களிமண் தள டென்னிஸ்
களிமண்ணுக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உண்டு. சிறுவயதிலேயே கணக்கு வாத்தியார் 'உன் தலையில என்ன களிமண்ணா இருக்கு?' என்று வியந்து போயிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆக களிமண் தள டென்னிஸ் பருவம் துவங்கி ஜூன் மாதத்தில் அதன் உச்சகட்டமாகவும், இறுதிப் போட்டி யாகவும் வரவிருக்கும் ஃபிரெஞ்ச் ஓப்பனை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் களிமண் மேல் எனக்குப் புது ஆர்வம் ஏற்பட்டதில் ஒன்றும் ஆச்சரிய மில்லை.

களிமண் தளத்தில் நடக்கும் ஃபிரெஞ்ச் ஓப்பன் மேல் பல டென்னிஸ் வீரர்களின் கவனமும் திரும்பி இருக்கிறது. அதிலும் முக்கியமாக டென்னிஸ் உலகில் முதலாவது, மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள ராஜர் ஃபெடரருக்கும், ரஃபேயல் நடாலுக்கும் சற்று அதிகமான ஆர்வம் இருக்கிறது என்று சொல்லலாம்.

களிமண் தள டென்னிஸில் தற்போதைய முடிசூடா சக்கரவர்த்தி ரஃபேயல் நடால். இந்தத் தளத்தில் தொடர்ந்து 81 ஆட்டங்களில் வெற்றிபெற்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் நடால். இதற்கு முன்னால் ஒரே தளத்தில் அதிக வெற்றிகளைப் படைத்தவர் ஜான் மக்கன்ரோ. இவர் மூடிய அரங்கில் நடக்கும் கார்ப்பெட் தளத்தில் 75 தொடர் வெற்றிகளைப் பெற்றவர். 81 தொடர் வெற்றிகளில் ரஃபேயல் இரண்டு ஃபிரெஞ்ச் ஓப்பன் கோப்பைகள் உள்பட மொத்தம் 13 கோப்பைகளைக் கைப்பற்றி இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்கள் ஃபிரஞ்ச் ஓப்பனைத் தொடர்ந்து வென்று, இந்த ஆண்டு மீண்டும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்.

டென்னிஸ் உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ராஜர் ஃபெடரருக்கு இருக்கும் ஒரு குறை, இதுவரை ஃபிரெஞ்ச் ஓப்பனைக் கைப்பற்றாமல் இருப்பதுதான். அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் ரஃபேயல் நடால். இவர்கள் இருவரும் களிமண் தள போட்டிகளில் இதுவரை 6 முறை மோதி இருக்கின்றனர். அதில் நடால் 5 முறை தொடர் வெற்றி பெற்றிருக்கிறார். சென்ற வருடம் இத்தாலிய ஓப்பனில் இறுதி ஆட்டத்தில் ஃபெடரரும், நடாலும் 6 மணி நேரம் மோதினர். மிக நெருக்கமாக இருந்த போட்டியில் இறுதியில் நடால் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து வந்த ஃபிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டியில் மீண்டும் ரஃபேயல் நடாலிடம் தோற்றது ராஜருக்குப் பெருத்த ஏமாற்றம்.

ராஜர் ஃபெடரரின் திறமையைப் புகழாதவர் கள் இல்லை. ஜான் மக்கன்ரோ ராஜரை உலகிலேயே மிகத் திறமையான வீரராகக் கருதுகிறார். ஆனால் களிமண் தளத்தில் அவரால் ஏன் சுலபமாக வெல்ல முடிய வில்லை? அமெரிக்க டென்னிஸ் வீரர்கள் பலர் களிமண் தளத்தில் நன்றாக விளையாடு வதில்லை. ஜான் மக்கன்ரோ, பீட் சாம்ப்ரஸ் உள்பட பல சிறந்த வீரர்கள் ஃபிரெஞ்ச் ஓப்பனைக் கைப்பற்றியதில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக களிமண் தளத்தில் ஓடி, நகர்ந்து விளையாடுவது மற்ற தளங்களில் இருந்து வேறுபட்டது. நடால் போல அந்த தளத்தில் விளையாடிப் பழகியவர்களுக்கு அதில் சுலபமாக சறுக்கி பந்தை அடிப்பது எளிது. அமெரிக்காவின் ஹார்ட் கோர்ட் தளங்களில் வளர்ந்தவர்களுக்கு அது சுலபமில்லை. ஆனால் ராஜருக்கு களிமண் தளங்கள் புதிதல்ல. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த அவர், களிமண் தளங்களில் விளையாடிப் பழகி இருக்கிறார்.

