பாலைவனச் சோலை (அத்தியாயம் - 12)
அருண் பள்ளிக்கூடம் போனதும் உடனடியாக அறிவியல் ஆசிரியை மிஸ். க்ளே அவர்களைப் பார்த்து பேசினான். தனக்கு உதவ முன்வந்ததற்கு அவருக்கு நன்றி சொன்னான். பின்னர் தனக்கு வந்த கடிதத்தைப் பற்றிச் சொன்னான். ஆசிரியைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

"வாவ், இது ரொம்ப அமர்க்களமா இருக்கு. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. எப்படிப்பா இந்த மாதிரி எல்லாம் ஆள் வைச்சிருக்கே? அப்பப்பா, யாருக்குமே எளிதா கிடைக்காத விஷயம் எல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கே!"

அருண் புன்னகைத்தான். ஆசிரியை அவனைச் செல்லமாக முதுகில் தட்டினார்.

"அருண், இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தப்புறம் நம்ம வகுப்புல இதைப்பத்திப் பேசறயா? எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். அது மட்டுமில்லாம உன்னை மாதிரி நாலு பசங்க இந்த மாதிரி பெரிசா ஏதாவது பண்ணுவாங்க எதிர் காலத்துல."

மணி அடித்தது. அருண் தன் வகுப்புக்குப் போனான்.

அன்றைய தினம் மிகவும் மெதுவாகப் போன மாதிரி இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் ஜட்ஜ் அய்யா அவர்களைப் பார்த்து, அந்தப் பாலைவனக் குடியிருப்பு பற்றிச் சொல்லவேண்டும். அவர் உடனேயே வேண்டிய ஆவணங்களைத் தயார் செய்து, நடக்கப்போகும் மோசடியை நிறுத்த வேண்டும்.

மாலையில் பள்ளிக்கூட மணி அடித்ததுதான் தாமதம். அருண் அவசரஅவசரமாகப் பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போக ரெடி ஆனான். கார் நிற்கும் இடத்துக்குப் போகும் வழியில், அம்மா காத்திருந்தார். அவன் எதிர்பார்க்கவில்லை. வீட்டில் காத்துக்கொண்டு இருப்பார் என நினைத்திருந்தான்.

அம்மா பக்கத்தில் வயதானவர் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். அவன் பக்கத்தில் நெருங்க நெருங்க, அது ஜட்ஜ் ஐயா என்று தெரியவந்தது.

"அம்மா, ஜட்ஜ் ஐயா… எப்படி… இங்க… உங்ககூட?"

கீதா புன்னகைத்தார். அதற்க்குள் ஜட்ஜ் ஐயா பேச ஆரம்பித்தார். "அருண் குழந்தை, உங்க அம்மா இன்னிக்கு எனக்கு ஃபோன் பண்ணிப் பேசும்போதே, அடடா இந்தக் குழந்தைக்கு நம்ம ஊர்மேலே இவ்வளவு அக்கறையா அப்படின்ற எண்ணம்தான் எனக்கு வந்தது. அதான் நானே உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னேன்."

"ஜட்ஜ் ஐயா, வாங்க வீட்டுக்குப் போய் பேசலாம்," கீதா அழைத்தார்.

ஜட்ஜ் தன் சட்டையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அருணிடம் கொடுத்தார்.

"அருண், எனக்கு நிறைய வேலை இருக்கப்பா. நாளைக்குக் காலைல முதல் காரியமா நம்ம ஊர் நகராட்சில ஒரு ஆட்சேபணை ஃபைல் பண்ணனும். அது மூலமா நம்ம நடக்க இருக்கிற சுரண்டலை மொத்தமா நிறுத்திடலாம். எனக்கு நேரம் இல்லைப்பா இப்ப. இன்னொரு நாளைக்கு நான் வரேன் உங்க வீட்டுக்கு. சரியா?"

அருண் ஜட்ஜ் ஐயா கொடுத்த காகிதத்தை வாங்கிப் பார்த்தான். அது ஏதோ ஒரு வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது. அருண் புரியாமல் பார்த்தான்.

"அருண், இதுதான் லீகல் நோட்டிஸ். அந்த கட்டடக் கம்பெனிகிட்ட எதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தீர்மானமா சொல்லப் போறோம். அதுக்கு அவங்க ஒத்துக்கலாம், ஒத்துக்காம இருக்கலாம். மொத்தமாவே இந்தத் திட்டமே வேண்டாம்னு அவங்க நிறுத்திடலாம்."

"ஐயா, திட்டம் மொத்தமா நின்னு போகுமா? அப்ப, அந்த ஏழைக் குடும்பங்களுக்கு வீடு இல்லாம போயிடுமே. அது பாவமில்லையா?" அருண் வருத்தத்தோடு கேட்டான். "என்னால, பல பேருக்கு வீடு இல்லாம போயிடுமா ஐயா?"

