தமிழர்களின் மூடநம்பிக்கை
தமிழர்கள் பலவழிகளில் மூடநம்பிக்கைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். அதிலே ஒன்றுதான் தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்குப் புரியாது என்ற நம்பிக்கை. இப்படி நம்பும்படி செய்துவிட்டார்கள்.

இந்த அடிமைத்தனத்தில் இருந்து தமிழ்ச் சமுதாயம் மீள வேண்டும். தமிழகக் கோயில்களில் திணிக்கப்பட்டதுதான் வடமொழி வழிபாடு. ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தைப் புகுத்தினாலும் கிறிஸ்தவ மத வழிபாட்டில் தமிழ்மொழிக்கு ஊக்கம் அளித்தனர். தேவாலயங்களிலும் தமிழ் வழிபாடுதான் நடக்கிறது.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாட்டை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டிய கடமை இந்து சமயத் தலைவர் களுக்கும், மடாதிபதிகளுக்கும் இருக்கிறது. தமிழ் அர்ச்சனைக்கு அவர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்.

டாக்டர் ராமதாஸ், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பத்திரிகையாளர்களிடம் பேசியது...

*****


கோடையில் ஓவியப்போட்டி நடத்தும் தேசியக் கலைக்கூடம், கலைத்திறனில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிய வேண்டும். அவர்கள் திறன் மேம்பட உதவவேண்டும். இணையத்தில் மின்கலைக்கூடம் அமைப்பதால் வீட்டிலிருந்தபடியே படைப்புகளைக் கண்டு மகிழ முடியும். இது தேசியக் கலைக்கூடம் சேகரித்துள்ள கலைப் பொருள்களைப் பாதுகாக்கவும் சீரமைக்கவும் உதவும்.

டாக்டர் அப்துல் கலாம், தேசியக் கலைக்கூடத்தின் பொன்விழாவைத் துவக்கி வைத்துப் பேசுகையில்...

*****


நான் இந்த விழாவுக்கு வரலாமா என்று யோசித்தேன். இருந்தாலும் வந்திருக்கிறேன். காரணம் என் திரையுலகம் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இது. இதுவரை என் மீது அரசியல் சாயம் பூசப்படவில்லை. இனியும் பூசப்படாது என நம்புகிறேன்.

வீரப்பனைக் கொன்றதற்காக ஒரு தமிழனாக நான் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது நியாயமான வெற்றி. திருட்டு விசிடி விற்றவர்கள் கூட இந்த விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அதுதான் முதல்வரின் வெற்றி.

சிறிது காலமாக நான் பார்க்கிறேன் முதல்வர் அரசை நடத்தும் விதம், பேட்டி தரும் விதம் எல்லாம் பார்க்கும்போது நல்ல தலைவருக்கான அடையாளங்கள் தெரிகின்றன. உங்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்பதில் எனக்கு எந்தவித சங்கோஜமும் இல்லை. சந்தோஷம்தான்.

கமல்ஹாசன், முதல்வர் ஜெயலலிதாவுக்குத் திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில்...

*****


இந்தியாவின் ஒருபுறம் நவீனமாகவும் போட்டிகள் நிறைந்ததாகவும் வளமானதாகவும் இருக்க மற்றொருபுறம் தேக்கமடைந்தும் பிற்போக்காகவும் இருக்க அனுமதிக்க முடியாது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளை ஒருங்கிணைக்க வேண்டும். பஞ்சாயத்துகள் மூலம் கீழ்மட்டம் வரை ஜனநாயகம் ஏற்பட உதவ வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். கோழி, மீன், கால்நடை வளர்ப்பது, கைத்தறி ஆகியவற்றில் நிறைய வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.

கிராமங்களில் வர்த்தக மையங்களைத் தொடங்கத் தேவையான விவரங்களைப் பஞ்சாயத்துகளிடம் இருந்து பெறலாம். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வளங்களைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களின் தேவைகளை ஆராய்ந்து வர்த்தக மையங்களை அமைக்கத் தனியார் துறையினர் முன்வர வேண்டும்.

டாக்டர் மன்மோகன்சிங், பஞ்சாயத்து ராஜ் பற்றிய கருத்தரங்கில் பேசியது...

*****


அதிகமாகப் பேசுவோர் பெண்கள் என்று குறிப்பிட்டாலும், எங்கே தனது திறமையைக் காட்டுவதற்குப் பேச வேண்டுமோ அங்கே பேசுவதில்லை. தமிழகத்தில் அதிகமான பெண்கள் பட்டம் பயில்கின்றனர். தொழிற் கல்வியிலும் கணிசமானோர் சேருகின்றனர். எனினும், தலைமைப் பொறுப்புகளுக்குப் பெண்கள் வருவதில்லை. வீட்டு வேலை களையும் பெண்கள் ஏற்பதால், இரட்டைச் சுமை, அதே சமயம் படித்த பெண்கள் சமூகத்துக்குப் பங்களிப்பதால், அவர்களது சுமைகளுக்கு சமூகம் ஈடு செய்ய வேண்டும்.

தலைமைப் பண்பு பிறப்பில் ஏற்படுவதல்ல. உருவாக்கப்படுகிறது. அத்தகைய பண்புகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எனத் தனித்தனியாக இருப்பதில்லை. பல தகுதிகளையும் பண்புகளையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனந்தவல்லி மகாதேவன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், ஆற்றிய உரையிலிருந்து...

*****


காஞ்சி ஆச்சார்யரின் கைதுபற்றி அறியத் துயரமாக இருக்கிறது. ஒரு கனவுபோலத் தோன்றுகிறது. அது கனவாகவே ஆகிவிடவும் கூடும். ஆதிசங்கரரிலிருந்து துவங்கி வேதங் களாகிய பொக்கிஷத்தைத் தூய்மை கெடாமல் பற்பல பரம்பரைகளாக அவற்றை நடத்தி வந்திருக்கின்றனர் இந்த முனிவர்கள். இந்தச் சங்கிலியின் ஒரு வளையமும் வலுவிழக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது பாலில் உப்புச் சேர்த்ததுபோல ஆகிவிடும்.

ஹிந்து சமுதாயத்துக்குள் கருத்து வேற்று மைகள் இருக்கலாம். ஆதி சங்கரர் மற்றும் வேதங்களின் மகத்தான பாரம்பரியத்தின் பெயரால் அந்த வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு முன்செல்ல வேண்டும். இல்லை யென்றால் இந்தப் பிரிவினை வலுப்பெற்று இன்னும் அதிகத் துன்பங்களைத் தரும்.

மாதா அம்ருதானந்த மயி, அமெரிக்காவில் சான் ரமோனிலிருந்து ஒரு அறிக்கையில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com