களிமண் தளங்களில் உள்ள இரண்டாவது வித்தியாசம், பந்தின் வேகம் குறைந்து போவதுதான். ஹார்ட் கோர்ட்டிலும், புல்தரை தளங்களிலும் எதிராளி அடிக்கும் பந்து மிக வேகமாக வரும். ஆனால் களிமண் தளங்களில் அதன் வேகம் சற்றே குறைந்து விடுகிறது. இந்த தளத்தில் மிக சிறப்பாகவும், வேகமாகவும் நகரும் நடால் போன்ற வீரர்களுக்கு பந்தை திரும்பி அடிக்க அதிக அவகாசம் கிடைக்கிறது. அதனால்தான் களிமண் தள போட்டிகளில் எதிராளிகள் அதிக நேரம் பந்தை மாறி மாறி அடிப்பார்கள். இதில் விளையாடும் வீரர்களுக்குப் பொறுமையும், அதிக நேரம் விளையாடுவதற் கான உடல் வலுவும் தேவை.

சாம்பிரஸ், ஃபெடரர் போன்ற வீரர்கள் வேகமான தளங்களை விரும்புபவர்கள். தங்களது திறமையால், ஆடுகளத்தின் வேகத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்பவர்கள். எதிராளிக்குப் பந்தை திருப்பி அடிக்கும் நேரம் குறைவதால் இவர்களால் புள்ளிகளை சுலபமாக வெல்ல முடிகிறது.

ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப் பிறகு இந்த வருடம் ராஜர் எந்தக் கோப்பையையும் கைப்பற்றவில்லை. ஏப்ரல் மாதம் மான்டி கார்லோவில் நடந்த களிமண் தளப் போட்டியில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி நடாலைச் சந்தித்தார். அதில் அவரிடம் மீண்டும் தோற்றார். அதற்கு அடுத்து வந்த இத்தாலிய ஓப்பனில் கால் இறுதிக்குக் கூட முன்னேறாமல் தோற்றார். இந்தத் தோல்வி களில் இருந்து மீள்வாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழ ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து தனக்குப் பகுதி நேரப் பயிற்சியாளராக இருந்த டோ னி ரோச்சை வேலை நீக்கம் செய்தார். சில காலம் பயிற்சி யாளர் இல்லாமலே விளையாடப் போவதாக அறிவித்தார். பயிற்சியாளர் இல்லாமல் ராஜர் பல கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளைக் கைப்பற்றி இருப்பதால் இது யாருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை.

