பிப்ரவரி 2005: வாசகர் கடிதம்
கலி·போர்னியாவில் உள்ள ·ப்ரீமாண்டுக்கு என் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கணவர் வரவில்லை. என் மாப்பிள்ளையின் நண்பர் வீட்டில் 'தென்றல்' பத்திரிகையை பார்த்தேன். கடந்த ஜூன் மாத இதழிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மாதமும் தென்றலைப் படிக்கத் தவறுவது இல்லை.

தென்றலில் வரும் எல்லா பகுதிகளையும் படிக்க ஆர்வமாக இருக்கிறது. இந்தியா சென்ற பிறகும் 'தென்றல்' மாத இதழைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.

பாமா வரதராஜன்

*******


தாங்கள் பிரசுரித்து வரும் 'தென்றல்' பத்திரிகை ரொம்பத் தரமாக உள்ளது. கதை, கட்டுரை, சமையல், இசை நிகழ்ச்சிகள், கணினி, பிரபல எழுத்தாளர்கள், பயணக் கட்டுரைகள் இவற்றைக் கொண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களின் இல்லங்களிலும் புகுந்து தென்றலாகத் தவழ்ந்து வருகிறது. தமிழ்மொழியை அறியாதவர்களுக்கும் எழுதப் படிக்கவும் கற்றுக் கொடுப்பது ஒரு சிறப்பான அம்சம்.

ஜனவரி மாத இதழில் வந்தது இசைப்பேரரசி ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் மறைவுக்கு உண்மையான அஞ்சலி.

சுசீலா ஸ்ரீநிவாசன்

*******


தென்றல் ஜனவரி 2005 இதழில் 'புழக்கடைப் பக்கம்', 'கறுப்பு ஞாயிறு' கண்டேன். டிசம்பர் 25, 26ல் பௌர்ணமி. பூரண சந்திரனைக் கண்டால் கடல் கொந்தளிக்கும், ஆர்ப்பரிக்கும். இது முன்னோர்கள் அறிந்த உண்மை. அன்று மீனவர்களும் கடலுக்கு மிக்க எச்சரிக்கையுடன் செல்வார்கள். தற்காலத்தில் கடற்கரையின் மிக அருகிலேயே வீடுகள், ஆலயங்கள், சிலைகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் பல தோன்றியுள்ளன. இதுதான் அழிவுக்குக்காரணம்.

வரலாறு கண்டிராத ஆழிப்பேரலை அழிவின் பொருட்டாக அதிகாரிகளையோ, மற்றவர்களையோ குற்றம் காண முடியாது.

டி.பி. மணி

© TamilOnline.com