ஐயாவாள் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயங்கள்!
ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பிரார்த்தித்த உடன் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்த கங்கை அவர் வீட்டுக் கிணற்றிலேயே (கூபம்) அடங்கிவிட்டது என்ற அதிசயம் சென்ற இதழில் குறிப்பிடப்பட்டது. இனி மேலும் சில வியக்கத்தக்க சம்பவங்களைப் பார்க்கலாம்.

ஒரு சமயம் மழை பெய்யத் தவறி நாடு நலங்குன்றி பயிர்களெல்லாம் வாடி மக்கள் தாங்கொணாத் துயர் அடைந்தபோது அது கண்டு வருந்திய ஐயாவாள் கர்க்கடேசுவரர் முன்போய் நின்றுகொண்டு பிரார்த்திக் கலானார். அப்போது அவர் பாடிய 'குலீராஷ்டம்' என்ற சுலோகத்தில் "உலகில் எத்தனை அநீதிகள் நிகழ்ந்தாலும் அவற்றைச் சரி செய்து முறையாக மழையைப் பெய் விக்கும் இறைவனே! கார்த்திகை மாதமாகிய இந்தக் கார்காலப் பருவத்தில் மழை பொழிவிக்கத் தாமதிக்கலாமா?" என்று வேண்ட, அன்றைய தினமே வானைப் பொத்துக் கொண்டு கன மழை பொழிந்தது. மக்கள் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

ஐயாவாள் அவர்கள் திருவிடைமருதூருக்குச் சென்று மகாலிங்கப் பெருமானைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருவியலூரிலிருந்து திருவிடை மருதூருக்குக் காவிரி ஆற்றைக் கடந்து போகவேண்டும். ஐயாவாள் பக்தியை உலகறியச்செய்ய எண்ணம் கொண்ட இறைவன் அன்று காவிரியில் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கை உண்டாக்கினார்.

செய்வதறியாது திகைத்து நின்ற ஐயாவாளுக்குப் பெருமான் தரிசனத்திற்குப் போகாமல் வீடு திரும்ப மனமில்லை. தனக்கேற்பட்ட சோதனைக்குத் தான் செய்த அபசாரம்தான் என்ன வென்று கேட்டு இறைவனை மனமுருகிப் பிரார்த்திக்க, அவர் எதிரே அவருக்குப் பரிச்சயமான கோயில் குருக்கள் ஒருவர் "வெள்ளத்தால் உங்கள் சிவதரிசனம் தடைப்படுமே என்று நானே விபூதிப் பிரசாதம் கொண்டு வந்தேன், இந்தாருங்கள்" என்று அவரிடம் கொடுத்துவிட்டுப் போனார்.

இதனால் மன ஆறுதல் அடைந்த ஐயாவாள் சிறிது நேரத்திற்குப் பிறகே தெளிவாக யோசிக்கலானார். கரைபுரண்டு ஓடும் காவிரியில் கட்டிய வஸ்திரம் ஈரமாகாமல் குருக்களால் மட்டும் எப்படி கரை தாண்டித் தன்னிடம் வர முடிந்தது! தனக்குள் இவ்வாறு கேட்டுக் கொண்ட ஐயாவாள் அடுத்த நாள் கோயிலுக்குச் சென்று அதே குருக்களைக் கண்டு இது பற்றிக் கேட்டார். அதற்குக் குருக்கள் தான் அவரை முந்தைய தினம் சந்திக்கவே இல்லை என்றும், காவிரியின் வெள்ளத்தால் ஆற்றைக் கடப்பது என்பது யாருக்கும் ஆகாத செயல் என்றும் அடித்துச் சொல்லி விட்டார். குருக்கள் உருவில் வந்தது வேறு யாருமல்ல; சாட்சாத் அந்த மகாலிங்கப் பெருமான்தான் என்பதை உணர்ந்து கொண்டார் ஐயாவாள். உடனே மனங் கசிந்து சிவபெருமானின் கருணையை வியந்து 'தயா சதகம்' என்ற ஸ்லோகத்தைப் பாடினார். கூடியிருந்த மக்களுக்கும் இவரது பக்தியின் ஆழம் புரிந்தது.

பொறாமை என்பது எல்லாக் காலத்திலும் மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறதைப் போல ஐயாவாளின் பிரதாபங்களைக் கண்டு அவ்வூரில் சில பண்டிதர்களுக்கும் ஏற்பட்டது. கோகுலாஷ்டமி உத்சவத்தை வெகு ஆடம்பரமாகச் செய்ய முனைந்த அவர்கள் ஐயாவாளையும் அதில் சேர்ந்து கொள்ளச் சொன்னபோது ஆடம்பரத்தை விரும்பாத அவர் அதில் சேர மறுத்து விட்டார். இதனால், மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்த கிருஷ்ணனுக்கு இவர் வீட்டு வாசலை அடைந்தபோது ஐயாவாள் காட்ட வந்த தீபாராதனையைத் தடுத்து விட்டார்கள் விழா நிர்வாகிகள். அப்போது ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் ஐயாவாள்.

ஊர்வலம் அடுத்த வீட்டை அடைந்த போதுதான் கண்ணாடியும் சட்டமும் தவிர கிருஷ்ணன் படம் ஊர்வலத்தில் இல்லை என்பதைக் கவனித்தார்கள். எப்படி மாயமாய் மறைந்தது என்று புரியாமல் மீண்டும் ஐயாவாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அந்தப் படம் அவர் பூஜையில் ஊஞ்சலில் அமர்ந்திருக்க அவர் டோலோத்ஸவம் நடத்திக் கொண்டிருந்தார் என்பது.

நீண்ட காலம் குழந்தப் பேறின்றி இருந்த ஒரு தம்பதிக்கு அருமையாக ஒரு குழந்தை பிறந்தது. பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி. குழந்தைக்கு ஜாதகம் கணித்த ஜோதிடர் அக்குழந்தைக்கு நல்ல ஆயுள் பலம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாகச் சின்ன வயதிலேயே மாந்தம் வந்து அது இறந்து விடுகிறது. ஜோதிடம் பொய்த்துப் போய் விட்டது கண்டு வருந்தினர் பெற்றோர். விடியற்காலையில் ஆற்றில் நீராடி விட்டுத் திரும்பிய ஐயாவாள் செய்தி கேட்டு, இறைவனிடம் மனம் உருகி 'தாராவளி' என்னும் ஸ்லோகம் சொல்லிப் பிரார்த்திக்க, குழந்தை மெள்ள மெள்ளக் கண் விழித்து எழுந்தது. தங்கள் முன் நிற்பவர் சாதாரண மானிடப் பிறவியல்ல; தெய்வமே மனித உருவில் வந்து தங்கள் குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறது என்று மனமுருகி அவரைப் போற்றி வணங்கினார்கள் அந்தப் பெற்றோர்.

இவ்வாறு தம்முடைய பக்தியினாலும், அடக்கத்தினாலும், எளிமையினாலும், கருணையினாலும் அற்புதங்கள் பல நிகழ்த்தியவர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் அவர்கள்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com