கி.வா. ஜகந்நாதன் விடைகள்
கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர். அவற்றுக்கான பதில்களை 'இது பதில்' என்ற தலைப்பிலும், 'இதோ விடை' என்ற தலைப்பிலும் கலைமகள் இதழில் அவர் எழுதினார். அவற்றின் தொகுப்பு 'விடையவன் விடைகள்', 'விடைகள் ஆயிரம்', கி.வா.ஜ. பதில்கள்' என்ற நூல்களாக வெளியாகின. அவற்றிலிருந்து சில:

பகுதி – 1: இலக்கியம்
கேள்வி: "தமிழுக்கு முகம் இல்லை, வடமொழிக்கு வாய் இல்லை" என்கிறார்களே. இதன் பொருள் என்ன?
பதில்: முகம் என்பது வடசொல். தமிழில் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை. அதே மாதிரி வட மொழியில் வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை. முகம் என்பதும் வாக்கு என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழங்குமேயன்றி, இயல்பான சொல் அல்ல. தமிழில் மூஞ்சி என்ற சொல் உண்டு. அது இழித்துக் கூற உதவுவது.

கேள்வி: அநுமப் புராணத்தைப் பாடியவர் யார்?
பதில்: பண்டித. வித்துவான் திரு நா. கனகராசையர். இருபத்து நாலாயிரம் பாடல்களால் அநுமனுடைய வரலாற்றைப் பாடியிருக்கிறார். அது இன்னும் அச்சாகவில்லை. (கி.வா.ஜ. காலத்தில் அந்த நூல் வெளியாகவில்லை. பிற்காலத்தில், சென்னைப் பல்கலையில் அந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வேடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது).

கேள்வி: ஆடியானனன் என்றது யாரை? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?
பதில்: குருடனைக் குறிப்பது அது. திருதராஷ்டிரனைப் பாரதம் ஆடியானனன் என்று கூறும். ஆடி = கண்ணாடி. கண்ணாடியை யாவரும் பார்ப்பார்களேயன்றி, அது யாரையும் பாராது. அது போலப் பிறர் தம் முகத்தைப் பார்ப்பதே அல்லாமல் அம்முகம் பிறரைப் பார்க்க இயலாமையால் அப்பெயர் வந்தது.

கேள்வி: பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு அந்தப் பெயர் இயற்பெயரா? காரணப் பெயரானால் அதற்குக் காரணம் என்ன? இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லையா?
பதில்: சேக்கிழார் என்பது குலத்தின் பெயர். அவருடைய இயற்பெயர் இராமதேவர் என்பது கல்வெட்டினால் தெரிகிறது.

கேள்வி: "வங்கக் கடல் கடைந்த மாதவனை" என்று ஆண்டாள் பாடியது வங்காளக் குடாக் கடலைக் குறிப்பதா?
பதில்: வங்கம் என்பது கப்பலைக் குறிக்கும் சொல். கப்பல் ஓடும் கடல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

கேள்வி: பேட்டி என்பது செந்தமிழ்ச் சொல்லா?
பதில்: அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

கேள்வி: முற்றிலும் என்ற சொல் தவறா? ஏன்?
பதில்: முற்றும் என்பதுதான் சரியான சொல். சுற்றிலும் என்பதைப் போல இருப்பதால் முற்றிலும் என்று தவறாக எழுதும் வழக்கம் வந்துவிட்டது.

கேள்வி: 'மெனக்கெட்டு' என்று நாம் அடிக்கடிப்[ பேசுகிறோமே? அது எப்படி வந்தது?
பதில்: 'வினை கெட்டு' என்பதே அப்படித் திரிந்தது.

கேள்வி: 'லாயக்கு' என்பது தமிழா, அல்லது வேறு மொழியா? அதன் பொருள் என்ன?
பதில்: தக்கது என்னும் பொருளில் வழங்கும் அந்தச் சொல் உருதுவிலிருந்து வந்தது.

