பஞ்சாபில் அமைதி திரும்பட்டும்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பஞ்சாப். சீக்கியர்களின் இரு பிரிவினருக்கு இடையே எழுந்ததாகச் சொல்லப்படும் மோதல் தான் அதற்குக் காரணம் என்று சொல்லப் பட்டாலும், பின்னணியில் வேறுபல காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. குறிப்பாக சீக்கிய மதத்தின் தலைமைப் பீடமான பப்பர் கால்சா மத குருக்களுக்கும் டேரா சச்சா சவுதா என்னும் ஆன்மிக அமைப்பின் தலைவரான பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தமே பஞ்சாபின் தற்போதைய கலவரத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

குர்மீத் ராம், சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கைப் போல ஆடையணிந்து சுவரொட்டிகளை அச்சிட்டு விளம்பரம் செய்துதான் கலவரங்களுக்கு முதற் காரணம். இது பழைமையில் ஊறிய சீக்கியர் களுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து வன்முறை, கலவரம், தீ வைப்பு என அனைத்தும் நடக்க ஆரம்பித்தது. இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாகச் சொல்லப்படுவதால் கலவரம் உச்சகட்டத்தை எட்டியது. ராம் ரஹீம் சிங் முதலில் வருத்தம் தெரிவித்திருந்தார். அதை பப்பர் கால்சா ஏற்றுக்கொள்ளவில்லை. டேரா சச்சா சவுதாவின் எல்லாக் கிளைகளையும் கலைக்க வேண்டும் என்று ஒரு கெடு வைத்திருந்தார் கள். அந்தக் கெடு முடிவதற்குள் ராம் ரஹீம் சிங் தனது செயலுக்கு குரு கோவிந்த் சிங்கிடமே மன்னிப்புக் கேட்டு ஓர் அறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும் நீறுபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது பஞ்சாப். மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் பிரார்த்தனையும்.

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com