2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன - பாகம்-5
2005, 2006 ஆண்டுகளில் சில மிகப் பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடைபெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது!

சமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது (2007-ல்) வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் என் கருத்துக்களும் இங்கு இடம் பெறுகின்றன.

இப்போது இக்கட்டுரையின் இறுதிப் பகுதியாக, 2007-ஆம் ஆண்டின் இன்னொரு பரபரப்பான துறையான சுத்த சக்தி தொழில்நுட்ப (clean energy tech) வாய்ப்புக்களைப் பற்றிக் காண்போம்.

எதோ சுத்த தொழில்நுட்பம் (clean tech) என்று பரவலாக அடிபடுகிறதே? அதிக அளவில் ஆரம்ப நிலை மூலதனம் அத்துறைக்குப் போகிறது போலிருக் கிறது... அதில் எங்களுக்கும் எதாவது வாய்ப்புள்ளதா? நாங்கள் என்ன செய்யக் கூடும்?

சரி, சுத்தத் தொழில்நுட்பம் (clean tech) என்றால் என்ன என்று பார்ப்போம். அந்தப் பெயரைக் கேட்டால் எனக்கு முதலில் 'அபாரமான வெள்ளைக்கு ரின்! ரின் ஸோப் அல்ல--அது ஒரு டிடெர்ஜெண்ட் சலவை வில்லை!' என்ற விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்புக் குரல்தான் ஞாபகம் வருகிறது! சுத்த நுட்பம் துணிகளை சுத்தம் செய்வதற்கானது அல்ல. நாம் சுவாசிக்கும் காற்றையும் உலகின் நீர்த்தேக்கங்களையும் சுத்தமாக்கவும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்குமானது.

சுத்த நுட்பங்களை நான்கு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்:

முதலாவது, கரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள். உதாரணமாக, மின்சார அல்லது ஹைப்ரிட் கார் போன்றவை. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விடச் சுத்தமாக எரியக் கூடிய எரி பொருட்களான பயோடீஸல், எத்தனால் போன்றவை.

எரிபொருட்களைத் திறம்படப் பயன் படுத்துவது (efficiency of energy utilization): அதாவது ஒரேயளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிக அளவில் ஆற்றல் அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது. வெளிப்படும் மாசுகளைத் தூய்மை செய்தல் அல்லது தனிப்படுத்துதல் (pollution cleanup or sequestration).

சிலர் அமெரிக்காவிலுள்ள பெட்ரோலி யத்தை இன்னும் குறைந்த விலையில் அல்லது அதிகமாக எடுக்க உதவும் தொழில் நுட்பங்களையும் சுத்த நுட்பங்களோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வெனிஸுவேலா போன்ற சோஷலிஸ நாடுகளின் கெடுபிடி களினால் அமெரிக்காவும் மற்ற உலக பெரு நாடுகளும் (சைனா, இந்தியா உட்பட) பொருளாதார மற்றும் உலக அரசியல் சங்கடத்துக்கு உள்ளாகாமலிருக்க அத்தகைய புது நுட்பங்கள் உதவலாமே ஒழிய, அது மாசுக்கள் குறையவும், சுத்தமாக்கப் படவும் ஒரு உதவியும் அளிக்காதவை. பார்க்கப் போனால், பெட்ரோலியத்தைச் சார்ந்த மாசு மிக்க எரிபொருட்களை இன்னும் அதிகமாகப் பயன் படுத்தவே உதவுகின்றன. அதனால் இந்த வகையறாவை அசுத்த சக்தி நுட்பம் என்றுதான் கூற வேண்டும்!

கரியமில வாயுவை வெளிவிடாத தொழில்நுட்பங்கள்:

உதாரணமாக, முழுவதும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளைக் குறிப்பிடலாம். தற்போது ஏற்கனவே ஹைப்ரிட் எனப்படும் பாட்டரியில் மின்சார மோட்டார், கேஸலின் எரித்து ஓட்டும் மோட்டார் இரண்டையும் மாறிமாறி உபயோகிக்கும் வண்டிகள் பிரபலமாகி உள்ளன. அதே மாதிரி வண்டிகளுக்கு, வீட்டு மின்சாரத்தினால் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரித் தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. வருங்காலத்தில் முழுமையாக மின்சாரத்திலேயே ஒடக் கூடிய வண்டிகளும் தயாரிக்கப் பட்டுள்ளன. டெஸ்லா மோட்டர் நிறுவனத்தின் அதிவேக வண்டியை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

சூரிய ஒளி மின்னணு சிப்கள் மேல் படுவதால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பல விதமான நுட்பங்களைப் பெருமளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதில் சில வணிக ரீதியில் வந்துள்ளன. கூகிள், வால் மார்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்கள் மேல் வைத்து பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்து தங்கள் மாசு வெளியீட்டைக் குறைத்து வருகின்றன. வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டின் கூரையும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது!

மேலும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைச் சூடாக்கும் நுட்பம் இப்போது நீச்சல் குளங்களுக்குப் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் குளிக்கும் நீரை சூடாக்கவும் சூரிய வெப்ப பாயிலர்கள் வீடுகளின் மொட்டை மாடிமேல் வைக்கப் பட்டுள்ளன.