ஜட்ஜ் ஐயா அருணைக் கட்டிக் கொண்டார்.

"அந்த மாதிரி ஆகாம நான் பார்த்துக்கறேன். கவலைப்படாதே குழந்தை."

கீதாவைப் பார்த்துப் பெருமையுடன் பேசினார் ஜட்ஜ். "அம்மா கீதா, உன் மகன் ஒரு தெய்வக் குழந்தை. நம்ம ஊர் கொடுத்து வச்சிருக்கு. நான் கிளம்பறேன். அப்புறம், இதுல யாரெல்லாம் பணம் போட்டு இருக்காங்கன்னு பார்த்தேன். நம்ம டேவிட் ராப்ளேதான் அதிகப் பணம் போட்டிருக்காரு. அவருக்குத்தான் கல்லுல நார் உரிக்கிற சுபாவம் ஆச்சே. இப்ப நாங்க பண்ணப் போற ஆட்சேபணையைப் பார்த்து அவருக்குக் கோபம் வரலாம்."

அருணுக்கு திக் என்றது. கேட்டுக் கொண்டிருந்த கீதாவுக்கும்தான். டேவிட் ராப்ளே இதுல ஒரு பெரிய முதலீட்டாளரா? போச்சுடா! அவ்வளவுதான், தன் முதலீடு பாதிக்கப்படப் போவுதுன்னு தெரிஞ்சா எரிமலை ஆயிடுவாரு. அதுவுமில்லாமா, அருண் அதுல சம்பந்தப்பட்டு இருக்கான்னா இன்னும் கோபப்படுவாரு.

"கீதாம்மா, கவலைப்படாதே. நான் அருண் பெயர் வெளியே வராத மாதிரி பாத்துக்கறேன். எனக்குத் தெரியும் அவனுக்கும் டேவிட் ராப்ளேக்கும் ஏழாம் பொருத்தம்னு."

ஜட்ஜ் ஐயா கிளம்பிப் போனார்.

ஒரு நாள் போனது. ஒரு வாரம் ஆனது. அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. செய்தித் தாளில் திடீரென்று வீடு கட்டும் திட்டம் பற்றிய விளம்பரம் வருவது நின்று போனது. அருண் அந்தத் திட்டம் முழுவதுமே நின்றுவிட்டதோ என்று நினைத்தான். அவனுக்கு வருத்தமாக இருந்தது.

"அம்மா, என்னால அந்த வீடு கட்டுற திட்டம் நின்னு போச்சம்மா. நான் தப்புப் பண்ணிட்டேன் அம்மா."

கீதா ஒன்றுமே சொல்லவில்லை. அப்பா ரமேஷின் காதிலும் அது விழுந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து போனார்.

அருண் தனக்கு அந்த மர்ம மனிதரிடமிருந்து கடிதம் வருகிறதா என்று தினமும் எதிர்பார்த்தான். வரவில்லை. அருணுக்குப் பள்ளிக்கூடத்திலும் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.

சில தினங்கள் கழிந்தன. நகர செய்தித்தாளில் மீண்டும் குடியிருப்பு கட்டும் கம்பெனியின் விளம்பரம் வந்தது. அதில் வேறு பெயர் போட்டிருந்தது. ஒருவிதத்தில் மீண்டும் அந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று தெரியவந்தது. இருந்தாலும் மனதில் ஒருவிதமான சோகம் இருக்கத்தான் செய்தது.

ஃபோன் அடித்தது. அம்மா எடுத்தார். "நான் கீதாதான் பேசறேன். சொல்லுங்க ஜட்ஜ் ஐயா."

ஜட்ஜ் ஐயா என்று கேட்டதும் அருணுக்கு எதிர்பார்ப்பு உண்டானது.

"அப்படீங்களா ஐயா, ரொம்ப நல்லது. ஐயய்யோ… நான் ஒண்ணும் பண்ணலயே. எல்லாம் அவன் பண்ணினதுதான். சரிங்க ஐயா, அப்ப நான் ஃபோன வச்சிடட்டுமா?"

அருண் தன்னை ஆர்வமாகப் பார்ப்பதை கீதா உணர்ந்தார்.

"அம்மா, என்னாச்சு அம்மா?"

கீதா தன் இரு கைகளாலும் 'தம்ஸ் அப்' காட்டினார். அருணுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

"அம்மா, we did it" அருண் கூச்சலிட்டான்.

"இல்லை கண்ணா, இந்தத் தடவை, you did it! நீ மட்டுமே செய்தாய்!"

அருண் அம்மாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

(நிறைவடைந்தது)

ராஜேஷ்

© TamilOnline.com