எவ்வழி நல்லவர் ஆடவர்...
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்' தேவாரப் பாடலை முணுமுணுத்தவாறே பின்புறமிருந்த தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் நமசிவாயம். அவரது கைநயம் அத்தொட்டிகளில் வண்ணம் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. பெற்ற தாய் குழந்தையைக் தடவித் தடவி வளர்ப்பது போல் அவர் ஒவ்வொரு தொட்டிச் செடியுடனும் நின்று குசலம் விசாரித்து விட்டுச் செல்வதே பார்த்து ரசிக்கும் வண்ணமிருக்கும். நான்கு மாதப் பனிப் பொழிவின் அயர்ச்சியிலிருந்து விடுதலை பெற்ற வீங்கிளவேனிலின் வரவு உண்மை யிலேயே மனதுக்கு ரம்மியமாக இருந்தது. உள்ளே மனைவி சிவகாமியின் கைவண்ணம் வெந்தயத் தோசையும், மிளகுக் குழம்புமாக மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஆயிற்று, இன்னும் அரை மணியில் மகள் வனிதாவும் பின்னாலேயே மருமகன் விஜயும் வந்துவிடுவர்.

'ஹை, நம்மஸ் அங்க்கிள்' என்று அழைக்கும் இளம் குரலைக் கேட்டுத் திரும்பினார். நம்மஸ் என்பது நமசிவாயத்தின் அமெரிக்கச் சுருக்கம். பின்னால் தொட்டிப் பூக்களுடன் போட்டியிடுவது போல் நின்றிருந்தாள் சிறுமி கேத்தி என்கிற கேதரின். அவளைத் துரத்திக் கொண்டு தாய் மார்கரெட். 'நமஸ்த்தே அங்கிள்' என்று தான் நமசிவாயத்திடம் கற்றுக்கொண்ட தமிழை அவரிடமே மழலையில் அரங்கேற்றினாள். 'ஆன்ட்டியின் டோ ஸா ஸ்மெல்ஸ் குட்' என்று இழுத்து மூக்காலேயே தோசையை ருசிக்கலானாள்.

இந்திய முகம் ஒன்றைக் காண ஐந்து மணி நேரம் பயணிக்கவேண்டிய அவ்வூரில் சொந்த மனிதர்களைவிட ஒட்டுதலாகப் பழகும் மார்க ரெட்டின் குடும்பம் பின் வீட்டிலிருந்தது அவர்களுக்கு ஒரு வரம் போல் அமைந்து விட்டது. மாகி, ஸ்டீவ், பெரிய மகன் ரிச்சி, கடைக்குட்டி கேத்தி என சிங்காரக் குடும்பம். அவர்களது பாசப் பிணைப்பு அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. வந்து இரண்டு மாதங்களிலேயே நன்கு ஒட்டிக் கொண்டு விட்டாள் குழந்தை கேத்தி. பெரியவனுக்கும் இவளுக்கும் சுமார் பத்து வயது வித்தியாசம் இருக்கும். 'இவளுக்கே நாற்பதுக்கு மேலி ருக்கும் போலிருக்கு. எப்படித்தான் இந்தப் பெண்ணுடன் ஓடியாட முடிகிறதோ?' என்று சிவகாமி ஆச்சரியப் படுவாள்.

'ஹவ் அபெளட் சம் டோ ஸா' என்று நமசிவாயம் கேட்கு முன்பே ஒரு சிறு தட்டில் அழகிய வாத்து உருவத்தில் சிறு தோசை நெய் சர்க்கரை பக்கவாத்தியங்களுடன் கேத்தியின் முன் நீட்டப்பட்டது. 'ஹை, க்யூட் டக்கி' என்ற கூச்சலுடன் தட்டைப் பறித்துக்கொண்டாள் குழந்தை. மாகியும் கெட்சப் துணையுடன் தோசையை ('ஜஸ்ட் டெம்ப்ட்டிங்') விழுங்க ஆரம்பிக்கவும் வனிதா 'ஹாய் மாகி' என்றவாறே நுழையவும் சரியாக இருந்தது. 'உன் அம்மா வந்ததில் உனக்கு எப்படியோ, என் நாக்கு ரொம்பவே வளர்ந்துவிட்டது, கேத்தியைக் கேட்கவே வேண்டாம். விட்டால் உன் பெற்றோருடன் இந்தியாவுக்கே போகத் தயாராகிவிட்டாள்' என்றாள் மாகி.

