சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்
அன்புக் குழந்தைகளே! எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே! உங்களுக்கு வாழ்க்கையிலே பெரிய சாதனை எல்லாம் பண்ணணும்னு நினைக்கிறீங்களா? அதுக்கெல்லாம் ஒரு இரகசியம் இருக்கு. முதல்ல இந்தக் கதையைப் படிங்க, பின்னாடி சொல்றேன்.

ஒரு வியாபாரி சந்தைக்குப் போயிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். நிறைய சாமான்கள் வாங்கியிருந்தார். அவற்றைத் தன்னோட கழுதை மேல ஏத்திக் கொண்டு வந்தார். தான் வாங்கின புதுக் குதிரையையும் கூடவே கூட்டிக்கிட்டு நடந்து வந்தார். அதுவோ மிகக் கடுமையான கோடைக்காலம். பாரமோ அதிகம். கழுதையால அந்த பாரத்தைச் சுமக்கவே முடியலை. ரொம்பக் கஷ்டப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த குதிரைக்குக் கிண்டலாக இருந்தது. கழுதையை வழிநெடுகக் கிண்டல் பண்ணிக் கொண்டே வந்தது.

'என்னைப் பார்த்தியா, நான் எவ்வளவு கம்பீரமாக இருக்கேன்! நான் நடக்கும் போது எப்படி 'டக்டக்'னு சப்தம் வருது. என்னை எல்லோரும் எப்படி மதிக்கிறாங்க. எஜமான் என்னை எப்படி ஆசையாத் தடவிக் கொடுத்து கூட்டிக்கிட்டு வர்றாரு பார்த்தியா? ஆனா, பாவம் நீ, சுமையைச் சுமக்கறதத் தவிர வேறு எதுக்கும் லாயக்கு இல்ல. ஒண்ணுக்கும் உதவாதவன் நீ. அதுனால தான் இப்படிக் கஷ்டப்படுற! ஹீ, ஹீ!' என்று கழுதையை வெறுப்பேற்றியது. கழுதையாலோ எந்தப் பதிலும் பேச முடியவில்லை. முடிந்தவரை உண்மையாக உழைப்போம் என்று பொறுமையுடன் மிக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது.

சற்று தூரம் சென்றது. வெயில் கொடுமையாலும், பாரம் தாங்க முடியாததாலும் கழுதை திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டது. அவ்வளவுதான் அந்த வியாபாரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கழுதையைப் பலவாறாக எழுப்பிப் பார்த்தார் அவர். அதன் மயக்கம் தெளியவேயில்லை. ஊருக்கோ வெகு தொலைவு செல்ல வேண்டும். மறுநாள் முக்கியமான வியாபாரம் வேறு இருந்தது. சற்று யோசித்தவர், கழுதை சுமந்து வந்து கொண்டிருந்த அத்தனைச் சுமைகளையும் குதிரையின் முதுகில் எடுத்து வைத்தார். மயக்கமடைந்த கழுதையையும் குதிரையின் முதுகில் ஏற்றிக் கட்டினார். பின் குதிரையைச் செலுத்த ஆரம்பித்தார்.

திகைத்துப் போனது குதிரை. அதனா஡ல் நடக்கவே முடியவில்லை. மெல்லமெல்லக் காலை எடுத்து வைத்தது. தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்தது. ஆத்திரம் கொண்ட வியாபாரியோ 'சுளீர்' என்று சாட்டையால் அதன் முதுகில் அடித்தார். வலி பொறுக்கமுடியாமல், கண்ணீருடனும் வேதனையுடனும் மெதுவாக நடக்க ஆரம்பித்தது குதிரை.

பார்த்தீர்களா, குழந்தைகளே! சற்று முன்பு கழுதையைக் கிண்டல் பண்ணியது குதிரை. ஆனால் தற்பொழுதோ அந்தக் கழுதையையும் சேர்த்துச் சுமக்கும்படி ஆகி விட்டது. வாழ்க்கையும் இப்படித்தான். நாம் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்காக, வீண் பெருமை கொள்வதோ, எளியவர்களைக் கிண்டல் செய்வதோ கூடவே கூடாது. பணிவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இது!

வரட்டுமா செல்லங்களா! அடுத்த மாதம் புதிய கதையோடு வருகிறேன்!

சுப்புத் தாத்தா

'தலைப்பு கொடுங்கள்' போட்டி

குழந்தைகளே!

ஒவ்வொரு வாரமும் புதுப்புதுக் கதையோடு சுப்புத் தாத்தா வருகிறார். நீங்களும் அதை ரசிக்கிறீர்கள்.

இந்த வாரக் கதைக்குத் தலைப்புக் கொடுக்கவில்லை. ஏன் தெரியுமா?

அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் தலைப்பு சுவையாகவும், கற்பனை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். சிறந்த தலைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

நீங்கள் கொடுத்த தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டால் உங்களுக்கு ஒரு அழகான் சான்றிதழ் அனுப்புவோம். அதுமட்டுமல்ல, உங்கள் பகுதியில் இருக்கும் தமிழ் பள்ளிக்கு $10 அன்பளிப்பாக அனுப்புவோம்.

அனுப்ப வேண்டிய முகவரி: thendral@tamilonline.com மின்னஞ்சலின் subject பகுதியில் 'Ilam thendral story caption contest' என்று குறிப்பிட மறக்காதீர்கள்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

© TamilOnline.com