மதுமிதாவின் இரண்டு நூல்கள்
மதுமிதா ஒரு நல்ல கவிஞர். அவருடைய 'மௌனமாய் உன் முன்னே' கவிதைத் தொகுப்பு (2003) இதை உரத்துக் கூறியது. மௌனத்துக்கு சொற்களைப் பூட்டி அலங்கரிப்பவையாக இருந்தன அவரது கவிதைகள். அடுத்த இரண்டு நூல்கள் அவரது பிற முகங்களோடு நமக்குப் பரிச்சயம் தருகின்றன.

சுபாஷிதம்

இதன் பெயர் மட்டுமல்ல, மூல நூலும் வடமொழிதான். 'எட்டுத் திக்கும் செல்வது இருக்கட்டும், எமது நாட்டிலேயே இருக்கும் உயரிய நூல்களைத் தமிழில் கொண்டு வந்துவிட்டோ மா?' என்று கேட்பது போல இருக்கிறது இந்நூல். இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தாயான சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் விழுமிய செம்மொழி களில் ஒன்று. ஒரு செம்மொழியிலிருந்து, மற்றொரு செம்மொழிக்கு ஓர் நல்லிலக்கியம் வருவது பேரழகு. அதுதான் இந்த நூலின் அழகும்.

சமஸ்கிருதத்தில் காளிதாஸனுக்கு இணை யாக வைத்து எண்ணப்படும் மஹாகவி பர்த்ருஹரியின் 'சுபாஷிதம்' (நன்மொழி) நூல் முன்னூறு பாடல்களைக் கொண்டிருப்பதால் 'சதக த்ரயம்' என்றும் அழைக்கப்படும். 'நீதி சதகம்', 'சிருங்கார சதகம்', 'வைராக்ய சதகம்' என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் நூறு பாடல்கள் உள்ளன. இவற்றை அழகான எளிய தமிழ்க் கவிதை களாக வடித்துத் தந்திருக்கிறார் மதுமிதா. ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிவரும் 'தேசாந்தரி'யில் ஒரு பாடலின் வரிகளை இட்டிருந்தார். போதாததற்கு, கமல ஹாசன் தனது 'வேட்டையாடு விளையாடு' படத்தில் ஜோதிகாவின் கையில் இதைக் கொடுத்துப் பிரபலப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூன்று பகுதிகள் கிட்டத்தட்ட வள்ளுவத்தின் முப்பால் போலத் தோன்றுவ தோடு, பல இடங்களில் குறட்பாக் கருத்துக் களோடு ஒத்துப் போவதையும் பார்க்கலாம். பர்த்ருஹரி வள்ளுவனுக்கு ஐந்தாறு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். கிடைத்த வரையில் இந்த மஹாகவிஞனின் வரலாற்றையும் கொடுத்துள்ளார் மதுமிதா. கவிதை அழகுக்காகவும் கருத்துக்காகவும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல்: சுபாஷிதம் (332 பக்கங்கள்); ஆசிரியர்: மதுமிதா (தமிழில்); வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை 600083; தொலைபேசி: 91 44 24896979.

நான்காவது தூண்

இலக்கியம் படைப்போர் சஞ்சிகை ஆசிரியர்களாக இருந்த காலம் மாறி செய்தியாளர்கள் அவ்விடத்தைப் பிடித்து விட்ட காலம் இது. சூடாகவும் சுவையாகவும் மட்டுமன்றிப் பரபரப்பாகவும் எழுதி விற்பனையை ஏற்றுகிற கட்டாயத்தைப் பழைய படைப்பாளி-ஆசிரியனால் சமாளித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தற்கால இதழாசிரியர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிற நூல்தான் 'நான்காவது தூண்'. நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களை அடுத்து, அவற்றுக்குத் துணையாகவும், சவாலாகவும் அவற்றின் மனச்சாட்சியாகவும் செயல்படும் பத்திரிக்கைத் துறைதான் அந்த நான்காவது தூண்.

தமிழில் வெளிவரும் 18 பருவ இதழ்களின் ஆசிரியர்களைப் பேட்டி கண்டிருக்கிறார் இந்நூலில் மதுமிதா. இப்போதெல்லாம் பொதுவாகக் காணப்படும் நாலு வரிப் பேட்டிகளல்ல இவை. கருத்திலும், வழங்க லிலும், உள்ளடக்கத்திலும், கொள்கையிலும் வெகுவாக மாறுபடும் கல்கி ஆசிரியர் சீதா ரவியிலிருந்து நக்கீரன் கோபால் வரையிலும் இதில் தமது மனதைத் திறந்துள்ளனர். நிலா (நிலாச்சாரல் மின்னிதழ்), லேனா தமிழ் வாணன் (கல்கண்டு), விக்கிரமன், அண்ணா கண்ணன், மனுஷ்ய புத்திரன் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. தென்றல் ஆசிரியர் உட்படத்தான். அவர்களுடைய எழுத்துலகை மட்டுமே பார்க்காமல், வாழ்க்கைப் பின்னணி, பிற விஷயங்கள் குறித்து அவர்களது பார்வைகள் என்று ஒவ்வொரு நேர்காணலுமே மிக விரிவானதாக இருக்கிறது.

இப்படிப் பதினெட்டு பத்திரிகை ஆசிரியர் களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு வெளிவருவது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதழியல் மாணவர்கள் மாணவர்களுக்கு வகுப்புப் பாடமாக வைக்கப்பட வேண்டிய இந்த நூல், எல்லோருமே சுவைக்கத் தக்கதுதான்.

நூல்: நான்காவது தூண் (367 பக்கங்கள்); ஆசிரியர்: மதுமிதா; வெளியீடு: ஸ்ரீ விஜயம் பதிப்பகம், சென்னை 600 041; தொலைபேசி: 91 44 24422433; இரண்டு நூல்களும் இணையம் மூலம் வாங்க: www.anyindian.com

மதுரபாரதி

© TamilOnline.com