இந்த நிலையில் ஜெர்மெனியில் ஹாம்பர்க் நகரில் நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராஜரும், நடாலும் மீண்டும் மோதினர். ஐந்து தோல்விகளுக்குப் பிறகு ராஜர் இந்தப் போட்டியில் நடால் என்ற புதிரை அவிழ்த் தார். களிமண் தளத்தில் முதன் முறையாக நடாலை 2-6, 6-2, 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அடுத்து வரவிருக்கும் ஃபிரெஞ்ச் ஓப்பன் போட்டிகளில் மீண்டும் ராஜரும், நடாலும் மோதுவார்களா? யார் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்று வார்கள் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இவர்களைத் தவிர களிமண் தளத்தில் சிறப் பாக ஆடும் பல வீரர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ராஜரும், நடாலும் முட்டுக்கட்டையாக இருப்பதால் ஆன்டி ராடிக் உள்பட பல வீரர்கள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெல்ல முடியவில்லை. ஆன்டி ராடிக், ஜேம்ஸ் பிளேக் போன்ற அமெரிக்க வீரர்கள் களிமண் தளங்களில் சிறப்பாக விளையாடு பவர்கள் இல்லை என்றாலும் ராஜரோ, நடாலோ முதல் சில சுற்றுக்களிலேயே தோற்றால் இறுதிவரை முன்னேற இவர் களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த வருட ஃபிரெஞ்ச் ஓப்பனை வெல்வாரா? கடைசியாக இந்தக் கோப்பையைக் கைப் பற்றிய ஃபிரெஞ்ச் வீரர் யானிக் நோவா. இவர் 1983-ல் இந்த சாதனையைப் புரிந்தார். 2000-ல் பெண்கள் பிரிவில் மேரி பியர்ஸ் வென்றார். பல திறமையான ஃபிரெஞ்ச் ஆட்டக்காரர்கள் களத்தில் இருக்கிறார்கள். ரிசார்ட் காஸ்கே (Richard Gasquet) ஃபிரெஞ்ச் ஆட்டக்காரர் களில் முதல் இடத்தில் இருக்கிறார். இவரைத் தவிர ஜூலியன் பெனடோ (Julien Benneteau), செபாஸ்டியன் குரோஜான் (Sebastian Grosjan), பால் ஹென்ரி மாத்யூ (Paul-Henri Mathieu) ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். இவர்களில் ரிசார்ட் காஸ்கே வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். குரோஜானும், மாத்யூவும் உடல் நலக் குறைவுடன் இருக்கின்றனர்.

இதுவரை ஃபிரெஞ்ச் ஓப்பனை அதிகமுறை வென்றவர் பியான் போர்க் (Bjorn Borg). இவர் இந்தக் கோப்பையை 6 முறை கைப்பற்றி இருக்கிறார். லகோஸ்ட் (Rene Lacoste), குவெர்டன் (Gustavo Kuerten), விலான்டர் (Mats Wilander), லென்டல் (Ivan Lendl) ஆகியோர் மூன்று முறை கைப்பற்றி இருக்கின்றனர். நடால் இந்தக் கோப்பையை மூன்றாம் முறை கைப்பற்றி இந்த வரிசையில் சேர்வாரா?

நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் வெற்றி பெறுவது சுலபமில்லை. கடைசியாக இந்த சாதனையைச் செய்தவர் ஆன்ட்ரே அகாசி. அதிலும் ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம்களிலும் வெல்வது மிகக் கடினம். கடைசியாக இந்த சாதனையைச் செய்தவர்கள் ஆண்கள் பிரிவில் ராட் லேவர் 1969-ல், பெண்கள் பிரிவில் ஸ்டெஃபி கிராஃப், 1988-ல். ராஜர் ஃபெடரர் சென்ற வருடம் இந்தச் சாதனையைச் செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்தார். ஆஸ்திரேலிய ஒப்பன், விம்பிள்டன், U.S. ஓப்பன் மூன்றிலும் வென்றார். ஆனால் ஃபிரெஞ்ச் ஓப்பனில் நடாலிடம் தோற்றார். இந்த வருடம் அந்தச் சாதனையைச் செய்ய முயல்வாரா? ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றுவிட்டார். ஃபிரெஞ்ச் ஓப்பனை வென்றால், மற்ற இரண்டு போட்டிகளிலும் வெல்ல அவருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

உலகின் முதல் நிலை, இரண்டாம் நிலை வீரர்கள் இறுதி ஆட்டத்தில் மோதினால் அதைவிடச் சிறப்பான போட்டியைப் பார்க்க முடியுமா? அதிலும் இந்தக் கோப்பையைக் கைப்பற்றுவதில் இருவருக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகப்படியான ஆர்வம் இருக்கிறது. ஆக, ரசிகர்களான நமக்கு வேட்டைதான். சுவாரசியமான ஃபிரஞ்சு ஓப்பன் நமக்காகக் காத்திருக்கிறது.

சேசி

© TamilOnline.com