சிகாகோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 14, 2007 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் சர்வஜித் தமிழ்ப் புத்தாண்டு விழாவை லேமாண்ட் கோயிலில் உள்ள ரதி கலையரங்கில் சிறப்பாகக் கொண்டாடியது. 400க்கும் மேற்பட்டோ ர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியை ஸ்மார்ட் மார்ட்கேஜ் நிறுவனத்தினரும் அதன் தலைவருமான திரு. முத்து ராதாகிருஷ்ணனும் இணைந்து வழங்கினர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் ரகுவின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைவர் வீரா வேணுகோபால் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அஸ்வின் மகேஷ் விநாயகர் பற்றிய பக்திப் பாடல்களைப் பாட, தொடர்ந்து வந்த கெளதமன் என்ற சிறுவன் அருணகிரிநாதர் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலை இம்மி பிசகாமல் பாடி கைதட்டலைப் பெற்றான். அடுத்து திவ்யா, த்ரிநயனா, பூனம் ஆகியோரின் பரதநாட்டியம் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய சிற்றுரையை சிறுமி சாரா அமல்ராஜ் பொழியத் தொடர்ந்து வந்த நன்னாரே பாடலுக்குச் சிறப்பாக ஆடினார் ஸ்வேதா சுரேஷ் மற்றும் பிரேமா பாபு.

சின்னஞ்சிறு ஜோடியான சுஷ்மிதா, பவேஷ் 'அடுத்தாத்து அம்புஜத்தை'ப் பாடி நடித்தனர். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலுக்கு ரிதிகா, ஷ்ரேயஸ், மதுமிதா, அட்சய் ஆகியோர் அருமையான ஆடினர். தமிழ் வளர்த்த பெரியோர்களான திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் போன்ற பலரை திவ்யா, அருண், நிரேஷ் இன்னும் பல இளஞ்சிறார்கள் அடங்கிய குழு அன்று சிறப்பாகச் சித்தரித்தனர். பஞ்சவர்ணக்கிளி படத்தின் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலைத் திவ்யா அனந்தன் என்ற சிறுமி தெள்ளத் தெளிவான தித்திக்கும் குரலில் பாடினார்.

நடன ஆசிரியை தேவகி ஜானகிராமனின் மாணவிகள் மாம்பலம தெருவீதிக் காட்சியைச் சிறுசிறு பாடலின் மூலம் கண்முன்னே கொண்டு நிறுத்தினர். பர்க்யா, அருஷி, ஸ்ருதி, நிகதி ஆகியோர் பாடலுக்கு நடனமாடினர். நவராத்திரி படத்தில் சிவாஜி, சாவித்திரி ஆடிய தெருக்கூத்தை நினைவு கூர்ந்தனர். 'டோ ல், டோ ல்' என்ற திரைப்படப் பாடலுக்கு வினுதா, அம்ருதா, ராஷ்மி, சஞ்சனா, சரஸ்வதி, செஞ்சிதா ஆகியோரது நடனமும் மக்களைக் கவர்ந்தது. 'சிக்குபுக்கு ரயிலே' பாடலுக்கு ராக்கெட் வேகத்தில் ஆடிய வெங்கட்ராமனின் நடனம் அருமை.

இரவு உணவுக்குப் பிறகு ஜெயஸ்ரீ வெங்கடேஷ் நடத்திய பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி சுவையாக இருந்தது. அணிக்கு நான்கு பேர் கொண்ட ராகம், தாளம், பல்லவி என்ற மூன்று அணிகள் பங்கு பெற்றன. முழுவதும் பெண்களே அடங்கிய ராகம் அணியினர் தொடர்ந்து 13 பாடலைப்பாடி வெற்றி பெற்றனர். நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ், சுபி ஆகியோர் உதவி செய்தனர்.

சிகாகோ நாடகப்பிரியா குழுவினர் நடத்திய 'மெகா சீரியல்' நாடகம் அருமை. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜி விவேக்கின் நடிப்பு மிகச் சிறப்பு. முத்துவேலுவின் மிமிக்ரியும் சுவைபட இருந்தது. இல்லினாய் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் நவீன சிலப்பதிகாரம் புதுமையாகவும், ரசிக்கும்படியும் இருந்தது. இறுதியாக, இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் பிரபல திரைப்படப் பாடல்களை துரித கதியில் பாடி அசத்தினர்.

அடுத்து சிகாகோ தமிழ்ச்சங்கம் ஜூன் 30, 2007 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் 33வது வருடாந்திர மாநாட்டை இணைந்து நடத்த உள்ளது. விவரங்களுக்கு: www.tnfconvention.org அல்லது nishnik@hotmail.com

எஸ்டேடட் சுபி

© TamilOnline.com