மிக ஆழ்ந்த சந்தேகங்களுக்கு ஆளான அணுசக்தியையும் கூட இந்த வகையில் குறிப்பிடலாம். முக்கியமாக, பெட்ரோலியம் மற்றும் கார்பன் சார்ந்த எரிபொருட்களின் மேல் தங்களுக்குள்ள சார்பைக் குறைப்பதற் காக இந்தியாவும் சைனாவும் அணுசக்தித் துறையில் மிகப் பெரும் கவனம் செலுத்துகின்றன. இத்துறையில் இரு பெரும் கேள்விக்குறிகள் உள்ளன: சக்தி உற்பத்திக்குப் பிறகு கதிர்வீச்சுக் கழிவுப் பொருட்களை (radioactive waste) எப்படித் தீய விளைவின்றிப் பாதுகாப்பாக வைப்பது. இரண்டாவது 3-மைல் தீவு, செர்னோபில் போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் எப்படித் தடுப்பது. இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அணுப்பிளவுக்குப் (nuclear fission) பதிலாக, சூரியசக்திக்கு மூலகாரணமான அணுச்சேர்க்கைச் (fusion) சக்தி சுத்தமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஆராய்ச்சி நடைபெறுகிறது.

அது மட்டுமன்றி, ஹைட்ரஜன் ஃப்யூயல் ஸெல், புவிவெப்பம் (geo thermal), காற்று சக்தி, கடலலை சக்தி, மின்சக்தியை இன்னும் அதிகமாக தேக்கி வைக்கக் கூடிய பேட்டரிகள், போன்ற பல நுட்பங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ஹைட்ரொஜன் துறையில் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கார் நிறுவனமான ஃபோர்ட், பில்லியன் டாலர் கணக்கில் இழப்படைந்து தடுமாறும் நிலையில் தன் எதிர்காலத்தையே ஹைட்ரஜன் கார்கள் மேல் பணயம் வைத்துள்ளது! அப்பணயம் வெற்றி பெற்றால் அது ஃபோர்டுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பெரும் நன்மை பயக்கும். அதனால், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்!

பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரி பொருட்கள் கேஸலின், தற்போதைய டீஸல் போன்றவை, எரியும் போது வெளிவிடப் படும் மாசு வாயுக்களும், தூசுப் பொருட்களும் உலக வெப்ப அதிகரிப்பின் மூல காரணங்களில் ஒன்றாகும். ஆனால், ஒரேயடியாக மாசற்ற சக்திகளை உடனே வண்டிகளுக்குப் பயன்படுத்துவது சாத்தியமன்று. (உலகில் தற்போது ஓடும் பல பில்லியன் வண்டிகளை யோசித்துப் பாருங்கள்!) அதனால், வெளியிடப் படும் மாசைக் வெகுவாகக் குறைக்கும் வேறு எரிபொருட்களை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.

அத்தகைய பல பல எரிபொருட்களை ஏற்கனவே அன்றாட நடைமுறை பயனுக்கு சிறிதளவு கொண்டு வந்துள்ளனர். E85 எனப்படும், எத்தனால் (ethanol or ethyl alcohol) என்னும் ஆல்கஹாலை பெருமளவில் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. பிரேஸில் நாட்டில், அத்தகைய வண்டிகள்தாம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஓடுகின்றன, E85 எரி பொருளையே பயன் படுத்துகின்றன. அமெரிக்காவில் E85 வண்டிகள் மிகக் குறைந்த சதவிகிதமே. இருப்பவையும், E85 கேஸலின் ஸ்டேஷன்களில் எளிதில் கிடைப்பதில்லையாதலால், வெறும் கேஸலினையே பயன்படுத்துகின்றன. எத்தனாலை மக்காச் சோளத்திலிருந்து உருவாக்கினால் சாப்பிடச் சோளம் இருக்காது என்பதால், மரப்பட்டைகள், சோளச் சக்கைகள் போன்ற மற்றப் பயனற்ற மூலப் பொருட்களிருந்து ஸெல்லுலோஸிக் எத்தனால் என்ற முறையில் உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள்.

அடுத்து பயோடீஸல். தற்போதைய டீஸல் கார்களே வெறும் தாவர எண்ணையை டீஸலுக்குப் பதில் பயன்படுத்த முடியும். சில சிறு மாற்றங்களுடன், மக்டானல்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் பொரித்தபின் வீணாக எறியப் படும் கொழுப்பையும், எண்ணையையும் டீஸலுக்குப் பதில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜட்ரோப்பா (jatropa) என்னும் செடியிலிருந்து பயோடீஸல் தயாரிக்கும் முறையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் ஜட்ரோப்பா செடிவகையை வளர்க்கும் தொழிலும் கூட ஆரம்பித்துள்ளது!

அது மட்டுமல்லாமல், இயற்கை வாயுவைப் பயன்படுத்தினால் மிகக் குறைவான மாசு வெளியிடப் படுகிறது என்பதால் பல இயந்திரங்களையும், மோட்டர் கார்கள், பேருந்துகளில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் அத்தகையப் பேருந்துகளை மட்டுமே அனுமதித்துள்ளதால் மாசு பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் மாசு கக்கும் லாரிகளுக்கும் ஆட்டோ ரிக்ஷாக் களுக்கும் இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் உருவாகி வருகிறது. (பெட்ரோலியத்தை விட இயற்கை வாயு பெருமளவில் கிடைக்கிறது என்பது போனஸ்! இந்தியாவிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகள் கடலில் கலக்கும் இடத்திலேயே பெரிய இயற்கை வாயுத் தேக்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு போனஸ்!)

அடுத்து நிலக்கரி. என்ன! கரியமில வாயுதானே பெரும் பிரச்சனையே? எப்படி கரி தூய எரிபொருளாக முடியும் என்கிறீர்களா? சரிதான். ஆனால் கரியை நேரடியாக எரித்தால்தான் பெரும் மாசு. அதற்குப் பதிலாக, இயற்கை வாயுவை திரவமாக்குவது (Liquefied natural gas) போன்று கரியிலிருந்தும் ஒரு விதமான எண்ணையை வெளியெடுத்து, அதையே பயன் படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு 'கரித்திரவம்' (coal-to-liquid) என்றுப்
பெயர்.

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com