தென்றல் ஸ்பெஷல் - பாதாம் கலந்த பழ கேக்
இது டிசம்பர் மாதம். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். தென்றலின் பிறந்த நாளும் இப்போதுதான். வாருங்கள், இந்தத் தருணத்தில் அனைவரும் கேக் செய்து உண்டு மகிழ்வோம்.

கேக் என்றாலே கலோரி அதிகம் கொண்டது. நாவிற்கு ருசியாக இருந்தாலும் இதை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பொதுவாகவே மைதாமாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.

முதலில் தென்றல் பிறந்த நாளுக்காக பாதாம் பருப்பு கலந்த பழ கேக் செய்வோம். இதில் கொழுப்புச் சத்து, சர்க்கரை, மைதாமாவு போன்றவை குறைவாகவும், நன்மை தரக்கூடிய பாதாம், முட்டையின் வெள்ளைக்கரு, பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவை உபயோகிக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
மைதாமாவு - 1/4 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய் (extra virgin) - 3 மேசைக்கரண்டி
முட்டை - 1
முட்டை வெள்ளைக்கரு - மூன்று முட்டைகளிலிருந்து எடுத்தது ஆரஞ்சுத்தோல் (துருவியது) - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைத்தோல் (துருவியது) - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 கிண்ணம்
பேக்கிங் பவுடர் (Baking Powder) - 1 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
பேரீச்சை, ஏப்ரிகாட், கறுப்பு திராட்சை பழக்கலவை (கொட்டை நீக்கிப் பதமாக உலர்த்தியது) - 1 கிண்ணம்
கருக்கிய சர்க்கரைத் தண்ணீர் - 2 தேக்கரண்டி
மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை

மசாலாத்தூள் செய்ய:

ஜாதிக்காய் சிறிய துண்டு, சோம்பு -1 தேக்கரண்டி
லவங்கப்பட்டை - 1/2
நீளம் இவை மூன்றையும் சிறிய மிக்ஸிப் பாத்திரத் தில் தண்ணீர் விடாமல் பொடி செய்து கொள்ளவும்.

கேக் செய்ய:

பாதாம் பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நன்றாக மாவாக்கிக் கொள்ளவும். அதிகம் அரைத்தால் மிக்ஸி யின் சூட்டில் வெண்ணெய் மாதிரி ஆகி விடும். கவனம் தேவை. 2 தேக்கரண்டி சர்க்கரையை ஓர் அடிபிடிக்காத வாணலியில் (nonstick pan) போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைக்கவும் அடிக்கடி மரக்கரண்டியால் கிளறி விடவும். சர்க்கரை உருகி வெண்மையிலிருந்து முதலில் தேன்மஞ்சள் (Ambor) நிறமாக மாறும். பின்னர் தேன் பழுப்பு நிறமாகி, கடைசியில் கருப்பு நிறம் வரும். அப்போது 2 தேக்கரண்டித் தண்ணீர் (முகத்தை தள்ளிவைத்துக் கொண்டு) விடவும். அதிகப் புகை வரும். கவலை வேண்டாம். ஆனால் புகைச்சிமினி சத்தம் போடாதபடி கவனித்துக் கொள்ளவும்! புகையை வெளியேற்றும் exhaust விசிறியைப் பயன்படுத்தவும். பிறகு தண்ணீருடன் சேர்ந்து கொதித்துக் கருப்புநிறக் கலவையாகி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் Caramalised sugar என்று சொல்லுவர்.

மூன்று முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் சிறிதுகூட ஈரம் இல்லாத (இது மிகவும் முக்கியம்) ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து முட்டை யடிப்பானால் (Egg beater) நன்கு கடையவும். நன்றாக வெண்மையாக நுரைத்துப் பந்துபோலப் பதம் வரும்வரை கடையவும்.

அவனை (oven) 325 டிகிரி ·பாரன்ஹீட் டிற்குச் சூடேற்றவும்.

மைதா மாவை பேக்கிங் பவுடர், சமையல் சோடா, மசாலாத் தூள் சேர்த்து இருமுறை சலித்துக் கொண்டு பாதாம் பருப்பு மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கால் கிண்ணம் சர்க்கரையைப் பொடியாக்கி, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, இதில் ஆலிவ் எண்ணையை விட்டுக் குழைத்துக் கொள்ளவும். ஒரு முட்டையை உடைத்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் கருக்கிய சர்க்கரைத் தண்ணீரை இதில் சேர்க்கவும். இதிலே பழக்கலவை, ஆரஞ்சு, எலுமிச்சைத் தோல் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

மைதாமாவு, பாதாம் பருப்பு மாவு கலவை யையும் சிறிது சிறிதாகப் போட்டுக் கலக்கவும். கடைசியாகத் தேனையும், கடைந்த முட்டையின் வெள்ளைக்கருவையும் கலந்து அவனில் (bake) அவிக்கவும்.

கேக் பதம் வந்தவுடன் வெளியில் எடுத்து வைத்து, ஆறிய பின்னர் சாப்பிடலாம்.

கேக் பதம் என்பது கேக்கின் நடு பாகத்தில் ஒரு மெல்லிய குச்சியை நுழைத்து எடுத்தால், கேக்மாவு அதில் ஒட்டிக்கொள்ளக் கூடாது. கேக்கை அவனின் நடுப் பாகத்தில் வேகவைத்தால் கேக் சீராக வேகும். எந்த கேக் செய்யும் போதும் அதைச் செய்ய உபயோகிக்கும் எல்லா மூலப்பொருட்களும் சாதாரண உஷ்ண நிலையில் (room temperature) இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம்.

கேக் செய்த மறுநாளன்றுதான் அதிகச் சுவையுடன் இருக்கும்.

இதையே மைதா மாவு கொண்டும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

மைதாமாவு - 2 கிண்ணம்
வெண்ணெய் - 3/4 கிண்ணம்
முட்டை - 3

பாதாம் மாவு, ஆலிவ் எண்ணெய், முட்டையின் வெள்ளைக் கருவு ஆகியவற்றுக்கு பதில் இவற்றை உபயோகித்து மேற்சொன்ன செய்முறை போலவே செய்யவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com