சுனாமி பேசுகிறேன்..
சுனாமி பேசுகிறேன் .....
மானிட சமூகமே!
நான் தான் சுனாமி
பேசுகிறேன்...

யாருக்கும் என் பெயர்
தெரியாமல்
முடங்கிக் கிடந்தேன்
இதுநாள் வரை.

இன்றோ உலகமுழுதும்
என் பெயர்!

மதம் - சாதிப் போர்வையில்
மசூதி - கோயில் - ஆலயங்கள்
இடிக்கப்பட்டன.

ஆண்டான் - அடிமை
போதையில் எளியவன்
சிதையுண்டு போனான்.

இறைவன்
மனிதனுக்கு ஆறறிவைக்
கொடுத்தான்.
மனிதனோ அகந்தையை
ஏழாம் அறிவாக
ஏற்றுக் கொண்டான்!

மதம் - மனிதனைப்
பண்படுத்த -
பாழ்படுத்த அல்ல!

சமூகமும் குடும்பங்களும்
ஒவ்வொருவரையும்
அறிந்து கொள்ள -
வாளால்
அரிந்துகொள்ளவல்ல!

உலகெங்கிலும்
ஆண்டவன் பெயரால்
வம்பிழுத்தீர்கள்

பொறுமையாய் இருக்கும்
இறைவனுக்கு
தண்டிக்கவும் உரிமையுண்டு!

இந்தப் பிரளயத்தில்
அப்பாவி சனங்களும்
ஏதுமறியாப் பிஞ்சுகளும்
பலியானதில்
எனக்கும் வேதனைதான்.

உலகில் யாவரும்
ஒன்றே! என
மனதில் இருத்தி
வாழ்வைத் தொடங்கினால்
என் போன்ற 'சுனாமி'களுக்கு
வேலை யில்லை!

'இன்றே கடைசி' என
எனக்கு விடை தாருங்கள்!

அதிரை அப்துல் லத்தீப்

© TamilOnline.com