சிகாகோவில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா
அக்டோபர் 30, 2004 அன்று சிகாகோ, லெமாண்ட் கோயிலில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா நடைபெற்றது. விநாயக கவுத்துவம், கோலாட்டம் என்று அழகாக ஆரம்பித்த நிகழ்ச்சி ராமாயணத்தில் ராமனும் அனுமானும் பங்குபெறும் நடனத்தில் விறுவிறுப்புக் கூடியது. அடுத்து வந்த 'கோவிந்தன் குழலோசை'யில் கண்ணனின் புல்லாங்குழலுக்கு மயங்கியது பறவைகளும், கால்நடைகளும் மட்டுமல்ல காண வந்திருந்த ரசிகர்களும்தான். அடுத்து ஆடிய மீரா பஜன், 'ரிம்ஜிம்' பார்த்தவர்கள் கண்களுக்கு விருந்து.

குரு வனிதா வீரவள்ளி ஆடிய ஜாவளி சிருங்கார ரசத்தை நேர்த்தியாக வெளிப் படுத்தியது. தெலுங்குப் பாடல் 'நீ மாட்ல மாயனூரா'வுக்கு நவரசத்தையும் கொண்டு வந்து அமர்க்களப்படுத்தி விட்டார். உடையலங்காரமும், நடன அசைவுகளும், குழந்தைகளை அவர் இயக்கிய விதமும் சபாஷ் போட வைத்தன.

சென்னை கலா§க்ஷத்ராவின் மாணவியான வனிதா வீரவள்ளியின் உழைப்பு நிகழ்ச்சியில் நன்றாக வெளிப்பட்டது. மேலும் விபரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 630.922.3107.

ஜோலியட் ரகு

© TamilOnline.com