தயைகூர்ந்து வாக்களியுங்கள்
ஓரு வலைத் தளத்தில் படித்தது: புஷ், கெர்ரி இருவரையும் வெல்லப் போவது 'I don't care who is the President' தான்.

ஆமாம் - வருத்தம் தரும் உண்மை; வாக்களிக்காதவர்கள் அதிகம் என்பதுதான். இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும். கேட்ட மற்றொரு செய்தி: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் மூன்றில் இருவர் வாக்களிப்பதில்லை.

தென்றல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை இருப்பின் தயவுசெய்து அதைப் பயன்படுத்துங்கள்; இல்லாதவர்கள் இருப்பவர்களுக்கு நினைவூட்டுங்கள். (ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து, கோலாக் கம்பெனி நடத்தும் கோலாகலத் திருவிழா வரை எல்லாவற்றையும் "வரலாற்று முக்கியத்துவம்" வாய்ந்ததாகச் சித்தரிக்கும் இந்த யுகத்தில், இம்முறை நடக்கும் அமெரிக்கத் தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்ல வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது.)

பலகாலம் உலகின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது இந்தத் தேர்தல். எனவே தயைகூர்ந்து வாக்களியுங்கள்; தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் அனைவரையும் வாக்களிக்கச் சொல்லுங்கள்.

இம்மாதம் தென்றலுக்கு முக்கியமானது! ஆமாம் 4 ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர்கள் வாசகப் பெருமக்களும், விளம்பரதாரர்களும். அவாகளுக்கு எங்கள் நன்றி. அதேபோல் வெவ்வேறு இடங்களில் இருந்து அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதியனுப்பும் அன்பர்களுக்கும் நன்றி. உங்களுக்காகத்தான் தென்றல், உங்களால்தான் தென்றல்.

சென்னையில் ஒரு கருத்தரங்கில் RPG குழுமத்தில் பெரிய பொறுப்பு வகிக்கும் நண்பர் ப்ரதிப்தோ மஹாபத்ரா சொன்னார்: "இனிமேல் ஒரு கல்லூரிக்குச் சென்று நேரடியாக மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்யுமுன் அக்கல்லூரி ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்." செய்தால் மிக நன்றாக இருக்கும்.

தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி மற்றும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன்
நவம்பர் 2004

© TamilOnline.com