க்ரியாவின் 'Seeds and Flowers'
'க்ரியா' குழுவினரின் 'விதைகளும் பூக்களும்' என்னும் ஆங்கில நாடகம் ஏப்ரல் 28, 2007 அன்று மணியளவில் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து வேலை பார்த்து வரும் இரு இந்திய அமெரிக்க குடும்பத்தினர் வேலையா குடும்பமா என்ற கேள்வியை எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதுதான் கதை. சாரு-ஜெய், ப்ரியா-ராஜ் தம்பதிகளை மையமாக வைத்து நாடகம் புனையப்பட்டிருந்தது.

ராஜுக்கு அடிக்கடி வேலை போவதும் கிடைப்பதுமான சூழ்நிலை. விரக்தியுடன் அவன் வீட்டுக்கு வர, மனைவி ப்ரியாவோ, 'போனால் போகட்டும் கவலைப்படாதீர்கள்; இரவு டின்னர் என்ன செய்யட்டும்' எனக் கேட்கும் போது, எரிச்சல் மேலிட ராஜ் 'காலை உணவு ஜீரணமாவதற்குள் இரவு உணவு பற்றி என்ன பேச்சு?' எனக் கேட்பது உட்பட, நாடகத்தில் ஆங்காங்கே அன்றாட நிகழ்வுகளின் யதார்த்தம் பளிச்சிடுகிறது. கணவனைத் தேற்றி கவலையிலும் பங்கேற்கிறாள் மனைவி ப்ரியா. ராஜின் நண்பன் இந்தியாவிலிருந்து ராஜுவைப் பார்க்க வரும் போது, 'இந்தியாவில் எல்லாம் கிடைக்கிறது. சம்பளமும் ஐந்து லட்சம் வரை கிடைக்கிறது. நீ வந்துவிடு' என்று ஆசை காட்டுகிறான். கனவுகளுடனும் ஆசைகளுடனும் இந்தியாவுக்கு வருகின்றனர் ராஜ்-ப்ரியா தம்பதியினர். 'இந்தியாவுக்கு வந்தும் என்னால் எதுவும் சாதிக்க முடியவில்லை' என ராஜ் புலம்பும் போது, ப்ரியாவோ, இந்தியாவில் செல்போன் சின்ன சைசில் உள்ளது. இன்ஃப்ராஸ்ட்ரக்சர்தான் சரியில்லை என வெகுளித்தனமாகப் பேசுவது, கணவனைத் தேற்றி தைரியம் கொடுப்பது என ப்ரியாவாக நடித்த தீபாவின் நடிப்பு அபாரம்.

சாரு-ஜெய் தம்பதிகளிடையே தன் மனைவியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல் ஜெய் தவிக்க, சாருவின் மன அதிருப்தியை தத்ரூபமாக நடிப்பில் பிரதிபலித்து வியக்க வைக்கிறார் சாருவாக நடித்த வித்யா சுப்ரமண்யம். தனது மேலதிகாரி கேரியுடன் மோதல், பணம், பதவி என மேலே நாடிச் செல்லும் போது மனைவி, குடும்பம் என்று கவனிக்க முடியாமல் தவித்தல், டாக்டரிடம் கவுன்சிலிங்கிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய சந்தர்ப்பங்களில் ஜெய்யின் நடிப்பு தத்ரூபம். கேரியாக நடித்தவரின் மிடுக்கான நடிப்பும் ஜோர். காபி ஷாப்பில் சாரு தன் மனக்கலக்கத்தை நண்பன் பங்கஜிடம் மனம் திறந்து கொட்டியதும், பங்கஜ், ஜெய் டாக்டரிடம் செல்ல இருப்பது பற்றிச் சொல்ல, அதை கேட்டு சாருவின் முகபாவம் மாறுவதும் மிக்க இயற்கையான நடிப்பாக இருந்தது.

டாக்டர் ஆபிசில் பணிபுரியும் பெண்ணாக நடித்த தாரா சங்கரின் நடிப்பும் இயல்பு. தனது தந்தையுடனான உரையாடலின் போது முகத்தில் ஏற்படும் ஏமாற்ற உணர்ச்சியை நன்கு வெளிப்படுத்தி அழகாக நடித்திருந்தார் அவர். டாக்டர், சாருவிடம் கவுன்சிலிங் செய்யும் போது கடிகாரத்தின் உச்சியில் தட்டிவிட்டு, நேரப்படி சார்ஜ் செய்ய மாட்டேன் என்பதிலும், ஜெய் படும் அல்லல் பற்றி சாருவிடம் விவரிக்கும் போது, சாருவின் கண்களில் நீர் கசிவதைத் துடைக்க நாப்கின் டப்பாவை நகர்த்தும் போதிலும் அவரது நடிப்பு டாப். கடைசியாக ப்ரியா, சாரு இருவரின் சந்தித்து, தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது இருவரின் முகபாவமும், வசனங்களை வெளிப்படுத்தும் பாங்கும் மிக இயல்பாக அற்புதமாக இருந்தது. ராஜ் உணர்ச்சிப் பிழம்பாக நடித்து அவையோரை அசத்தினார்.

இறுதியில் ராஜ், ஜெய் சந்திப்பின் மூலம், வெற்றி தோல்வி, உயர்வு தாழ்வு மனிதனின் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது. போராடித்தான் வாழ்க்கைப் பயணம் செய்ய வேண்டும் என்று கூறி நாடகத்தை நிறைவு செய்தனர். நாடகத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் நடிப்பில் தங்களுக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பாவத்துடன் நடித்திருந்தனர். காட்சி அமைப்புகள், பின்னணி வேலைகள் யாவும் மிக்க இயல்புடன் அழகாய் அமைக்கப்பட்டிருந்தது.

இன்றைய கால கட்டத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பிரச்சினைகள், பணிச் சோர்வு, மனச்சோர்வு, உடல் சோர்வு, எதிர்பார்ப்புகள் நிநவேறாமல் போன ஏமாற்றத்தினால் ஏற்படும் மனஅழுத்தம், ஆகியவற்றின் மூலம் விவாகரத்துக்கள் அதிகரித்து வரும் நிலை-என பல்வேறு பிரச்னைகளை ஆராய்ந்து நாடகத்தைப் படைத்துள்ளார் ராமானுஜம். வீடு, அலுவலகம் இரண்டையும் சமன் செய்து வாழ்க்கை பயணத்தைப் வெற்றியுடன் நடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தை நாடகாசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ள விதம் பாராட்டத்தக்கது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com