காவேரியின் ஆசை
காவேரிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைக்குள் செல்லத் தயங்கினாள். முதன்முறையாக வாங்கப் போகிறாள். யாரேனும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். இவ்வளவு படித்தும் அமெரிக்காவில் வேலை பார்த்தும் இப்படிச் செய்யலாமா என்று யாராவது சொல்வார்களோ என்ற கவலை. அம்மா, அப்பா என்ன நினைத்துக் கொள்வார்கள். இதற்கா உன்னை படிக்க வைத்தோம்... இப்படியா உன்னை வளர்த்தோம் என்று வருத்தப்பட மாட்டார்களா? என்றெல்லாம் எண்ணிணாள்.

ஆனால் ஆசை யாரை விட்டது?

இது மட்டும் கிடைத்தால் கவலையெல்லாம் பறந்து போகுமே என்ற மனோரதம் அவளைத் தூண்டியது. காலையிலிருந்தே நமநம என்றோர் அரிப்பு. 'வேண்டும், வேண்டும்' என்று மனம் அலைபாய்ந்தது. கணவனைக் கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்த அவள் கணவன் 'எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. நீயே அந்தக் கடைக்குப் போய் வாங்கிக் கொள்' என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டான். 'அந்த மாதிரி' கடைக்கு நான் எப்படிப் போவது என்று கேட்டாள். 'அந்த மாதிரி' ஆசை இருந்தால் 'அந்த மாதிரி' கடைக்குத்தான் போக வேண்டும். பொதுவாக அங்கே வாங்குவதுதான் சிறந்தது என்றான் அவள் கணவன்.

வேலைக்குச் சென்ற பின்னும் மனம் ஓயவில்லை. தோழியிடம் கேட்டாள். அந்தக் கடைக்கு போய் 'இதை' வாங்கி வரலாமா என்று. 'உனக்கென்ன பைத்தியமா' என்று தோழி ஒரே போடாகப் போட்டாள்.

கணவனுக்கு ஃபோன் செய்தாள். 'எனக்கு என்னவோ போல் இருக்கிறது. நீங்களே போய் வாங்கி வாருங்களேன்' என்று சொன்னாள். ஏற்கனவே வேலையில் ஏதோ கடுப்பிலிருந்த கணவன், 'இதோ பார் காவேரி, காலையில் ஏதோ விளையாட்டுக்குக் கேட்கிறாய் என்று நினைத்தேன். இதெல்லாம் சிலரை அடிமையாக்கிவிடக் கூடும். அதற்கு மேல் உன் இஷ்டம். இனி இது விஷயமாக என்னைத் தொந்தரவு செய்யாதே' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான்.

அப்படி என்னதான் ஆகிவிடும்? நாமே வாங்குவோம் என்று காவேரி தீர்மானித்து விட்டாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இரண்டு தெரு தள்ளி இருக்கும் 'அந்தக் கடை'க்குச் சென்றாள்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு மதுபானம் விற்கும் அந்தக் கடைக்குள் சென்றாள். கடைக்காரனிடம் சென்று 'இது' வேண்டும் என்று கேட்டுவிட்டாள்! அவள் கண்களில் ஒளிவெள்ளம். கலர் கலராய் கனவுகள்.

அவள் வாங்கியது ஒரு சூப்பர் லோட்டோ லாட்டரி டிக்கட்!

சசி வைத்தியநாதன்

© TamilOnline.com