'அம்மா, மாகி முன்பே ஒருமுறை இந்தியா போயிருக்கிறாள். சொல்லமுடியாது. நினைத் தால் கோடை விடுமுறைக்கு சென்னை வந்து நின்றாலும் நின்று விடுவாள்' என்ற வனிதா, 'மறந்தே போனேனே; உன் பால்ய தோழி சாரதா ஆன்ட்டி இங்கே வந்திருக்கிறாங் களாம். அவங்க பெண் மாதுரி போன் பண்ணினாள். வாரக் கடைசியில் அழைத்து வருவதாகச் சொன்னாள்' என்று புதுச் செய்தி வாசித்தபடியே உடை மாற்ற மாடிக்குச் சென்றாள். சிவகாமியின் மனம் சாரதாவின் வாழ்க்கையை அசைபோடத் தொடங்கியது.

சாரதாவும் சிவகாமியும் நெருங்கிய தோழிகள். பள்ளியிறுதிக்குப் பின் தந்தையின் ஊர் மாற்றத்தாலும், மணவாழ்க்கை வெவ்வேறு திசைகளில் திருப்பியதாலும் சந்திப்புகள் குறைந்தன. சாரதாவின் மகன் எஞ்சினியராக குஜராத்தில் இருந்த பொழுது அவ்வூர்ப் பெண்ணை விரும்பி மணம் செய்துகொண்டதும் அதனால் சாரதா உள்ளிட்ட குடும்பத்தினரால் முற்றிலும் ஒதுக்கப்பட்டதும் மகள் திருமணமாகி ஸ்டேட்ஸில் தன் மகள் இருக்கும் ஊரில் வசிப்பதும் கேள்விப்பட்டதுதான். எங்கோ எப்படியோ இருக்கிறான் என்று கூட இல்லாமல் ஒரே மகனும் மருமகளும் குஜராத்தில் நிகழ்ந்த இயற்கையின் வெறியாட்டத்திற்கு இரையாகிவிட்டனர் என்பதைக்கூட மகள் வனிதா மூலம் அறிந்து இரங்கல் கடிதம் அனுப்பினாள். அதற்கும் பதிலில்லை. அவளை வெகு காலத்துக்குப் பின் சந்திக்கப் போவதை எண்ணி வார விடுமுறையை எதிர்பார்த்திருந்தாள்.

அந்த நாளும் வந்தது. காலமும் கவலை களும் இழுத்த கோடுகள் அவளை மிகவும் உருக்குலைத்துவிட்டிருந்தன. 'என்ன சாரதா, ஆளே அடையாளம் தெரியாமல் ஆகி விட்டாயே! அவர் வரவில்லையா?' என்றபடி அவளை வரவேற்றாள் சிவகாமி.

'அவருக்கு இந்த ஊர் ஒத்துக்கொள்வ தில்லை. இதோ நானும் மாதுரி பிரசவித்த உடனே புறப்பட்டுவிடலாமென்று இருக் கிறேன். ஆமாம், வயசொரு பக்கமும் கஷ்டங்கள் ஒரு பக்கமும் பங்கு போட்டு அலைக்கழிக்கும் போது இந்த மட்டும் இருப்பதே அதிகம். ஏதோ பெண்ணாவது நல்லபடியாக இருக்காளே அதுதான் சற்று ஆறுதல்' என்று விரக்தியாகப் பதிலிறுத்தாள்.

'உன் லெட்டர் கிடைத்தது. ரொம்ப நாளுக்குப் பின் போடும் கடிதம் உபசாரக் கடிதமாகி விட்டது. நானும் பதில் போடும் மனநிலையில் அப்போது இல்லை. போட்டி போட்டுக்கொண்டு நானும் அவருமாய் அவனைக் காணவொட்டாமல் கரித்தோம். 'எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொண்டு போகிறோம்' என்பதுபோல் ஜோடியாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். எங்கள் மனதில் இடமில்லையென்று சொன்ன வேளை அவனுக்கு உலகத்திலேயே இடமில்லாமல் போய்விட்டது. அந்தப் பெண் கூட உண்டாயிருந்தாள் என்று கொஞ்ச நாளுக்கு முன் யாத்திரையாக அந்தப் பக்கம் போய் வந்த என் மேல் வீட்டுக்காரி சொன்னாள். ஆடிக்காற்றில் அம்மி பறக்கும் போது அந்தப் பூ மட்டும் எங்கே மிஞ்சியிருக்கப் போகிறது?' என்று நெடுமூச்செறிந்தாள்.