கேள்வி: 'வகையறா' என்ற சொல் வகை என்பதிலிருந்து பிறந்ததா?
பதில்: முதலியவை என்ற பொருளை உடைய உருதுச் சொல் அது.

கேள்வி: கோவைகளில் ராஜாக் கோவை, மந்திரிக் கோவை என்று இரண்டு இருக்கின்றனவாமே; அவற்றை இயற்றியவர் யார்?
பதில்: மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரை ராஜாக் கோவை என்றும், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருவெங்கைக் கோவையை மந்திரிக் கோவை என்றும் புலவர் கூறுவர்.

கேள்வி: முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியனுடைய பெயரில் குடுமி என்பது எதைக் குறிக்கிறது?
பதில்: மதிலின் உறுப்புக்குக் குடுமி என்று பெயர். அந்தப் பாண்டியனுடைய மதிலும் அதில் உள்ள உறுப்புக்களும் பகைவர்களால் சிதைவு படாமல் பலகாலமாக இருத்தலினால் 'முதுகுடுமி' என்ற பெயர் வந்தது. பகைவர்களால் எதிர்ப்பதற்கரியவன் என்று அவன் வீரச் சிறப்பைக் குறிப்பால் அந்த அடை புலப்படுத்துகிறது.

கேள்வி: ஓரம் போகியார் என்ற புலவர் எப்போதும் சாலை ஓரத்திலேயே நடப்பவரா? அவருக்கு என் அந்தப் பெயர் வந்தது?
பதில்: ஓரம் என்பது பட்சபாதத்தைக் குறிக்கும். போகியார் = நீங்கியவர். பட்சபாதமின்றி நடுநிலையில் நிற்பவர் என்பது அந்தப் பெயருக்குப் பொருள்.

கேள்வி: செய்யுள் வகையில் யமகம், மடக்கு இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தவையா? பிள்ளைப் பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியைப் போல் யமகச் செய்யுட்கள் வேறு யாராவது இயற்றியுள்ளார்களா?
பதில்: யமகம் என்பது ஒரு சொல்லோ தொடரோ மீண்டும் வெவ்வேறு பொருளில் வருவது. அது வடசொல். மடக்கு என்பது யமகம் என்பதற்குரிய தமிழ்ச் சொல். இப்போது யமகம் என்பது ஒரு பாட்டில் ஒவ்வோரடியிலும் சொல்லோ தொடரோ வெவ்வேறு பொருள் தருவதாக அமைவதையே குறிக்க வழங்குகிறது. ஒரடிக்குள்ளே அவ்வாறு வருவதை மடக்கு என்று சொல்கிறோம். தமிழில் பல யமக அந்தாதிகள் உண்டு. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருத்தில்லை யமக அந்தாதி போல்வன பல.

கேள்வி: 'ஓதிய ஐந்து ஓங்காரம்' என்று கந்தர் கலிவெண்பாவில் வருகிறது. ஐந்து ஓங்காரம் என்பவை எவை?
பதில்: பிரணவமாகிய ஓங்காரத்தின் உறுப்புக்கள் ஐந்தையும் எண்ணிச் சொன்னது அது. அகாரம், உகாரம், மகாரம், நாதம், விந்து என்பவை அவை. நாதம் என்பது இணைந்த ஒலியையும் விந்து என்பது நிறைவையும் குறிக்கும்.

பகுதி – 2: சமயம்
கேள்வி: பிள்ளையார், மூத்த பிள்ளையார் - இருவரும் ஒருவரா, இருவரா?
பதில்: பழங்காலத்தில் பிள்ளையார் என்று முருகனையும், மூத்த பிள்ளையார் என்று விநாயகரையும் வழங்கினார்கள். இப்போது விநாயகரையே பிள்ளையார் என்று வழங்குகிறார்கள்.

