்தால் ஆச்சரியமிருக்காது.

******


கந்தர் சஷ்டி கவசம்

பல்லாண்டுக் காலமாக தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலும் ஒலித்துவரும் பக்திப் பனுவல் கந்தர் சஷ்டி கவசம். மீரா கிருஷ்ணாவின் இனிய குரலில், அடிகளைச் சித்தரிக்கும் வண்ண கிரா·பிக்ஸ் மற்றும் ஜாலக் காட்சிகளுடன் இதையும் காம்ப்கேர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கந்தர் சஷ்டி கவசத்தை அடுத்து வள்ளி தெய்வானையோடு முருகன் சிலைக்குப் பல்வேறு அபிஷேகங்கள் செய்யும் காட்சி பின்னணியில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் இசை ஒலிக்க பக்தர்களின் கண்ணுக்கு விருந்தாகிறது. பின்னர் கந்தர் சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கப்படுகிறது.

இரண்டையும் வெளியிட்ட காம்கேர் புவனேஸ்வரி தமிழில் கணினி மென்பொருள் புத்தகங்களை ஏராளமாக வெளியிட்டுப் பரவலாக அறியப்பட்ட சாதனைப் பெண்மணி. மேலும் தகவல் அறிய www.compcaresoftware.com

விற்பனை விசாரணைகளுக்கு மின்னஞ்சலில் தொடர்புகொள்ள: compcare@hotmail.com

© TamilOnline.com