அருள்மிகு ஸ்ரீ அபயவரதீஸ்வர் திருக்கோவில், அதிராம்பட்டினம்
அருள்மிகு ஸ்ரீ அபயவரதீஸ்வர் திருக்கோவில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் உள்ளது. தல இறைவன்: அபய வரதீஸ்வரர். அம்பாள்: சுந்தர நாயகி. தல விருட்சம்: வில்வம், வன்னி. இத்தல அம்மன் சுந்தர நாயகி, கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.

தலவரலாறு
முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலா வரும் லோகங்களில் ஒன்று திருவாதிரை நட்சத்திர மண்டலம். இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சரணடைந்தவர்களை சிவன் அபயம் தந்து காப்பாற்றுவார். அதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர்.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது.

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென்றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா!


என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

எம பயம் போக்கும் தலம்:
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திரப் பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகளைச் செய்துள்ளார். அவரது பெயரால் இவ்வூர் அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.

பங்குனி உத்திரம் இத்தலத்தின் முக்கியமான திருவிழா. திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, ஆருத்திரா அபிஷேகம் போன்றவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே!


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com