நியூயார்க் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் விழா
நியூயார்க் மாநிலத்திலுள்ள ரஷ் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவித்யா பீடமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் வருடாந்தர அலங்கார உற்சவம் மே 18, 19, 20ஆம் தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் பக்தர்கள் சேர்ந்து அமைத்திருந்த பிரம்மாண்டமான சப்பரம் மிகச் சிங்காரமாக காட்சியளித்தது. 1008 வலம்புரிச் சங்குகளினால் செய்யப்பட்ட அபிஷேகமும் சிறுவர்களினால் நடத்தப்படும் தத்தாத்ரேயர் சடங்கும் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.

கலைகளையும் பாரம்பரியத்தையும் வளர்க்கும் இப்பீடத்தில் கர்னாடிகா சகோதரர்கள், புல்லாங்குழல் மேதை சசாங்க், நாதஸ்வர மேதைகள் கஸீம் பாபு மற்றும் ஸுபண் பாபு ஆகியோர் தவிர லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த திருமதி சங்கரி செந்தில்குமார், பாஸ்டனைச் சேர்ந்த காயத்ரி சத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கர்னாடிகா சகோதரர்கள் தங்கள் சங்கீத நுண்ணறிவாலும் மக்களைச் சேரும் பாடல்களைப் பாடியும் பெரும் பாராட்டைப் பெற்றனர். இவர்கள் பாடிய மோகனமும் குந்தலவராளியும் ரசிகர்களால் ஆரவாரமாக பேசப்பட்டது.

புல்லாங்குழலில் ஆளுமை கொண்ட சசாங்கின்ன் ஆபேரி ரசிர்களை வசீகரித்தது. கஸீம், ஸுபண் ஆகியோரின் எல்லாப் பாடல்களும் சிறந்தவையாக இருந்தபோதும், யமன் கல்யாணி ஹிந்துஸ்தானி பாணி ஆலாபனை வெகு அழகு. சங்கரி செந்தில்குமார் தன் சாரீரத்தினால் சம்பிரதாய சங்கீத்தை நிலைநாட்டினார். காயத்ரி சத்யா தன் மென்மையான குரலினால் ரசிகர்களை கவர்ந்தார்.

© TamilOnline.com