உலகமயமாக்கல் - சுரண்டல்தான் அதன் நோக்கம்
உலகமயமாக்கல் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும், ஏனெனில் சுரண்டல்தான் அதன் நோக்கம். எந்தவித சீர்திருத்தத்தினாலும் அந்தச் சுரண்டலை அகற்றிவிட முடியாது. இன்றைய சமுதாய அமைப்பைத் தூக்கியெறிவதற்காக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

உலகில் ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டலும் அதிகரித்து வருகின்றன. பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி வருகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி விரிவடைவதை தடுக்கும். மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியில் மறு காலனிகளாக்குவதே உலகமயாக்கலின் அரசியல் நோக்கம். உலகின் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொள்கிறது.

உலகமயமாக்கலும், மனிதநேயமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்க முடியாது. மனிதநேய நடவடிக்கைகளுக்காக நாம் போராடக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல...

சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், 'உலகமயமாக்கலின் கீழ் வர்க்கப் போராட்டம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில்....

******


பழந்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த கருத்துகள் பல உள்ளன. அவற்றை இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடினமான நடையில், இலக்கண வடிவில் இருக்கும் அக்கருத்துகளைப் படித்துப் புரிந்து கொள்வது சிரமம். இப்படிப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சிறந்த கருத்துகளை எளிமைப்படுத்தி புதுக்கவிதைகளாகவும், திரைப்படப் பாடல்களாகவும் கவிஞர்கள் தர வேண்டும்.

வைகோ, ம.தி.மு.க. பொதுச்செயலர், 'முத்துலிங்கம் கவிதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்.....

******


இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் என்ற முழக்கத்தை எழுப்பியவர் வள்ளலார். சாதி, மதம், சாஸ்திரங்களின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியைப் பின்பற்றி வாழ முடியும். அதற்காக ஓர் இயக்கத்தையே தேற்றுவித்தவர் வள்ளலார். அந்த இயக்கம் செல்வாக்குப் பெறாததைக் கண்டு 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று மனம் வெதும்பிக்கூறினார் வள்ளலார்.

மதவெறியர்களுக்கும், தமிழ்க் கலாசார விரோதிகளுக்கும் வள்ளலாரின் இயக்கம் தலையெடுக்க விடாமல் தடுத்துவிட்டார்கள். அந்த இயக்கம் மட்டும் வெற்றி பெற்று இருக்குமானால் தமிழகத்தில் ஆன்மிகத்துக்க எதிரான இயக்கமே தோன்றி இருக்காது.

டாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர், சென்னையில் திருவருட்பா பேருரை நூல் வெளியீட்டு விழாவில்....

******


இங்கே (தமிழ்நாட்டில்) பெண் கவிஞர்கள் என்றால் பெண்ணியம் பேசுகிறவர்கள்தான். இராக்கில் அரசியல் அவலங்களைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் மூன்று பெண் கவிஞர்களை என் தொகுப்பில் காணலாம். முஸாபர் அல் நவாப் என்னும் கவிஞர் வல்லரசுகளைக் கண்டு அரபு ஆட்சியாளர்களே பயந்து நடுங்குவதாகவும், ஒற்றுமையின்மையால் தங்கள் இனத்தைக் கைவிடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மிக கடுமையான அந்தக் கண்டனத்தின் ஒரு சில பகுதிகளைக்கூட மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு யூத அறிவுஜிவிக் கவிஞர். இராக்கில் பிறந்து வளர்ந்தவர். எதிரும் புதிருமான இரண்டு இனங்களுக்கிடையே உள்ள நெருடல்களை மனநெகிழ்வோடு துடிக்கும் கவிதையாகப் படைத்திருக்கிறார். அந்த மானுடம் கண்டு வியந்தேன்.

கவிஞர் நிர்மலா சுரேஷ், பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பதிலில்...

******


மனிதவாழ்வின் தொடக்கமும், முடிவும் இசையே, குழந்தையின் அழுகையும், வாழ்வின் இறுதியாக ஒப்பாரியும் இசையாகவே அமைந்துள்ளது. இசையில்லாத உலகம் மயானத்துக்குச் சமம். ஓடும் நதியும் கொட்டும் அருவியும்கூட இசையின் பிறப்பிடம்.

இசையுடன் தழுவியது ஆன்மீகம். மனம் உருகப் பாடினால் அருகில் வருவான் இறைவன். தமிழும், தமிழிசையும் இணைந்தவை. தமிழிசையை மீட்டு வளர்த்தார் அண்ணாமலை அரசர். இதன் வழியின் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை வாழையடி வாழையாகத் தலைமுறைகளைக் கடந்து தொண்டுகளை தொடர்கிறது.

தமிழ்செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் தமிழிசையின் மறுமலர்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அனைவரும் பாடுபடவேண்டும்.

குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள், டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் பிறந்த தினவிழாவில் ...............

கேடிஸ்ரீ

© TamilOnline.com