வெளியே ஜெயேந்திரர், உள்ளே விஜயேந்திரர்!
காஞ்சி ஸ்ரீவரதராஜ கோயில் மேலாளர் கொலைவழக்கில் முதல் குற்றவாளி என ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இரவு ஆந்திரா விலுள்ள மெஹபூப் நகரில் தமிழகக் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து பல பரபரப்புச் சம்பவங்களையும், அதிர்ச்சி தரும் தகவல்களையும் பத்திரிகைகள் வெளியிட்டன.

ஜெயேந்திரர் மேல் இரண்டு வழக்குகள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டிருப்பதையடுத்து, ஜாமீன் கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. எனவே உச்சநீதி மன்றதை அணுகினார். உச்சநீதிமன்றத்தில் மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.சி. லகோட்டி, நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர் மற்றும் பி.பி. நவ்லோகர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தமிழகக் காவல்துறையினர் சேகரித்துள்ள ஆவணங்கள் தொடர்பான முழுமை யான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

ஜனவரி மாதம் 6ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''தன் மீது குற்றச் சாட்டுகளைக் கூறியதனால் சங்கரராமன் மீது ஜெயேந்திரர் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் என்பதற்கு எந்தச் சாட்சி யத்தையோ, ஆதாரத்தையோ தமிழகக் காவல்துறையினர் காட்டவில்லை'' என்று கூறி ஜெயேந்திரருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கினார். உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்தி ரருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்பதற்கான வலுவான காரணங்களைத் தமிழக அரசு தரத் தவறியதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான அதேநாள் மாலையில் காவல்துறையினர் விஜயேந்திரரைக் கைது செய்ததும் பலரின் புருவத்தை உயர்த்தியது. அதுவும் அன்று மாலை காவல்துறையினர் சங்கரமடத்திற்குள் அத்து மீறி நுழைந்து, விஜயேந்திரரைக் கைது செய்து கொண்டு சென்றது சங்கர மட பக்தர்களிடையே பெரும் கோபத்தையும், பீதியையும் உருவாக்கியது. ஜெயேந்திரர் விடுதலையான அன்று நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிகளை உற்றுநோக்கும் போது அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று வலுவான சந்தேகம் எழுகிறது என்று பா.ஜ.க. வட்டாரமும், இந்து அமைப்புகளும் குரல் எழுப்பிபியுள்ளன.

விஜயேந்திரர் கைது நடவடிக்கைபற்றிப் பிரதமர் மன்மோகன்சிங் முன்கூட்டியே ஜெயலலிதாவைக் கடிதம் மூலமும், பின்னர் சென்னையில் தனிப்பட்ட முறையிலும் எச்சரித்ததாகக் கூறியுள்ளார். தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட் ராமன், வாஜ்பாய், எல்.கே. அத்வானி மற்றும் ஜஸ்வந்த்சிங் ஆகியோர் உடடினயாகப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தங்கள் கவலையையும், எதிர்ப்பையும் தெரிவித்தது மட்டுமல்லாமல் சட்டத்துக்குட்பட்டு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை காஞ்சி மடத்துக்கு ஜெயேந்திரர் செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டு, காஞ்சி மடத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கவைப்பதன் மூலம் மடத்தை அரசு கைப்பற்றுவதற்கான முயற்சிக்கிறதோ என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சங்கரமட சார்பான 183 வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து ஜெயேந்திரர் நீதிமன்றத்தை அணுகியதில் ஏதாவது இரண்டு வங்கிக் கணக்குகளைச் சங்கர மடம் உபயோகித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா விஜயேந்திரர் கைதுபற்றி விடுத்த அறிக்கையில் 'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்தக் கைதுகள் என்று கூறியிருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 26 பேர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். வருகிற வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது விவகாரத்தின் உண்மைக் காரணங்களும், உண்மை நிலைகளும் வழக்கு நீதிமன்றத் திற்கு வரும்போதுதான் வெளிச்சத்திற்குவரும்.


தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com