கேள்வி: முருகன் ஏறும் மயிலாகச் சூரபன்மன் ஆனான் என்று சொல்கிறார்களே; அப்படியானால் முன்பு முருகனுக்கு வாகனம் இல்லையா?
பதில்: முருகனுக்குப் பிரணவமே மயிலாக இருப்பது. அப்பால் சூரனுடன் போர் புரியும்போது இந்திரன் மயிலாக வந்து தாங்கினான். பிறகே சூரன் மயில் ஆக, அதை முருகன் வாகனமாகக் கொண்டான்.

கேள்வி: திருநீலகண்ட நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ஆகிய இருவரும் ஒருவரா?
பதில்: இருவரும் வேறு. திருநீலகண்ட நாயனார் குலால வம்சத்தைச் சேர்ந்தவர்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்.

கேள்வி: ஒற்றைக்கால் உடைய தெய்வம் ஏதேனும் உண்டா?
பதில்: சிவபெருமானுடைய மூர்த்திகளுள் ஏகபாத மூர்த்தி என்பது ஒன்று. இருமருங்கும் திருமாலும் பிரமனும் கிளைத்தவர் போல் இருக்க, நடுவே சிவபெருமான நிற்கும் கோலத்தில் உள்ள மூர்த்தி அது.

கேள்வி: திருச்சூர் என்று கேரளத்தில் உள்ள ஊரைச் சிவத்தலம் என்கிறார்கள். அதன் இயற்பெர் என்ன?
பதில்: 'திரிச்சிவப் பேரூர் என்பது' அதன் இயற்பெயர். அங்குள்ள திருக்கோயிலுக்கு வடக்கு நாதன் கோயில் என்று பெயர்.

கேள்வி: அக்கமணி என்று ருத்திராட்சத்தைக் கூறுவதற்குக் காரணம் என்ன?
பதில்: அட்சமணி என்பதே அக்கமணி ஆயிற்று. சிவபெருமானுடைய கண்ணிலிருந்து துளித்த நீர் ருத்திராட்சமாயிற்று. அட்சம் = கண். ருத்திரனது கண்ணிலிருந்து தோன்றியதாதலின் ருத்திராட்சம் எனப் பெயர் பெற்றது. அதையே அட்சமணி என்பர்.

கேள்வி: "ஓரேழு படைவீடு கொண்டாய்" என்று ஊற்றுக்காடு வேங்கடசுப்பையர் பாடிய பாட்டு ஒன்றில் வருகிறது. ஆறுபடை வீடுகள் என்று தானே உண்டு? ஏழாவது படைவீடு எது?
பதில்: ஆறுபடை வீடுகள் என்பதுதான் வழக்கு. தம் நெஞ்சை ஏழாவது படைவீடாக வைத்து அந்தக் கீர்த்தனத்தில் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: பால்வரை தெய்வம் என்பது யாரைக் குறிக்கிறது? அத்தொடரின் சொற்பொருள் என்ன?
பதில்: பால் என்பது நல்வினை தீவினைகளாகிய ஊழைக் குறிக்கும். ஒருவருடைய புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை வரையறுத்து ஊட்டும் கடவுள் என்பது சொற்பொருள்.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" என்ற திருக்குறளில் வகை என்பது பால் அல்லது ஊழ். வகுத்தல் என்பது வரைதல் அல்லது வரையறை செய்து ஊட்டுதல். வகுத்தான் என்றது பால்வரை தெய்வத்தை. கடவுளையே அப்படிச் சொன்னார் தொல்காப்பியர். "பால்வரை தெய்வம் வினையே பூதம்" என்று சொல்லதிகாரத்தில் வருகிறது.

கேள்வி: அக்கினிக்கு எழுநா என்ற பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?
பதில்: அக்கினிக்கு ஏழுநாக்கு அல்லது ஏழு ஜ்வாலைகள் உண்டென்று சொல்வார்கள். அதனால் 'எழு நா' என்று பெயர் வந்தது. ஏழு நாக்கை உடையது என்று அன்மொழித் தொகையாகக் கொள்ளவேண்டும். ஏழு ஜ்வாலைகளாவன: காளி, கராளி, தூம்ரா, லோஹிதா, மனோஜவா, ஸ்புலிங்கினீ, விச்வரூபா என்பவை. 'ஸப்தஜிஹ்வா' என்று வடமொழியில் கூறுவர்.

