வாசகர் கைவண்ணம்
ஜவ்வரிசி போண்டா

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி (சிறியது) - 1 கிண்ணம்
ரவை - 1 கிண்ணம்
புளித்த தயிர் - 1 1/2 கிண்ணம்
மிளகாய்ப்பொடி - தேவைக்கேற்ப
வெங்காயம் (அரிந்தது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை

ஜவ்வரிசியுடன் ரவை மற்றும் தயிர் கலந்து 4 மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசி நன்றாக ஊற வேண்டும். இல்லாவிட்டால் மிருதுவாக வராது.

ஊறிய ஜவ்வரிசியுடன் காரப்பவுடர், உப்பு, வெங்காயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் வேண்டாம்.

சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ¤டன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

உலர்ந்த தக்காளி வில்லைகள் (slices) - 1 பொட்டலம்
தண்ணீர் - 1 கிண்ணம்
எண்ணெய் - 1/2 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

உலர்ந்த தக்காளி வில்லைகளுடன் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் நுண்ணலை அவியனில் (மைக்ரொவேவ் அவன்) வைக்கவும். ஒரு நிமிடத்துக் கொருமுறை மேலும் கீழுமாக ஸ்பூனால் கிளறிவிடவும்.

மென்மையாக இல்லாவிடில் தண்ணீர் தெளித்து மேலும் 3 நிமிடம் வைக்கவும்.

நிறையத் தண்ணீர் விட வேண்டாம். தக்காளி விழுதாக இறக்க வேண்டும். தக்காளி நன்றாக மசிந்ததும் பீங்கான் கிண்ணத்தில் (bowl) நடுவில் குழி இருக்குமாறு நாலாபுறமும் சமமாகப் பரப்பவும்.

நடுவில் உள்ள குழிவான இடத்தில் பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் போடவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகைப் போட்டு வெடித்ததும், சூடாகக் குழியில் உள்ளவற்றின் மேல் ஊற்றி, தட்டால் மூடவும்.

15 நிமிடம் கழித்துத் திறந்து, விழுதை நன்றாகக் கரண்டியால் கலக்கவும். பின் உலர்ந்த பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் கலந்து தக்காளி சாதம் செய்யலாம். சப்பாத்தி, இட்லி, தோசை முதலியவற்றிற்குத் தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

ஜெயலட்சுமி சேஷாத்திரி

© TamilOnline.com