சொஜ்ஜி ரொட்டி
தேவையான பொருட்கள்

ரவா - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
வெல்லத்தூள் - 1/2 கிண்ணம்
மைதா மாவு - 1 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
நெய் - 6 தேக்கரண்டி

செய்முறை

மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மேலும் நன்றாகப் பிசைந்து 4 மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு ரவையை (பொன்னிறத்துக்கும் சற்று அதிகமாக) சிவக்க வறுக்கவும். வேறொரு பாத்திரத்தில் இரண்டரைக் கிண்ணம் நீரைக் கொதிக்கவிடவும்.

கொதிக்கும் நீரை வாணலியில் வறுபட்ட ரவையில் விட்டு, சிறிது நேரம் கிளறவும். ரவை நன்றாக வேகக் கூடாது. சர்க்கரை, வெல்லத்தூள் இவற்றைப் போட்டு ஓரளவு கெட்டியானதும் கீழே இறக்கி ஏலப்பொடியை போட்டுக் கலந்து ஆற வைக்கவும். கேசரி பொலபொல என்று இருந்தால் சிறிதளவு வெந்நீர் விட்டுப் பிசையலாம். கையால் நன்றாக கலந்து மிருதுவாக்கவும்.

சுமார் சைஸ் உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஊறிய மைதா மாவை மீண்டும் அடித்துப் பிசையவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா உருண்டைகளும் சொஜ்ஜி உருண்டைகளும் ஒரே அளவாக இருக்க வேண்டும். மைதா உருண்டையை உதிரியான மைதா மாவில் தோய்த்து சப்பாத்திக் கல்லில் வைத்துச் சிறிய அப்பளமாக இடவும்.

அதற்கு உள்ளே சொஜ்ஜி உருண்டையை வைத்து மாவால் மூடி மீண்டும் மைதா மாவில் தோய்த்து மெல்லியதாக அப்பளம் போல் இடவும்.

தோசைக்கல் சூடானதும் நெய் தடவி, சொஜ்ஜி ரொட்டியைக் கல்லில் போட்டு இருபக்கமும் வேகவிடவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும்இ

நாம் எடுத்துக் கொண்ட பொருள்களின் அளவுக்கு 15 முதல் 10 மெல்லிய ரொட்டிகள் செய்ய முடியும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com