IISc-அனைத்துலக மாநாடு-2007
பங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான நிலையத்தின் (Indian Institute of Science, IISc) முதலாவது அனைத்துலக மாநாடு, 2007 ஜூன் 22 முதல் 24 வரை கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில், சிலிக்கான் வேல்லியில் உள்ள ஸான்டா க்ளாரா மேர்ரியாட் ஓட்டலில் (Santa Clara Marriott Hotel) நடைபெற உள்ளது.

ஐ.ஐ.எஸ்ஸியின் முன்னாள் மாணாக்கர்களால் நடத்தப் படும் இம்மாநாட்டில் பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள் குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் விடியோ வழியாகக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்க உள்ளார். டாட்டா நிறுவன அதிபர் ரத்தன் டாட்டா, TCS நிறுவனத் தலைவர் ராமதுரை, இந்திய அணுசக்தித் துறை உயர்பதவி வகிக்கும் முனைவர் சிதம்பரம் உட்பட பல அரசு, தொழில், கல்வித் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டு மாநாட்டைச் சிறப்பிக்க உள்ளார்கள்.

மாநாட்டில் பல சிறப்புச் சொற்பொழிவுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறும். ஆரம்ப நிலை நிறுவனம், பயோடெக் ஆகியவை சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை.

1908ஆம் ஆண்டு தீர்க்கதரிசித் தொழிலதிபர் ஜே.என். டாட்டாவால், இந்திய விஞ்ஞான முன்னேற்றத்துக்காக ஐ.ஐ.எஸ்ஸி. நிறுவப்பட்டது. நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. ராமன், இந்திய அணுசக்தித் துறையின் தந்தையான ஹோமி பாபா, இந்திய விண்வெளி முயற்சியில் சிறப்பிடம் பெற்ற விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் போன்ற பலர் ஐ.ஐ.எஸ்ஸி.யில் படித்துப் பணிபுரிந்த பெரும்புள்ளிகளில் சிலரே. இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு ஐ.ஐ.எஸ்ஸி. பெரும் சேவை புரிந்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய உலகமயமாக்கல் (globalization), மற்றும் இந்தியத் தொழில் முன்னேற்றம் போன்ற பெரும்போக்குகளில் முழுப் பங்கேற்பதற்கான உந்துதலை அதிகரிக்கவே இம்மாநாடு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் ஐ.ஐ.எஸ்ஸி. நூற்றாண்டு விழாவுக்கு இவ்வருட மாநாடு முன்னோடியாக அமையும்.

ஏற்கனவே ஜி.எம்., போயிங், மைக்ரோஸாஃப்ட், இன்ட்டெல், ஸிட்ரிக்ஸ் போன்ற பல நிறுவனங்களுடன் தொழில்துறைப் பிணைப்புள்ள சிறப்புத் தொழில்நுட்ப வேலைகளை ஐ.ஐ.எஸ்ஸி செய்து வருகிறது. அந்நிறுவனங்களிலிருந்து பல நிபுணர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்கள். இம்மாநாட்டின் மூலம் தொழில்துறைப் பிணைப்புள்ள ஆராய்ச்சிகளை மேலும் பலப்படுத்தி ஐ.ஐ.எஸ்ஸியின் புத்தாக்கப் பணியை (innovation) பன்மடங்கு அதிகரிப்பது இம்மாநாட்டின் ஒரு முக்கியக் குறிக்கோளாகும். அமெரிக்காவின் ஸிலிக்கான் வேல்லியை இந்தியாவின் ஸிலிக்கான் பீடபூமியுடன் (silicon plateau) இணைக்கும் முக்கியப் பாலம் இம்மாநாடு என்பது குறிப்பிடத் தக்கது.

ஐ.ஐ.எஸ்ஸி.யைச் சார்ந்தோர் மட்டுமல்லாமல், கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறை சம்பந்தப்பட்ட யாவரையும் பங்கேற்க இம்மாநாடு வரவேற்கிறது.

பல சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைந்த ஐ.ஐ.எஸ்ஸி அனைத்துலக மாநாடு-2007, பல நிறுவன மற்றும் தனியார் வள்ளல்களின் நன்கொடையால் சாத்தியமாகிறது. வள்ளல் நிலை அளவில் நன்கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் மேலும் அறிய கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கும் மின்வலைத் தளங்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, IISc முன்னாள் மாணாக்கர் இயக்கத்தினரை அணுகுங்கள்.

உதவ ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களுக்கு: http://conference.iiscaana.org

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com