கேள்வி: 'சைலாதி மரபுடையோன்' என்பது யாரைக் குறிக்கும்?
பதில்: சலாதருடைய புதல்வராதலின் நந்தியெம்பெருமானுக்குச் சைலாதி என்று பெயர். அவருடைய மரபில் வந்தவர்கள் சைவசித்தாந்த மடங்களின் தலைவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமூர்த்தியாகிய நமசிவாயமூர்த்தியை, 'குரு நமசிவாய தேவன், சயிலாதி மரபுடையோன்' என்று ஒரு பாடல் குறிக்கிறது.

கேள்வி திருவாரூர் தியாகராஜ சுவாமியின் அஜபா நடனம் என்பது யாது?
பதில்: தியாகராஜப் பெருமான் திருமாலின் திருமார்பில் இருந்தார். சயனித்திருந்த திருமால் உச்சுவாச நிச்சுவாசத்தோடு அஜபா மந்திரத்தை ஐபித்தார். அதனால் அவர் மார்பு வீங்கித் தணிந்தது. அவர் மார்பிலிருந்த தியாகேசர் அந்த அசைவில் ஆடினார். அந்த ஆட்டமே அஜபா நடனமாகும். வாயால் உச்சரிக்காமல் உச்சுவாச நிச்சுவாசத்தோடு மனனம் பண்ணுவதால் அதற்கு அஜபா மந்திரம் என்று பெயர்; ஹம்ஸ மந்திரம் என்றும் பெயர் பெறும். அதனால் தியாகேசர் நடனத்துக்கு 'ஹம்ஸ நடனம்' என்றும் பெயருண்டு. திருமாலின் திருமார்பில் இருந்தபடியே ஆடியதனால் அவருக்கு 'இருந்தாடழகர்' என்ற பெயர் வந்தது.

கேள்வி: ஒன்பது விதமான பக்திகள் எவை?
பதில்: இறைவன் திருநாமத்தையும் புகழையும் காதால் கேட்டல் (சிரவணம்), அவன் புகழைப் பாடுதல் (கீர்த்தனம்), அவனைத் தியானித்தல் (ஸ்மரணம்), திருவடித்தொண்டு புரிதல் (பாதஸேவனம்), அருச்சித்தல் (அர்ச்சனம்), வணங்குதல் (வந்தனம்), ஆளாதல் (தாஸ்யம்), ஒன்றுபடுதல் (ஸக்யம்), ஆத்மநிவேதனம் (ஆத்மாவை அர்ப்பணம் செய்தல்) என்பவை.

கேள்வி: ஒன்பது புனித தீர்த்தங்கள் எவை?
பதில்: கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவேரி, குமரி, பயோஷ்ணி (பாலாறு), ஸரயு என்பவை.

கேள்வி: சிவபெருமானுக்குப் 'பிள்ளைத் தமிழ்' இல்லை என்கிறார்களே. அது உண்மையா? ஏன்?
பதில்: ஆம். 'பிறவா யாக்கைப் பெரியோன்' ஆதலின் அவன் குழந்தையாக இருந்ததில்லை. அதனால் பிள்ளைத் தமிழ் பாடுவது மரபன்று.

கேள்வி: பதினெண் வகைச் சிவகணங்கள் என்பவை யாவை?
பதில்: பதினெண் கணங்கள் என்று உண்டேவன்றிப் பதினெண் சிவகணங்கள் என்று இல்லை, 'ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்' என்று திருமுருகாற்றுப்படையிலும், 'பதினெண்கணனும் ஏத்தவும் படுமே' என்று புறநானூற்றிலும் அக்கணங்களைப்பற்றிய செய்தி வருகிறது. நச்சினார்க்கினியர் கூறும் . விளக்கம்: தேவர், அசுரர், துத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தர்வர், சித்தர், சாரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாயவாசிகள், போக பூமியோர்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com