இன்னும் மதிய உணவுக்குப் பின் சற்று நேரம் பின்புறம் நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு இருவரும் உரையாடிக் கொண்டி ருந்தனர். 'ஹாய், ஆன்ட்டி' என்று கூவியபடி கேத்தி சிவகாமியின் மடியில் ஏறி அமர்ந்து விட்டாள். 'பின் வீட்டுப் பெண். இது என் ஸ்வீகாரப் பேத்தி. ஸ்கூல் போன நேரம், தூங்கும் நேரம் போக இங்கேதான் சுற்றிச் சுற்றி வரும்' என்றபடி 'கேத்தி, ந்யூ ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லு' என்றாள். குழந்தையை உற்றுப் பார்த்த சாரதா, 'இதைப் பார்த்தால் அமெரிக்கக் குழந்தை போலவே இல்லையே. இன்னும் சொன்னால், என் பிள்ளை கடன்காரன் இருந்தானே, அவன் போலவே இருக்கு' என்றாள்.

புதிரான பார்வையுடன் அவளைப் பார்த்த சிவகாமி தன் மகளைக் கூப்பிட்டு, 'வனி, சாரதா ஏதோ சொல்கிறாளே. இது மாகி பெற்ற குழந்தையில்லையா?' என்று கேட்டாள். 'ஆமாம். அவளே சொல்லியிருக்காள். பெத்து ஒன்று தத்து ஒன்று என்று தீர்மானித்திருந் தார்களாம் அவளும் ஸ்டீவும். இவள் வளர்ப்பு மகள்தான். ஆனால் எங்கு தத்தெடுத்தாள் என்பதெல்லாம் விவரமாகத் தெரியாது' என்றாள் வனிதா.

பின்னாலேயே வந்த மாகி 'ஸ்விம்மிங் போகணும். இவளானால் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாள். இவளை சேஸ் பண்ணியே என் எனர்ஜியெல்லாம் போய் விடுகிறது என்று மேல்மூச்சு வாங்க அவளை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றாள். 'மாகி, க்ளாஸ் முடிந்ததும் வாயேன். வடா செய்யப் போகிறேன்' என்று அழைப்பு விடுத்தாள் சிவகாமி.

மாலை திரும்பிய மாகியிடம் தனிமையில் விசாரித்தபொழுது அவள் ஒர் கதையே சொல்லிவிட்டாள். அவர்கள் மூன்று ஆண்டு களுக்கு முன் இந்தியா டூர் சென்றிருந்தனர். காந்தி பிறந்த மாநிலமான குஜராத்துக்கும் சென்றனர். போர்பந்தர், பிரசித்திபெற்ற சோமநாதபுரக் கோவில் எல்லாம் பார்த்து முடித்துத் திரும்புவதற்கு முன்தினம்தான் அந்த கோரம் நிகழ்ந்தது. பூகம்பத்தில் மாட்டிக் கொண்டு மாண்டவரைத் தோண்டியெடுத்து, மீண்டசிலரைக் காத்துக் கொணர்ந்து என மீட்புப் பணி ஒருபுறம் நடக்க, மருத்துவரான ஸ்டீவ் தன்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது இடிபாட்டுக் குவியல் ஒன்றிலிருந்து இழுத்து வெளியே சேர்க்கப்பட்டுக் குற்றுயிராக இருந்த நிறைமாத கர்ப்பிணியொருத்தி ஒரு பெண் மகவைப் பெற்றவுடன் இறந்துவிட்டாள். அவள் கணவன் முன்பே இடிந்த வீட்டிலிருந்து சடலமாகக் கொண்டுவரப்பட்டான். இறந்து விட்ட அப்பெண்ணின் பெயர் பூனம் ராஜ் என்றும் உற்றார் உறவு என்று யாரும் வந்து போவதில்லையென்றும் மீண்டிருந்த அயலார் சிலர் கூறினர். மண்ணைத் தீண்டும் முன்பே பெற்றோரை இழந்துவிட்ட அந்தப் பிஞ்சுக் குழந்தையை வேண்டிய சம்பிரதாயங்களை முடித்து எடுத்து வந்து வளர்த்து வருகின்றனர்.

கண்ணீர் வழிய அமர்ந்திருந்த சாரதா 'எங்கள் வீம்பினால் நான் பெற்ற மகனும், மருமகளும் அநாதைகளாகிவிட்டாலும் அவர்களின் வாரிசுக்கு பகவான் எவ்வளவு உயர்ந்த வாழ்வைக் கொடுத்துவிட்டான்! நாங்கள் தரத்தவறிய அன்பையும் பாசத்தையும் அள்ளிக்கொடுக்கும் இவர்களிடமல்லவா மனிதம் ஆட்சிசெய்கிறது!' என்று அவர்களை மனதார வாழ்த்தினாள் சாரதா.

பள்ளியில் படித்த 'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே!' என்ற ஔவையாரின் பாடலை நினைவு கூர்ந்தாள் சிவகாமி.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com